ஞாயிறு, 16 ஜூன், 2019

கே.எஸ்.அழகிரி : நாங்குநேரி தொகுதி பற்றி பேச்சு உதயநிதிக்கும் திருநாவுக்கரசருக்கும் இடையான தனிப்பட்ட உரையாடல்

நாங்குநேரி திமுகவுக்கா? உதயநிதிக்கு கே.எஸ்.அழகிரி பதில்!மின்னம்பலம் : நாங்குநேரி தொகுதியைத் திமுகவுக்கு விட்டுத்தர வேண்டும் என உதயநிதி பேசியது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற ஹெச்.வசந்தகுமார், தனது நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். விரைவில் அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், மீண்டும் காங்கிரஸ் போட்டியிட முயற்சிகள் மேற்கொள்வோம் என்று வசந்தகுமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி திருச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரை நோக்கி, “நாங்குநேரி தொகுதியைத் திமுகவுக்கு விட்டுக்கொடுத்தால் நாங்கள் எளிதாக வெற்றிபெற்று விடுவோம். இது ஒரு கோரிக்கைதான்” என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடப்போவது திமுகவா அல்லது காங்கிரஸா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (ஜூன் 15) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நாங்குநேரி தொகுதியைத் திமுகவுக்கு விட்டுத் தர வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார். திருநாவுக்கரசர் கோபித்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அதை அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, இரு கட்சிகளுக்கு இடையே நடந்த உரையாடலாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், “எங்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் நல்ல புரிதல் உண்டு. மக்களவைத் தேர்தலில் ஊடகத்தினரே ஆச்சரியப்படும் அளவுக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொகுதிகளைப் பங்கிட்டுக் கொண்டது. மேலும் நல்ல ஒத்துழைப்பு இருந்ததால் மகத்தான வெற்றி பெற்றோம்” என்றவர்,
வரவுள்ள இடைத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அதே நடைமுறையை நாங்கள் பின்பற்றி வெற்றி பெறுவோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வராது. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டுமோ அதை முறையாகப் பங்கிட்டுக் கொள்வோம் என்றும் விளக்கினார்.

கருத்துகள் இல்லை: