வியாழன், 25 ஜூலை, 2019

ரூ.200 கோடி சொத்து: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைப் பின்னணி!

ரூ.200 கோடி சொத்து: முன்னாள் மேயர் கொலைப் பின்னணி!மின்னம்பலம் : திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவரின் கொலைப் பின்னணியில் கூலிப்படையினர் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நெல்லை மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி தனது கணவர் முருக சங்கருடன் ரெட்டியார்பட்டியிலுள்ள ஆசிரியர் காலணியில் வசித்துவந்தார். முருக சங்கர் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களது வீட்டிற்கு அருகிலேயே மகள் கார்த்திகா வசித்து வருகிறார். இவர் ஆரல் வாய்மொழியிலுள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிவந்துள்ளார்.
உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று காலை 7 மணிப் பதிப்பில் முன்னாள் மேயர் கொலை: நெல்லையில் பதற்றம்! என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

நேற்று மாலை ஸ்கூல் வேனில் வந்த ஒரு குழந்தை உமா மகேஸ்வரியின் வீட்டின் அருகே விளையாடும்போது, அவரது வீட்டில் ரத்தம் சிதறிக் கிடந்ததைப் பார்த்து, ‘உமா ஆண்டி வீட்டில் ஒரே ரத்தமா இருக்கு’ என்று ஓடிப்போய் அருகிலிருந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த பிறகுதான் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கர், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலைசெய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சோபாவில் அமர்ந்தபடியே உமா மகேஸ்வரியும், பெட்ரூமில் கணவர் முருக சங்கரும், சமையலறையில் மாரியம்மாளும் இறந்து கிடந்திருக்கிறார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், வீட்டில் சோதனை நடத்தினர். அதில் உமா மகேஸ்வரி அணிந்திருந்த வளையல், கம்மல் ஆகியவற்றை காணவில்லை. பீரோ முழுவதும் கலைந்துபோய் உள்ளது. வீடு முழுவதும் அலங்கோலமாக கிடந்துள்ளது. இதனையடுத்து, காவல்துறை ஆணையர் பாஸ்கருக்கு தகவல் அனுப்பினர். சம்பவ இடத்தை நேரில் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பாஸ்கரன், இது ஆதாயக் கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாம் அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் பேசினோம். “ உமா மகேஸ்வரியும், அவரது கணவரும் அமைதியானவர்கள். அனைவருடனும் பாசத்துடன் பழகக் கூடியவர்கள். யாரிடமும் பகை வைத்துக்கொண்டதில்லை. அவர்களது மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். அதுவே விபத்தா அல்லது கொலையா என்பது புரியாத புதிராக இருந்தது. உமா மகேஸ்வரி, முருக சங்கர் கொலைசெய்யப்பட்டதில் அவர்களது உறவுக்காரர்களுக்கு தொடர்பிருக்கலாம். வேறுயாராகவும் இருக்க வாய்ப்புகள் இல்லை. கொள்ளையடிப்பவர்கள் யாரும் இந்த கொலையை செய்யவில்லை. வேலைக்கார பெண் மாரியம்மாளுக்கு வீட்டிற்கு வந்தவர்களை முன்பே தெரிந்திருக்கும் என்பதால் அவரையும் கொலைசெய்துவிட்டார்கள்” என்று கூறினர்.
இந்த நிலையில் சென்னையிலிருந்து நெல்லை விரைந்த திமுக தலைவர் ஸ்டாலின், இன்று மாலை சுமார் 3 மணியளவில் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். அவரிடம் பேசிய ஒரு காவல்துறை அதிகாரி, “குற்றவாளியைப் பிடித்துவிடுவோம். அவரது உறவினர்களுக்கு கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக அருகிலிருந்த கடையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துவருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவில் உள்ள ஒரு அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டோம், “இது நிச்சயம் ஆதாயக் கொலை இல்லை. வெட்டு, குத்துக்களைப் பார்க்கும்போது திருநெல்வேலி கூலிப்படையினர் செய்தது போல்தான் உள்ளது. உமா மகேஸ்வரி உடம்பில் 18 இடத்தில் கத்தியால் குத்தியுள்ளனர். முருக சங்கருக்குக் குறைவான வெட்டுகளே விழுந்துள்ளது. கொலையாளிகள் வீட்டில் நீண்ட நேரமாக நடமாடியுள்ளது போல தெரிகிறது.
உமா மகேஸ்வரி குடும்பத்துக்கு சுமார் 200 கோடிக்குச் சொத்துகள் உள்ளது. நிலம் மட்டுமே சுமார் 50 ஏக்கர் இருக்கிறது. இவர்களுக்கு இருந்த ஆண் வாரிசும் விபத்தில் இறந்துவிட்டார். பெண்கள் மட்டும்தான். ஆகவே சொத்துகளைக் கேட்டு உறவினர்கள் பலமுறை மிரட்டியிருக்கிறார்கள். உமா மகேஸ்வரி, முருகசங்கரின் உறவினர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கிறார்கள். விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்துவிடுவோம்” என்று தெரிவித்தார். மேலும் பல கோணங்களிலும் விசாரணை நடந்துவருகிறது.
கொலைசெய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாளின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மூன்று பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த மாரியம்மாள், வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றிவந்துள்ளார்.. எட்டாவது, பத்தாவது, பணிரெண்டாவது படிக்கும் மூவரையும் மாரியம்மாள் வேலை செய்யும் ஒரு வீட்டார் படிக்க வைத்து வந்திருக்கிறார்கள். தற்போது அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதால் அவரது 3 பெண் குழந்தைகளும் நிர்கதியாய் தவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: