வெள்ளி, 26 ஜூலை, 2019

10% இட ஒதுக்கீடு எளிதில் கோர்ட்டால் தூக்கி எறியப்படும்... ஒரு பார்ப்பனரின் ஆதங்கம்

மோடி பிராமணர்களுக்கு வைத்த சைலன்ட் ஆப்பு:
விபி. சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிஷன் அமைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மிகவும் வலுவாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். அதனால் தான் பிராமணர்கள் எவ்வளவோ முயன்றும் இன்றுவரை அதை நீக்க முடியவில்லை.
ஆனால் மோடி தலைமையிலான பிஜேபி அரசு எவ்வித அடித்தளமும் இன்றி அவசர கோலத்தில் 10% என தேர்தல் இனாம் கொடுப்பது போல அள்ளி பறக்கவிடுகிறார். இதனால் என்ன பயன்? நீண்ட நாட்களாக இருந்த இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்ற கோஷம் நீர்த்து போகும். இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் எல்லாம் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை வரும். இட ஒதுக்கீடு அவசியமானதே என்ற எண்ணம் ஏற்படும்.
ஆனால் பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக் என்று உள்ள இந்த 10% இட ஒதுக்கீடு எளிதில் கோர்ட்டால் தூக்கி எறியப்படும். எந்த கணக்கும் ஆதாரமும் இல்லாமல் மனம் போன போக்கில் 10% என அள்ளி விசிறியது ஆபத்தாய் முடியும். ஒரே நொடியில் இச்சட்டம் செல்லாக் காசாய் ஆகும். அதிக பட்சம் ஆறு மாதமோ ஒரு வருடமோ இதை பிராமணர்கள் அனுபவித்தால் அதிகம். மேலும் தமிழகம் போன்ற 3% பிராமண மக்கள் உள்ள மாநிலத்திலும் 10% கொடுத்தால் மற்ற சமூகத்தவரின் கோபத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாக நேரிடும். இவ்வளவு நாள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நாம் செய்த அனைத்து வேலைகளும் நாசமாகப் போகும். ஆனால் இந்த இட ஒதுக்கீடும் நீக்கப்பட்டுவிடும்.

உண்மையிலேயே பிஜேபி அரசு பிராமணர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் நீக்கியிருக்க வேண்டும். அல்லது கணக்கெடுப்பு செய்து தெளிவாக அமல்படுத்தியிருக்க வேண்டும். இரண்டும் செய்யாமல் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பை மழுங்கடித்து இன்னும் ஐம்பது வருடம் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வைத்து விட்டது இந்த பிஜேபி அரசு.
நடப்பவை எதுவும் நன்மைக்கில்லை என்று மட்டும் புரிகிறது. ஏமாற்றப்படுகிறோமா, அதிகாரத்தில் இருக்கிறோமா என்றே தெரியாமல் ஒரு இனம் உள்ளது.
- ஸ்ரீவத்சன் ராகவன்

கருத்துகள் இல்லை: