செவ்வாய், 28 மே, 2019

எஸ் ஆர் எம் பல்கலை கழகத்தில் இரு மாணவர்கள் மர்ம மரணம் .. தற்கொலை என்று ஊடகங்கள் தீர்மானம்!

மின்னம்பலம் : சென்னை அடுத்துள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று (மே 27) மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டாங்கொளத்தூர் அருகே பொத்தேரியில் எஸ்.ஆர்.எம் பல்கலை இயங்கி வருகிறது. இப்பல்கலையின் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயோ மெடிக்கல் பயின்று வந்த, பொன்னேரியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகள் அனுப்பிரியா மே 26ஆம் தேதி கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். பல்கலையில் உள்ள விடுதியின் 10ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மறைமலை நகர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, பெற்றோர் என்னை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை என் தம்பி ராஜூ சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாணவி தற்கொலைக்கான மர்மம் விலகாத அடுத்த 24 மணி நேரத்தில், ஜார்கண்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனுஷ் செளத்ரி என்ற பொறியியல் (ஈ.சி.ஈ) துறை மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுஷ் செளத்ரி கல்வியில் பின் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இரு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது எஸ்.ஆர்.எம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இரு மாணவர்களின் தற்கொலையைத் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து அப்பல்கலை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ”பல்கலைக்கழக வளாகத்தில் இரு துரதிருஷ்டமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பல்கலை கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவ ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவப் பிரிவில் போதிய ஆலோசனை, மருத்துவ உதவி வசதிகள் பெற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளவும், அவர்களது கல்வி மற்றும் நிலை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு அறிய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: