வெள்ளி, 21 ஜூன், 2019

தினகரனுடன் வாக்குவாதம்: எடப்பாடியை சந்திக்கிறார் தங்கம்

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை:    தினகரனுடன்  வாக்குவாதம்:  எடப்பாடியை சந்திக்கிறார் தங்கம்மொபைல் டேட்டாவை ஆன் செய்தபோது, வாட்ஸ் அப்பில் நிறைய மெசேஜ்கள் வந்து விழுந்தன. ‘மிக முக்கியச் செய்தி’ என்று அழுத்தமாய் குறிப்பிட்டு வந்தது
“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்வது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே சில மாதங்களாக தங்க தமிழ்ச்செல்வனுக்கும் தினகரனுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களில் நடந்த சம்பவங்கள் தங்க தமிழ்ச்செல்வனின் விலகலை உறுதிப்படுத்துகின்றன.
ஜுன் 18 ஆம் தேதி தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர் ஆர் விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். தேர்தல் தோல்வி பற்றிய ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டத்தை நடத்தினார் தங்க தமிழ்ச்செல்வன். 22 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து ஆய்வுக் கூட்டங்களை தினகரன் தொடங்கும் நிலையில், தேனியில் தங்கம் நடத்தும் இந்த திடீர் கூட்டம் பற்றி தினகரனுக்குத் தெரியவந்திருக்கிறது. தேனியில் இருக்கும் தனது உறுதியான ஆதரவாளர்கள் சிலரிடம் கூட்டம் பற்றி விசாரித்திருக்கிறார் தினகரன்.

தேனி ஆய்வுக் கூட்டத்தில், ‘அமமுக சாதிக்கட்சினு எல்லாரும் சொன்னாங்க.ஆனா அப்படி சொன்ன மத்த சாதிக்காரங்களும் ஓட்டுப் போடலை. எந்த சாதிக்கான கட்சினு சொன்னாங்களோ, அந்த சாதிக்காரங்களும் ஓட்டுப் போடலை. மக்கள் ஏன் நம்மளை மறந்தாங்கன்னு யோசிக்கணும்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியது அத்தனையும் தினகரனுக்குப் போய்விட்டது.

மறுநாள் காலை அமமுக தலைமையகத்தில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு, ‘தினகரன் அழைக்கிறார்’ என்று தகவல் போயிருக்கிறது. இதையடுத்து சென்னை வந்த தங்க தமிழ்ச்செல்வன் நேற்று (ஜூன் 20) மாலை தினகரனை சந்தித்திருக்கிறார். தங்கம் மீது கடுமையாக கோபப்பட்ட தினகரன், ‘நீங்க அப்போலேர்ந்தே கட்சிக்குள்ள தனி ஆவர்த்தனம்தான் பண்ணிக்கிட்டிருக்கீங்க. தேனியில ஆய்வுக் கூட்டம் போட்டு என்ன பேசினீங்க நீங்க? உங்க பாட்டுக்கு தனி மீட்டிங், தனி பேட்டினு கொடுத்துக்கிட்டு கட்சியில இருக்குறவங்கள குழப்பிக்கிட்டு இருக்கீங்க. இங்க இருக்க முடிஞ்சா இருங்க. இல்லேன்னா பரவாயில்லை போயிட்டே இருங்க. நீங்க போறேன் போறேன்னு சொல்றதும் உங்களை நாங்க சமாதானப்படுத்துறதும் இனிமே நடக்காது’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் தினகரன்.
இதனால் கடுமையாக அப்செட் ஆன தங்க தமிழ்ச்செல்வன் நேற்று இரவு மீண்டும் சென்னையில் தனது ஆதரவாளர்களை கூட்டி பேசியிருக்கிறார். அப்போது, ‘தினகரனாலதான் நமக்கு இந்த நிலைமை. அமமுகவை மக்களே ஏத்துக்கலை. இனிமே இந்த கட்சியில் இருந்து நமக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அம்மாதான் நம்மளை சட்டமன்றம், நாடாளுமன்றம்னு அனுப்பிவச்சாங்க. பத்து வருஷமா சென்னை வந்தா எம்.எல்.ஏ. ஹாஸ்டல்னு தங்கறதுக்கு கௌரவமா ஒரு இடம் இருந்துச்சு. ஆனா இப்ப நம்மை நடுத்தெருவுல நிறுத்திட்டாரு தினகரன். ஏற்கனவே என்னை அதிமுகவுல கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்காங்க. நான் தான் சின்னம்மாவுக்காக யோசிச்சிட்டிருந்தேன். ஆனா தினகரனே என்னை அங்க கூட்டிக் கொண்டு விட்டுருவாரு போலிருக்கு.
சின்னம்மாதானே எடப்பாடியை சிஎம்மா போட்டாங்க. ஏன் சின்னம்மா நினைச்சுருந்தா அன்னிக்கு தான் ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாடி தினகரனை சி எம்மா ஆக்கியிருக்கலாமே? அவரை நம்பாமதான் எடப்பாடியை சிஎம் ஆக்கினாங்க. பெங்களூரு ஜெயிலுக்குப் போயி சின்னம்மாவை பாத்து நடக்கறதை எல்லாம் சொல்லலாம்னு பார்த்தா என்னை அங்க போகவிடவே மாட்டேங்குறாரு. அதனால இனியும் லேட் பண்றதுல அர்த்தமில்லை. என்னோட வர்றவங்க வரலாம்’ என்று பேசியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். இதற்கு அவரது ஆதரவாளர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே தங்க தமிழ்ச்செல்வனோடு அமைச்சர் தங்கமணி பேசிவருவதை தங்கத்தை சந்தித்த தங்கம் என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் வெளிவந்திருந்தது. மேலும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அண்மையில் ராஜ்யசபா ஆஃபர் கொடுத்து அதிமுக அழைப்பது பற்றியும் செய்தி மின்னம்பலத்தில் வந்திருந்தது.
அந்த வகையில் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று இரவே அமைச்சர் தங்கமணியோடு பேசியிருக்கிறார். நடந்ததைச் சொல்லி சீக்கிரமே அதிமுக பக்கம் வருவதாக சொல்லியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். இதைக் கேட்டு மகிழ்ந்த தங்கமணி நேற்று இரவே முதல்வர் எடப்பாடியிடமும் பேசியிருக்கிறார்.
‘இப்போதைக்கு ஓ.பன்னீருக்கும் செக் வைக்கணும், தினகரனுக்கும் செக் வைக்கணும்னா அதுக்கு தங்க தமிழ்ச்செல்வன் தான் சரியான ஆயுதம். ஏற்கனவே அவர்கிட்ட பேசிக்கிட்டிருந்த நிலையில இப்ப அவராவே வர்றேனு சொல்றாரு. உங்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிறாரு’ என்று தங்கமணி சொல்ல, சமீபத்திய உடல் நல டென்ஷனில் இருந்த எடப்பாடியும் இதைக் கேட்டு மகிழ்ந்து, ‘உடனே தங்கத்தைப் பார்த்து பேசிடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.
தங்க தமிழ்செல்வன் சென்னையில் மேரிஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். இன்று (ஜூன் 21) அமைச்சர் தங்கமணியை சந்திக்க எழும்பூர் அசோகா ஹோட்டலுக்கு பிற்பகலில் வந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அவர் வந்த கொஞ்ச நேரத்தில் அமைச்சர் தங்கமணி ஒரு தனியார் காரில் அசோகா ஹோட்டலுக்கு வந்திருக்கிறார். இன்று பிற்பகல் இருவரும் பேசி முடிவெடுத்துவிட்டனர். அதன்படி எந்த நேரமும் முதல்வர் எடப்பாடியை சந்திக்க ஆயத்தமாகிவிட்டார் தங்க தமிழ்ச்செல்வன். இந்த பேச்சுவார்த்தைகளின் இடையில்தான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘அண்ணன் எடப்பாடி அரசு பிளாஸ்டிக்கை ஒழித்திருப்பது எனக்கு பிடித்த விஷயம்’ என்று மனம் திறந்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். தங்க தமிழ்ச்செல்வன் எந்த நேரத்திலும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து கட்டித் தழுவலாம் என்பதே இப்போதைய நிலவரம்” என்ற மெசேஜை அனுப்பிவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
இதை ஷேர் செய்து, தனது டைம்லைனில் நண்பர்களுக்கு டேக் செய்து கொண்டிருந்தது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: