செவ்வாய், 18 ஜூன், 2019

பிகார் .. நூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் இறப்பு .. கிரிக்கெட் ஸ்கோர் கேட்டுகொண்டிருக்கும் சுகாதார அமைச்சர்

மின்னம்பலம் : முசாபர்பூர் நகரில் மூளைக்காய்ச்சலால் நூற்றுக்கும்
மேற்பட்ட குழந்தைகள் இறந்தநிலையில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கிரிக்கெட் ஸ்கோர் என்னவென்று கேள்வியெழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், முசாபர்பூர் பகுதியில் குழந்தைகள் இடையே மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையிலும், கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நோயின் தீவிரம் அதிகரித்து, இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோர் ஜூன் 16 அன்று, ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில், மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் இந்த நோயினைத் தடுப்பது குறித்த கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, “இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர் என்ன”என்று கேட்டுள்ளார் மங்கல் பாண்டே. இது ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகள் இறப்பைக் காட்டிலும் கிரிக்கெட் ஸ்கோர் தான் முக்கியமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மங்கல் பாண்டே பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நோயின் தீவிரம் அதிகரித்து கொத்துக் கொத்தாக குழந்தைகள் பலியாவது நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, இன்று (ஜூன் 18) ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்க்கச் சென்றார் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். இதுவரை நோயினைத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நிதிஷின் வருகையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நிதிஷ் குமாரிடம், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

கருத்துகள் இல்லை: