செவ்வாய், 18 ஜூன், 2019

அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை:  உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்து, ‘பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோரின் லேட்டஸ்ட் அறிக்கைகளை ஒரு காபி அனுப்பியுள்ளேன் படித்துக் கொண்டே இருக்கவும். விரைவில் செய்தி வரும்” என்று ஒரு மெசேஜ் அனுப்பியது.
டாக்டர் ராமதாஸ் புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று அறிக்கை விடுத்திருக்கிறார்.
நேற்று அவர் விடுத்த அறிக்கையில், ‘தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும். ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்று கடிந்துகொண்டிருந்தார் ராமதாஸ்.

அதற்கு முன் அன்புமணி 16 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு பற்றி கடுமையான விமர்சனங்களை புள்ளி விவரங்கள் மூலம் வைத்துவிட்டு, ‘ நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசு, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு மனுவைத் தாக்கல் செய்து நீட் தேர்வை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இவற்றைப் படித்து முடிப்பதற்குள் அடுத்த வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.
“ கடந்த மூன்று நாட்களாக பாமகவிலிருந்து வெளியாகும் அறிக்கைகள் தமிழக அரசை லேசாகக் கடிந்துகொள்ளும் அளவுக்கு இருக்கின்றன. முக்கியப் பிரச்சினைகளில் தமிழக அரசு அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்ற தொனியில் வருகின்றன ராமதாஸின் அறிக்கைகள். பாமக வட்டாரத்தில் இதற்கான காரணம் பற்றி விசாரிக்கும்போதுதான் வர இருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் பாமகவுக்கான சீட் பற்றி டாக்டருக்கு சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதனால்தான் டாக்டரின் டோன் மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.
இரு வாரத்துக்கு முன்பு தேமுதிக நிர்வாகிகள் சிலர் பிரேமலதாவை சந்தித்து, ‘தேர்தல்லதான் நாம தோத்துட்டோம். அதனால அதிமுககிட்ட கேட்டு நம்ம கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா எம்பி சீட் வாங்குங்க’ என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் மனம் விட்டுப் பேசிய பிரேமலதா, ‘ராஜ்ய சபா சீ ட் தர்றோம்னு பகிரங்கமா கூட்டணி ஒப்பந்தம் போட்ட பாமகவுக்கே அவங்க ராஜ்ய சபா கொடுப்பாங்களானு தெரியலை. அதுவே சந்தேகமாகத்தான் இருக்கு. அதனால நாம கேக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார் பிரேமலதா.
இது ஒருபக்கம் என்றால் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தனக்கு எம்.பி. பதவி வேண்டும் என்பதற்காக அமித் ஷா மூலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் டெல்லியில் இருந்து பிடிமானமான பதில் எதுவும் வரவில்லையாம். இங்கே முதல்வரிடம் பேசிய வகையிலும் பாமகவுக்கு திருப்தி இல்லை என்கிறார்கள்.
மூன்று ராஜ்ய சபா எம்.பி.க்கள் அதிமுகவுக்கு உறுதியான நிலையில் அதில் ஒன்றை பாஜக கேட்கும் என்று தெரிகிறது. மீதமுள்ள இரண்டுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தன் அண்ணனுக்காக அமைச்சர் சண்முகம், அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன் என்று முதல்வரை நேரிலும் போனிலுமாக பலர் ராஜ்ய சபாவுக்காக படையெடுத்து வருகின்றனர்.
வட மாவட்ட அதிமுக நிர்வாகிகள் முதல்வரிடம், ‘பாமகவால நமக்கு பலன்னு சொன்னா அது அரூர், பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள்ல பெற்ற வெற்றிதான். ஆனா வட மாவட்டத்துல பூந்தமல்லி, திருப்போரூர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர்னு 5 தொகுதிகள்ல நாம திமுககிட்ட தோத்திருக்கோம். இதுல சில தொகுதிகள்ல பாமக பலமா இருக்கு. ஆனாலும் பாமக ஓட்டு நமக்கு முழுசா கிடைக்கல. 3 தொகுதில ஜெயிச்சதுக்கு பாமக முக்கிய காரணம்னு வச்சிக்கிட்டா கூட, அதுக்காக 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை உள்ளடக்கிய ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவியை பாமகவுக்கு கொடுக்கறது நியாயமா? தேர்தல்ல வெற்றி பெற்றால்தான் ஒப்பந்தத்துக்கு மதிப்பிருக்கும். இல்லேன்னா எப்படி கொடுக்கிறது’ என்று முதல்வரை நெருக்கி வருகிறார்கள். இந்த நெருக்கடியின் பின்னால் கே.பி.முனுசாமி போன்றவர்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில்தான் 3 ராஜ்ய சபா இடங்களில் ஒன்று பாஜகவுக்கு, இரண்டு அதிமுகவுக்கு என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் முதல்வர். இந்த முடிவு முறைப்படி பாமகவுக்கு இன்னும் தெரியப்படுத்தப் படவில்லை என்றாலும் அதிமுகவுக்குள் நடக்கும் இந்த நகர்வுகள் தைலாபுரம் தோட்டத்துக்கு கசிந்திருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடப்பது பற்றியும் உறுதியான தகவல் இல்லை. இந்த நிலையில் ஒப்பந்தத்தை மீறி பாமகவுக்கு ராஜ்ய சபா இல்லை என்ற முடிவில் முதல்வர் இருப்பதை அறிந்து ராமதாஸ் கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தக் கோபம்தான் சமீபத்திய நாட்களின் அறிக்கைகளில் எதிரொலிக்கின்றன.
பாமகவின் சீனியர்கள் சிலரிடம் பேசியபோது, ‘டாக்டரின் அரசியல் போக்கில் ஏற்படும் மாற்றத்தை அவரது அறிக்கைகளை வைத்தே எளிதாக அறிந்துகொள்ளலாம். 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையைக் கடுமையாக விமர்சித்த டாக்டர், கடந்த ஜனவரியில் ஆளுநர் உரையை மெல்லப் பாராட்டினார். அப்போதில் இருந்தே டாக்டர் அதிமுக பக்கம் சாயப் போகிறார் என்று எதிர்பார்த்தோம். அதேபோல சாய்ந்துவிட்டார். அந்த வகையில்தான், கடந்த இரண்டு, மூன்று தினங்களாக அதிமுக அரசின் மீதான குறைபாடுகளை நாசூக்காக சுட்டிக் காட்டி வருகிறார். அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் இல்லை என்று வெளிப்படையாக தெரிந்ததும், கடுமையாக தாக்கத் தொடங்குவார். ஆக அதிமுக-பாமக கூட்டணி சுமுகமான நிலையில் இல்லை’ என கிசுகிசுத்தார்கள்” என்ற செய்தியை செண்ட் செய்துவிட்டு வாட்ஸ் அப் ஆஃப் லைனுக்கு போனது. வாட்ஸ் அப் செய்தியை ஷேர் செய்து கொண்டிருந்தது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: