செவ்வாய், 18 ஜூன், 2019

குலக்கல்வியே புதிய கல்விக் கொள்கை: மாணவர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

குலக்கல்வியே  புதிய கல்விக் கொள்கை: மாணவர்கள் கூட்டமைப்பு!
மின்னம்பலம் : புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் இன்று (ஜூன் 18) செய்தியாளர்களை சந்தித்தனர்.
புதிய தேசிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை
கட்டாயமாக்கப்படுவதாகவும், இந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாணவர்கள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியை படிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் புதிய தேசிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே புதிய கல்விக் கொள்கையில் சில சர்ச்சைக்குரிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதுதொடர்பாக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எழிலரசன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தேசிய கல்விக் கொள்கை (2019) வரைவுத் திட்டம் ஆவணத்தில் இருக்கக் கூடிய அனைத்தும் ஏழை, எளிய கிராமப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ சமுதாயத்தின் கல்வி உரிமையை பறிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், குலக்கல்வி திட்டத்தை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரு வரைவினை மத்திய அரசு அறிமுகம் செய்யவிருக்கிறது” என்றார்.

மும்மொழி திட்டமும், புதிய கல்விக் கொள்கையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனவும் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக்குவதற்கு இந்த அரசு திட்டமிட்டிருக்கிறது எனவும் குறிப்பிட்ட அவர், “பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்கும் அரசுப் பள்ளி, கல்லூரிகளை வணிகமயமாக்குவதற்குத்தான் இந்த வரைவு திட்டம். இத்திட்டத்தைப் பற்றி மக்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள் விவாதிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்.மேலும், புதிய கல்வி கொள்கை, சமூக நீதிக்கு எதிராக உள்ளது எனவும் இட ஒதுக்கீட்டை மத்திய அரசே எடுத்து கொள்ளும் வகையில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை: