திங்கள், 17 ஜூன், 2019

நைஜீரிய மக்களின் வாழ்வை முடித்த கச்சா எண்ணெயின் கதை இது.

Sundar P : ஆப்பிரிக்காவில் அதிக பெட்ரோல் உற்பத்தி செய்கிற நாடு நைஜீரியா. நாட்டின் முக்கியமான ஆறு NUN.
அலையாத்தி காடுகளுக்கு இடையே ஓடியது இந்த ஆறு.
ஆற்றைச் சுற்றி பல ஊர்கள் இருந்தன.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதைச் சுற்றியுள்ளவர்களுக்கு அந்த ஆறுதான் எல்லாமே.
மீன்பிடித்தொழிலும் வேளாண்மையுமே அப்போது முக்கியத் தொழிலாக இருந்தன.
1960-களில் கச்சா எண்ணெய்யை எடுக்கப் பல எண்ணை நிறுவனங்கள் நைஜீரியாவுக்குப் படையெடுத்தன.
எல்லோருக்கும் வேலை கிடைக்கும் என்பதால் அரசு அவர்களை வரவேற்றது....
எண்ணெய் நிறுவனங்கள் தொழிலைத் தொடங்கின.
கடற்கரையோரம் இருந்த எண்ணை கிணறுகளிலிருந்து குழாய்களை அமைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது.

அலையாத்தி காடுகளுக்கு ஊடேதான் இந்த எண்ணைக் குழாய்கள் அமைந்திருந்தன.
மக்களை கொள்ளைக்கார்களாக்கியவை இந்த பைப் லைன்களே.
கச்சா எண்ணெய்யில் இருந்து எப்படி பெட்ரோலை பிரித்தெடுப்பது என்பதைப் அறிந்த சிலர் கச்சா எண்ணையைத் திருடி பெட்ரோல் தயாரிக்கத் துவங்கினார்கள்.
படகுகளில் பெரிய பெரிய பேரல்களை எடுத்துக்கொண்டு பைப் லைன் பக்கம் ஒதுக்கினார்கள்.
பைப் லைன்களை உடைத்து கச்சா எண்ணெய்களைப் பேரல்களில் நிரப்பினார்கள்.
அலையாத்திக் காடுகளுக்கு உள்ளே பேரல்களைக் கொண்டுசென்று கச்சா எண்ணெய்களில் இருந்து பெட்ரோலை பிரித்தெடுக்க தொடங்கினார்கள்.
கச்சா எண்ணெய் முதல்தரமான எண்ணெய்யாக இருந்ததால் பெட்ரோலை பிரித்தெடுப்பது எளிதாக இருந்தது.
கச்சா எண்ணெய்யை தீ மூட்டிக் கொதிக்க வைத்தார்கள்.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் என மூன்று வகையான எரிபொருள்களும் கிடைத்தன.
20 லிட்டர் கச்சா எண்ணெய், 10 லிட்டர் பெட்ரோலை கொடுத்தது.
அங்கு வேலை செய்தவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 யூரோக்கள் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது.
அது அவர்களின் மற்ற வேலைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.
இதைப் பார்த்த மற்ற பலரும் இந்த விபரீத வேலைக்குப் படகுகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
ராணுவத்துக்கு அலையாத்திக்காடுகளில் நடைபெற்ற இந்த சட்ட விரோத ஆலைகளின் இருப்பிடத்தைக் கண்டறிவது கடினமான வேலையாக இருந்தது.
அப்படியே ராணுவத்திடம் சிக்கிக்கொண்டாலும் பணத்தையும், பெட்ரோல் பேரல்களையும் கொடுத்து அவர்களிடமிருந்து தப்பித்தார்கள்.
தயாரித்த டீசல், மண்ணெண்ணெய்யை உள்ளூரில் விற்பனை செய்தனர்.
பெட்ரோலுக்கு விலை அதிகம் என்பதால் பக்கத்து நாடான பெனின் நாட்டின் துறைமுக நகரமான போர்டோ நோவாவுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்தனர்.
பெட்ரோலை உற்பத்தி செய்தவர்கள் கடத்தல்காரர்களாகவும் மாறினர்.
கடல் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் பெட்ரோலை கடத்தினர்.
700 லிட்டர் பெட்ரோலை 14 கேன்களில் நிரப்பித் தனி ஒருவராக மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றனர்.
பெட்ரோல் கடத்துவது ஒரு திறமையாகப் பார்க்கப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் தனியார் பாதுகாவலர்களை நியமித்தார்கள். அவர்கள் எண்ணைத் திருடர்களை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்ல ஆரம்பித்தனர்.
அரசுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக மாறியது.
அலையாத்திக் காடுகள் இருப்பதால் எண்ணைத் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதால், காடுகளை அழிக்கத் துவங்கினர்.
பெட்ரோல் ஏற்றுமதியால் கடத்தல்காரர்களிடமும் மக்களிடமும் தாராளமாக பணம் புழங்க ஆரம்பித்தது,
துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் வாங்கினார்கள், ராணுவத்துடன் சண்டை பேட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டனர்.
குரூரம் வளர்ந்தது, கொலைகள் நடந்தன..
50 வருடங்களுக்கு முன்பு செழிப்போடு இருந்த ஆறு உருமாறத் தொடங்கியது..
பெட்ரோலைப் பிரித்து எடுத்துப்போக மீதிக் கழிவுகள் ஆற்றில் கொட்டப்பட்டன.
ஆற்றில் மீன்கள் அழிந்தன.
ஆறு நாசமாகி இருந்தது,
ஆனால் ஆற்றில் மணல் இருந்தது
ஆற்று மணலை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள், விலைக்கு வாங்க சிமென்ட் கம்பனிகள் முளைத்திருந்தன.
ஆறோடு சேர்ந்து மணலும் போனது.
ராணுவத்தின் தீவிர நடவடிக்கை காரணமாக சட்ட விரோத பெட்ரோல் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ஆனால், மக்களால் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை.
இப்போது, நைஜீரிய மக்களிடம் பணம் இருக்கிறது.
உண்ண உணவும் குடிக்க தண்ணீரும்தான் இல்லை.
நமது பேராசையால், நாம் எதைச் சார்ந்து வாழுகிறோமே அதனையே உருக்குலைத்து விடுகிறோம் என்பதுதற்கு நைஜீரிய மக்களின் கதை சிறந்த எடுத்துக்காட்டு....

கருத்துகள் இல்லை: