புதன், 29 மே, 2019

சங்கிலிய மன்னன் ..மதத்தையும் ஜாதியையும் கட்டிக்காத்த சிங்கை ஆரிய மன்னனின் 400 வது ஆண்டு விழா!

Thilipkumaar Ganeshan :  இது சங்கிலியனின் 400வது நினைவு நாள் என்கிறார்கள். இதற்கு முன்னர் 399 நினைவு தினங்களை இலங்கையில் யாராவது நடாத்தியிருக்கிறார்களா? சங்கிலியன் செத்துப்போய் 400 வருடங்கள் கழித்து இந்தியனுக்கு ஏன் திடீரென சங்கிலியன் ஞாபகத்துக்கு வர வேண்டும்?
M.R.Stalin Gnanam : .இழிநிலையன்றி வேறென்ன?
யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனின் 400ஆவது நினைவு தினத்தை இலங்கையின் சிவசேனா அமைப்பினர் அனுஷ்ட்டிக்கின்றனர் மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவர் இந்த அமைப்பை ஸ்தாபித்து இயக்கி வருகின்றார்.
ஒரு காலத்தில் 'சிங்களவனோடு சேர்ந்து வாழ முடியாது தனித்தமிழ் ஈழம் வேண்டும்' என்று ஈழத்தமிழர்களிடையே தமிழீழ கனவை விதைத்தவர்களில் இந்த சச்சுதானந்தமும் ஒருவர். தமிழாராட்சி மாநாட்டு படுகொலையுடன் தமிழீழத்துக்காக இளைஞர்களை ஆயுதமேந்த வைத்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச்சென்றவர் இவர்.
அந்த அழகான கற்பனைக்காக பல்லாயிரம் பேர் மாண்டு எல்லாம் முடிந்து விட்டது. இப்போது 40 வருடங்களுக்கு பின்னர் திரும்ப வந்து எதுவுமே நடைபெறாததுபோல மத வெறியை பரப்ப முயல்கின்றார் இந்த சச்சுதானந்தன்.
மத உரிமைகள் என்பது தத்தமது வாழ்க்கை சார்ந்தது. ஆனால் அதுவே அடுத்தவர்களின் வாழ்வியலை பாதிக்கும் வண்ணம் கருத்துக்ளை பரப்ப முயன்றால் அது மத வெறியாக மாறிவிடுகின்றது.

இனவாத அரசியலினால் அனைத்தையும் இழந்தபின்னர் எதிர்காலம் குறித்து எவ்வித நம்பிக்கைகளும் இன்றி கையறு நிலையில் இன்று தமிழ் சமூகம் நிற்பதற்கு ஒரு காலத்தில் சச்சு போன்றவர்கள் விதைத்த இனவாத கருத்துக்களே காரணமாகும். இந்த தமிழர்களை மீண்டும் மதவாத அரசியல் சாக்கடைக்குள் இறக்க இந்த சிவசேனா முயன்று வருகின்றது என்பதையிட்டு நாம் கவனம் கொள்ள வேண்டிய அவசியமுண்டு.
இந்தியாவின் இந்த சிவசேனாவும் சங்கிலியன் விழாவுக்காக இலங்கைக்கு சச்சிதானந்தத்தால் அழைத்துவரப்பட்டுள்ள இந்து மக்கள்கட்சியும் சிறுபான்மை மதங்கள் மோசமான மீது இனவெறியை பரப்பிவருகின்ற சக்திகளாகும்.
அதனடிப்படையில் இவரது செயற்பாடுகளின் பின்னணியில் இந்தியாவில் கோலோச்சுகின்ற இந்துத்துவ அமைப்புக்கள் இருப்பது பகிரங்கமாகின்றது. தமது மக்களிடையே பிளவுகளை உருவாக்கி ஏனையவர்கள் மீது வெறுப்பு அரசியலை உருவாக்குவதற்காக வரலாற்றையும் மதத்தையும் இவர்கள் கையிலெடுக்கின்றனர்.
ஈழத்தில் உள்ள தமிழர்களிடையே இந்தியாவில் வன்முறை சக்திகளாக இயங்கும் 'இந்துப்பாசிசம்' பற்றிய புரிதல்கள் மிக குறைவு என்பதனால் சைவம், இந்து, தமிழர் என்று எல்லாவற்றையும் போட்டுகுழப்பி அரசியல் செய்யும் சச்சிதானந்தம் போன்றவர்களின் சதிக்கு எமது இளையவர்கள் இலேசாக பலிக்கடாவாகும் வாய்ப்புகள் அதிகமுண்டு.
தற்போது இந்த சிவசேனா அமைப்பானது இந்தியாவின் மத வெறியர்களது ஆதரவுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனின்பெயரை முன்வைத்து களமிறங்கியுள்ளதால் இலகுவாக தமிழ் மக்களிடையே இவர்களது 'ஆபத்தான பாசிஸ அரசியல்' மெல்ல முளைவிட தொடங்குகின்றது.
அதன் வெளிப்பாடுதான்
"சங்கிலியன் தமிழ் மன்னன் தானே?
அவனை நினைவு கூருவதில் என்ன தவறு?
எமது வரலாறுகள் எமக்கு முக்கியம்தானே?" என்று எழுப்பப்படும் கேள்விகளாகும். மேலோட்டமாக பார்க்கின்றபோது இக்கேள்விகளில் நியாயம் இருப்பதாக தோன்றும். தமது இனத்தின் வரலாறுகளை தெரிந்துகொள்ளாத எந்த இனமும் முன்னேற முடியாது என்பதும் உண்மைதான்.
ஆனால் மனித குலத்தின் மேம்பாட்டுக்கு எதிரான ஆதிக்க சக்திகளின் வரலாறுகளை ஏக மக்களின் வரலாறுகளாக கற்பிதம் செய்வதும், அதனை போற்றுவதும், மதத்தோடு இணைத்து ஒரு இனத்தின் வரலாற்றை ஒற்றை பார்வைகளில் பார்க்கமுயல்வதும் பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடு ஆகும். மத உரிமை என்பது வேறு,மத வெறி,வெறுப்புஅரசியல் என்பன வேறு.
சங்கிலியன் என்பதுவும் நல்லூர் என்பதுவும் யாழ்ப்பாண-சைவ வேளாள ஆதிக்கத்தின் குறியீடாகும். அதனை முன்னிறுத்தி ஈழத் தமிழரின் வரலாற்றை எழுத முனைவதும், அதனை பொதுமைப்படுத்தி ஏனைய வரலாறுகளை விளிம்புநிலைக்கு தள்ளுவதும் இந்து சனாதன அதிகார மையத்தை கட்டமைப்பதாகும். இலங்கையில் சிவசேனாவின் உருவாக்கம் என்பது இந்தியாவில் உருவாகிவரும் ஜனநாயகவிரோத இந்து பாசிச சர்வாதிகாரத்தின் நீட்சியாகும். அதன் எடுபிடிகளாக இந்த சச்சுதானந்தம் போன்றோர் இலங்கையில் செயற்பட முனைகின்றார்கள் என்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நல்லூர் இராசதானி என்பது வன்னிப்பிரதேசத்தை தாண்டாதது. ஆனால் இந்த இரசதானியை ஆண்ட சங்கிலியனை வடக்கு கிழக்கின் சகல பிரதேசங்களினதும் மன்னனாக காட்டிட முயலுகின்ற போக்கானது உண்மையான வரலாற்றுக்கு எதிரானது.ஏனைய பிரதேசங்களின் வரலாற்றை மறுத்து சிறுமைப்படுத்துக்கிற உள்நோக்கம் கொண்டதாகும். இல்லாவிட்டால் அம்பாறை-திருக்கோவிலுக்கு சங்கிலியனுக்கும் என்ன தொடர்பு, எதற்காக சங்கிலியனுக்கு அங்கே பிண்டம் வைத்து பிதிர் கொடுக்க யாழ்ப்பாணத்திலிருந்து சச்சுதானந்தம் வரவேண்டும்.
பல்லின மக்களின் ஒருமித்த வாழ்வியலை அடிநாதமாக கொண்ட பன்மைத்துவ வரலாற்றை மறைக்கின்ற போக்கிரித்தனம் ஆகும்.
இந்த சங்கிலியனை ஈழத் தமிழர்களின் வரலாற்று பெருமானாக காட்ட முயல்கின்ற போக்கு இப்போது ஆரம்பிக்கப்பட்டதல்ல. தமிழரசு கட்சியினரின் தமிழீழ பிரச்சார காலங்களில் இது தொடங்கி விட்டது. கிழக்கு மாகாணத்துக்கு வந்தால் தமிழீழத்தின் தலைநகர் திருமலை என்றும் வடக்குக்கு சென்றால் தமிழீழத்தின் பாராளுமன்றம் நல்லூரிலுள்ள சங்கிலியன் தோப்பில் அமையுமென்றும் தமிழரசு கட்சியினர் பிதற்றி திரிந்த வரலாறுகளுண்டு. அதன் தொடர்ச்சிதான் இந்த பித்தலாட்டங்கள்ஆகும்.
இந்த சங்கிலியன்தான் 1542ஆம் ஆண்டு 600க்கும் அதிகமான மன்னார் மக்களை கிறிஸ்தவத்துக்கு மாறினார்கள் என்பதற்காக படுகொலை செய்தவன்.சாதிவெறியும் மதவெறியும்கொண்டலைந்த சங்கிலியன் போன்றோர் சனாதன வர்க்கத்தின் பிரதிநிதிகளேயன்றி சாமானியர்களின் பிரதிநிதியல்ல. இதுபோன்றவர்களை முன்னோடியாகவும் வரலாற்று நாயகர்களாகவும் காட்டமுனைவது அபத்தமானதாகும்.
தமிழரின் தொன்மை வரலாறென்பது பன்மைத்துவம் நிறைந்தது, யாதுமூரே யாவரும் கேளீர் என்பதுதான் தமிழரின் முதுசமான பொன்வாக்கு ஆகும், அதனை மறுத்து தமிழரின் வரலாற்றை இந்துக்களின் வரலாறாக காட்டுவதும் அதனை சைவத்துக்கு மட்டுமானதாக நிறுவ முனைவதும் வரலாற்றின் பன்மைத்துவ ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும்.
தமிழை வளர்த்தமையிலும் உலகளாவிய இலக்கியங்களையும் நீதிநெறிகளையும் வழங்கியமையிலும் பெளத்தம்,சமணம், போன்றவற்றுக்கு நிராகரிக்க முடியாத பாத்திரங்களுண்டு. அதனை மறுத்தால் நாம் ஐம்பெரும் காப்பியங்களையும் கூட இழக்கவேண்டியிருக்கும்.
குண்டலகேசியும், வளையாபதியும், மணிமேகலையும் தமிழ் பெளத்தம் தந்த காப்பியங்கள். சிலப்பதிகாரமும், சீவக சிந்தாமணியும் தமிழ் சமணர்கள் தந்த காப்பியங்கள். உமறுப்புலவரது சீறாப்புராணம் இஸ்லாமியா காப்பியம், சமணத்து வள்ளுவன் தந்த திருக்குறளே தமிழினத்தின் நீதிநூலாகும். இவற்றையெல்லாம் மறுத்துக்கொண்டும் புறமொதுக்கியும் தமிழர் வரலாறு இருக்கமுடியாது..
இந்த பன்மைத்துவ வரலாறுகளை புறமொதுக்கி விட்டு நாம் ஆரிய சக்கரவர்த்திகளின் வழித்தோன்றலாக சனாதன சைவத்தையும் சாதிவெறியையும் கட்டிக்காத்த சங்கிலியனுக்கு விழா எடுக்கும் நிலையிலிருப்பது இழிநிலையன்றி வேறென்ன?

கருத்துகள் இல்லை: