ஞாயிறு, 16 ஜூன், 2019

கவிஞர் இன்குலாப்... மனுசங்கடா மனுசங்கடா .. சாகித்திய அகெடெமி விருதை புறக்கணித்த .....

சுமதி விஜயகுமார் : 1929, ஏப்ரல் 8. ஆங்கிலேய அரசு இரண்டு புதிய
சட்டவரைவை அங்கீகரிக்க டெல்லி சட்டப்பேரவையில் ஒன்று கூடியது . அதனை எதிர்த்து இரண்டு இளைஞர்கள் கைகுண்டுகளை சட்டப்பேரவையில் எரிந்து அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள். ஒருவர் Batukeshwar Dutt. மற்றொருவர் மாவீரன் பகத் சிங். குண்டுகளை எறிந்துவிட்டு பகத் சிங் எழுப்பிய முழக்கம் ஒன்று நாடு முழுவதும் தீயாய் பரவியது . 'இன்குலாப் ஜிந்தாபாத்' . உருது மொழியில் 'புரட்சி ஓங்குக' என்ற சொல்லை குறிப்பது.
பகத் சிங் பற்ற வைத்த அந்த தீ மெல்ல மெல்ல பரவி தமிழ்நாட்டிற்கும் வந்தது. அதில் ஒரு பொறியாய் மாறியவர் ஷாகுல் ஹமீது. அப்படி சொன்னால் எத்தனை பேருக்கு அவரை தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை . ஆனால் கவிஞர் இன்குலாப் என்றால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம். அவரை அதிகம் பேருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. தெரிந்திருந்தால் தான் ஆச்சர்யம். நாமெல்லாம் 'நட்டு வைத்த வேல், போட்டு வைத்த பூ' என்று பாடும் பிழைப்புவாத கவிஞர்களை கொண்டாடும் சமூகம்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒற்றை பாடலில் அறிமுகமான கவிஞர். எந்த ஆடம்பரமான வார்த்தைகளும் இல்லாமல், மிக எளிய தமிழில், பேச்சு வழக்கு மொழியில் எழுதப்பட்ட பாடல். 'மனுசங்கடா நாங்க மனுசங்கடா' . கேட்டதும் மனதிற்குள் ஏதோ ஒன்றை புரட்டி போடுவது போல் இருந்தது. முதலில் அதை பாடியவர்தான் எழுதினார் என்று நினைத்தேன். பிறகு தான் அது இன்குலாப் எனும் கவிஞருடையது என்று தெரிந்தது.
1980ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் கொள்ளப்பாடியில் நான்கு தலித் குழந்தைகள் ஊர் பொது கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக படுகொலை செய்யப்பட்டார்கள்.காவல்துறை அந்த குற்றத்தை செய்தவர்களை விடுவித்துவிட்டு அந்த பிள்ளைகளின் குடும்பத்தாரை கைது செய்தது. அதுவரையில் எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாத இந்த சமூகத்தை பார்த்து அவர் பாடிய பாடல் தான் அந்த பாடல். பகத் சிங்கின் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற சொல் எப்படி இந்தியாவை எழுச்சி கொள்ள செய்ததோ , அது போல் இன்குலாபின் இந்த பாடல் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது.
எனக்கு அறிமுகமாகிய தருணம் அவர் உயிருடன் இல்லை. அவரை பற்றி தெரிந்து கொள்ள தரவுகளை தேடிய பொழுது ஒரு விஷயம் மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.இந்தியாவில் இலக்கியங்களுக்கு கொடுக்கபடும் மிக உயரியதாக கருதப்படும் சாஹித்ய அகாடமி விருதை அரசு அவருக்கு வழங்க முன் வந்தது. ஆனால் அவர் குடும்பம் அதை நிராகரித்தது. ஏன் என்று கேட்டதற்கு 'எந்த விருதுகளை எதிர்பார்த்தும் அவர் எழுதவில்லை' என்று தெரிவித்திருந்தார்கள். எனக்கெல்லாம் 'மத்திய அரசு எனக்கு கொடுத்த விருதை திருப்பி கொடுத்தால் ஈழத்தில் நடைபெறும் படுகொலைகள் நிறுத்தப்பட்டுவிடுமா' என்ற சொன்ன நடிகரையும் விருதுக்காக தன் கொள்கையில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் சமரசம் செய்து கொள்ளும் கவிஞரையும் தான் தெரிந்தது.
படிக்க வேண்டிய, குழந்தைகளிடம் சென்று சேர்க்க வேண்டிய கவிஞர் 'மக்கள் பாவலர்' இன்குலாப்.

கருத்துகள் இல்லை: