செவ்வாய், 28 மே, 2019

Dr.பாயல் தத்வி தற்கொலை .. 4 மருத்துவர்கள் இடைநீக்கம்!


பாயல் தத்வி மரணம்: 4 மருத்துவர்கள் இடைநீக்கம்!
மின்னம்பலம் : தற்கொலை செய்துகொண்ட மும்பை மருத்துவ மாணவி பாயல் தத்வியை சாதிப் பெயர் குறிப்பிட்டுத் தொடர்ந்து ராகிங் செய்த வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அதற்குக் காரணமான 4 மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது பிரிகான்மும்பை மாநகராட்சி நிர்வாகம்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த பாயல் தத்வி, கடந்த ஆண்டு மும்பையில் உள்ள டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மருத்துவப் பிரிவு முதுகலைப் படிப்பில் சேர்ந்தார். பிஒய்எல் நாயர் மருத்துவமனையுடன் இணைந்து இக்கல்லூரி செயல்பட்டு வந்தது. பாயல் தத்வியின் பெற்றோர் சல்மான் தத்வி மற்றும் அபேதா பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
இதனால், பாயல் தத்வியின் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு ஹேமா ஆஜா, பக்டி மேகர், அங்கீதா என்ற மூன்று முதுகலை மருத்துவ மாணவிகள் அவரைத் தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பாயல், கடந்த 22ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மாணவி பாயல் தத்வியின் தற்கொலை தொடர்பாக ராகிங் எதிர்ப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது. தற்போதுவரை அந்த மூன்று மாணவிகளும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்கள் ராகிங் எதிர்ப்புக் குழுவில் ஆஜராகி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், பாயல் தத்வியின் தற்கொலைக்குக் காரணமான மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவிகளான ஹேமாஅகுஜா, பக்தி மெகர், அங்கீதா கந்தில்வால் மற்றும் மகப்பேறு துறையில் பாயலின் பிரிவுக்கான தலைவர் யி சிங் லிங் ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது பிரிகான்மும்பை மாநகராட்சி நிர்வாகம். இது பற்றி இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணை முழுமையடைந்த பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிகான்மும்பை மாநகராட்சியின் சுகாதாரத் துறை துணை ஆணையர் சுனில் தாம்னே கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ராகிங் எதிர்ப்புக் குழு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது என்றும், நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது மகாராஷ்டிர மருத்துவர்கள் குடியுரிமைச் சங்கம். இந்நிலையில், சம்பந்தப்பட்ட மூன்று பெண் மருத்துவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கும் வகையில் ராகிங் எதிர்ப்பு குழுவிற்குக் கடிதம் எழுதியுள்ளனர். “நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலோ, வேலை செய்வதிலோ சாதிரீதியான எந்த பாகுபாட்டையும் நாங்கள் செயல்படுத்தவில்லை. ஊடகங்களில் சொல்வது போல சாதிரீதியாக எந்தத் தாக்குதலும் பாயல் மீது நடத்தவில்லை. காவல் துறை மற்றும் ஊடகங்களின் அழுத்தத்தினால் எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் விட்டுவிடக் கூடாது” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய மருத்துவமனை டீன் டாக்டர்.ரமேஷ் பார்மல், அவர்கள் அப்பாவி என்றால் விசாரணைக் குழுவை நேரில் சந்தித்துப் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவர்கள், ஊழியர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் என 25-30 பேர் இச்சம்பவத்தோடு ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
பாயல் படித்த மருத்துவக் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது குறித்து 8 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று ரமேஷ் பார்மலுக்கு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையம். இதன் உறுப்பினர் மஞ்சுஷா மால்வானே,, கல்லூரியின் சட்டங்களுக்கு எதிராகச் செயல்படுவதன் காரணமாகத் தொந்தரவுக்கு ஆளானால் உடனே சம்பந்தப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: