செவ்வாய், 18 ஜூன், 2019

2 ஜி ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!


மின்னம்பலம்:  நீலகிரி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இன்று (ஜூன் 18) டெல்லியில் தற்காலிக சபாநாயகரான வீரேந்திரகுமார் மூலமாக
பதவியேற்றிருக்கிறார் ஆ.ராசா.
இந்தியாவில் இருந்து 542 உறுப்பினர்கள், தமிழகத்தில் இருந்து 38 உறுப்பினர்கள் பதவியேற்கும் இந்நிகழ்வில் ஆ.ராசா பதவியேற்பது என்று ஒரு சாதாரண சம்பவம் அல்ல…. இது சாதனை சரித்திரம்.
ஆம்… எந்த 2ஜி என்ற வழக்கைக் காட்டி நாடாளுமன்றத்தில் இருந்து ராசாவும், திமுகவும் வெளியேற்றப்பட்டார்களோ அதே மன்றத்தில் இன்று நீலகிரி உறுப்பினராகப் பதவியேற்கிறார் ஆ.ராசா. அவருடன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சார்பாக (தேனி நீங்கலாக) 37 திமுக கூட்டணி உறுப்பினர்களும் வெற்றிபெற்று எம்.பி.க்களாக பதவியேற்கிறார்கள்.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக 2007 முதல் 2010 வரை பதவி வகித்தார் ஆ.ராசா. அவரது பதவிக் காலத்தில் 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைவர் வினோத் ராய் 2010 நவம்பர் சமர்ப்பித்த அறிக்கையில் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தது. இது பெரும் பூதாகரமாக்கப்பட்டது. நாடாளுமன்றம் கொந்தளித்தது.

ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வற்புறுத்தினர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசில் இருந்தும் திமுக மீது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
தனது தலைவர் கலைஞரிடம் பேசினார் ஆ.ராசா. ‘உன்னை நம்புகிறேன். நீ ராஜினாமா செய்துவிட்டு வா. பார்த்துக் கொள்ளலாம்’ என்று ராசாவை நெகிழ வைத்தார் கலைஞர். தகத்தாய கதிரவன் ராசா மீது பொய் களங்கம் சுமத்தப்பட்டதாக அறிவித்தார் கலைஞர்.
2010 நவம்பர் 14, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார் மத்திய அமைச்சர் ஆ.ராசா. எதிர்பார்த்தது மாதிரியே 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் ஆ.ராசா.
சி.ஏ.ஜி, சிபிஐ, அமலாக்கத்துறை, காங்கிரசில் ஒரு பகுதியினர், எதிர்க்கட்சியான பாஜக, திராவிட சித்தாந்த எதிரிகள், திமுக என்றாலே எள்ளும் கொள்ளும் வெடிக்கும் ஊடகக் கூட்டம் எல்லாம் சேர்ந்து ராசாவையும் திமுகவையும் வேட்டையாடின.
எங்கெங்கு பார்த்தாலும் ஆ.ராசா ஊழல்வாதி, திமுக ஊழல் கட்சி என்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டு 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் வெறும் நாற்பத்து சொச்சம் இடங்களுக்குள் சுருங்கியது, திமுக ஒரு இடத்தில் கூட தமிழகத்தில் வெற்றிபெற முடியவில்லை.
ராசா என்ற தனி மனிதன் மீது சுமத்தப்பட்ட களங்கங்கள், இழிச் சொற்கள், ஏளன ஏகடியங்கள்….அப்படியே அவர் சார்ந்த திமுக மீதும் சுமத்தப்பட்டன.
இதெற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது இத்தனை அரசு அமைப்புகளும், உச்ச நீதிமன்றமும் சுமத்திய குற்றச்சாட்டுக்கு எதிராக தனியாளாக தனக்காக தானே வாதாடினார் ஆ.ராசா.

அதற்கு அவருக்கு கை கொடுத்தவர் அறிவாசான் பெரியார். ’பொதுவாழ்வுக்கு வந்துவிட்டால் அவமானங்களுக்கு அஞ்சாதே’ என்ற பெரியாரின் அனுபவச் சொற்களும் தான் தவறிழைக்கவில்லை என்ற சட்ட ரீதியான நம்பிக்கையும் தெளிவும் ராசாவுக்கு இருந்தன.
அதனால்தான் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒட்டுமொத்த அரசு அமைப்புகளும் தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளை வரிவரியாக பொய்யாகி, நீதிபதியை அதிர வைத்தார் ஆ.ராசா.
தான், பிரணாப் முகர்ஜி, அப்போதைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாகன் வதி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தின் அடிப்படையில்தான் முடிவெடுக்கப்பட்டு பிரதமருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்ற ராசாவின் கூற்றுக்கு வாகனவதி அப்படி ஒரு கூட்டமே நடக்கவில்லை என்று சிபிஐ யிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது ஆ.ராசா சிறையில் இருக்கிறார், வாகனவதி அப்படி ஒரு கூட்டமே நடக்கவில்லை என்று சிபிஐயிடம் தெரிவிக்கிறார். சிபிஐயோ மூன்றாவதாக பிரணாப் முகர்ஜியிடம் இதுபற்றிக் கேட்காமலேயே, ‘ஆ.ராசா, பிரணாப் முகர்ஜி, வாகனவதி ஆகியோருக்கு இடையே அப்படி ஒரு கூட்டமே நடக்கவில்லை. ஆ.ராசா பிரதமரை ஏமாற்றியிருக்கிறார்’ என்று குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டது.
நீதிமன்ற விசாரணையின்போது ஆ.ராசா தரப்பில், அப்படி ஒரு கூட்டம் நடந்ததும் அந்தக் கூட்டத்தில் வாகன் வதி அரசுக்கு நோட் எழுதியதும், பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டதும் ஆவண ரீதியாக நிரூபிக்கப்பட்டது. அந்த ஆவணங்களைப் பார்த்ததும் நீதிபதி சைனி, ஆ.ராசாவிடம் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டார்.
‘அதுவரை எனக்கு எதிராக திரும்பியிருந்த நீதிமன்றத் தராசு முள், என் பக்கமாகத் திரும்பியது அன்றிலிருந்துதான்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் ஆ.ராசா.
தனக்கும், திமுகவுக்கும், தமிழகத்துக்கும், திராவிடத்துக்கும் எதிராக டெல்லியில் வன்மமும், விஷமமும் பிசைந்து கட்டமைக்கப்பட்ட சதி வலையை நீதிமன்றத்தில் அறுத்து எறிந்தார் ஆ.ராசா.
இதன் விளைவாக 2ஜி வழக்கு என்பது அனுமானம் என்றும் அதில் ராசாவுக்கு எந்த குற்றமும் இல்லை என்றும் நீதிபதி சைனி தீர்ப்பளித்த 2017 டிசம்பர் 21 ஆம் தேதி ராசாவின் மீதும் திமுகவின் மீதும் சுமத்தப்பட்ட களங்கம் நீங்கியது.
2ஜி அவிழும் உண்மைகள் என்ற தலைப்பில் தமிழிலும்,' 2G SAGA UN FOLDS ' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் ராசா எழுதிய புத்தகம், இந்திய ஏன் உலக வரலாற்றிலேயே ஒரு முக்கியமான புத்தகம். தனக்கு எதிராக பின்னப்பட்ட சதி வலைகளை சட்டம், உண்மை ஆகியவற்றின் மூலம் அறுத்த சரித்திரத்தை இதில் பதிவு செய்திருக்கிறார் ஆ.ராசா. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரிய மனிதர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் ராசாவின் கருத்துக்கு இதுவரை எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்த கம்பீரத்துடன் நீலகிரி மலைத் தொகுதியில் களமிறங்கிய ஆ.ராசா நீதிமன்றத் தீர்ப்போடு மக்கள் மன்றத்தின் தீர்ப்பையும் பெற்று வெற்றிபெற்று இன்று நாடாளுமன்ற உறுப்பினராக நுழைகிறார்.
ராசாவை வாழ்நாள் முழுதும் சிறையில் தள்ள வேண்டும் என்று நினைத்தவர்கள், மெனக்கெட்டவர்கள், சதி செய்தவர்கள் எல்லாம் இன்று ராசாவைப் பார்த்து புன்னகைக்கலாம், வாழ்த்தலாம். அதற்கு பதிலாக ராசா உதிர்க்கும் பதில் புன்னகை இருக்கிறதே… அது தமிழனின், திராவிடனின், நேர்மையான தனி மனிதனின் வலிமையான பதிலாக அமையும்.
’என்கிட்ட மோதாதே நான் ராசாதி ராசா அல்ல… மக்களின் ராசா’ என்பதே அந்த புன்னகையின் பொருள்.
-இந்திரன்

கருத்துகள் இல்லை: