ஞாயிறு, 6 ஜனவரி, 2019

திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்று பிழை எது?

2-ஜி விவகாரத்தில் மாறன் சகோதரர்களும்!
மத்திய அமைச்சராகியும்  ரௌடித்தனத்தை கைவிடாத மு க அழகிரியும், 
கொலைகளின் மூலமே வெல்ல முடியும் என இறுதிவரை செயற்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனும்
LR Jagadheesan : கே: திமுக என்கிற அரசியல் கட்சி செய்த வரலாற்றுப்பிழை
எது?
பதில்: 1998 ஆம் ஆண்டு பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்தது என்று தான் திமுகவின் தற்போதைய தலைவர் செயல் தலைவராக இருந்தபோதே சொன்னார். பெரும்பான்மையான திராவிட இயக்க அறிஞர்களும் அதையே இன்னும் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால் அது சரியுமல்ல; முழு உண்மையுமல்ல. 1999 ஆம் ஆண்டு உருவான திமுக பாஜக கூட்டணி என்பது காலத்தின் கட்டாயம். அதில் அந்த கட்சி வெட்கப்பட ஒன்றும் இல்லை. அந்த காலகட்ட அரசியல் யதார்த்தத்தை கணக்கில் கொள்ளாமல் மோடி அமித்ஷாக்களின் நிகழ்கால கொடுமையை கொண்டு கடந்தகால நிதர்சனங்களை மதிப்பிடும் தவறான போக்கு அது.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியானது "ராஜீவைக்கொன்ற திமுக"வை தன் பரம எதிரியாக வரித்துக்கொண்டு வஞ்சம் தீர்க்க கங்கணம் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. ஜெயின் ஆணைய இடைக்கால அறிக்கை என்கிற அபத்த குப்பையை காரணம் காட்டி மத்தியில் திமுகவும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி அரசை பதவியில் இருந்து இறக்கிவிட்டு டில்லியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி முழு மூச்சாய் இருந்த சமயம் அது.
இன்னொரு பக்கம் வாஜ்பாய் அரசை கவிழ்க்க திமுகவும் அதிமுகவும் தம்மோடு ஒரே அணியாக கைகோர்க்கவேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் வேண்டுகோள் விடுத்த வினோதமான காட்சிகள் அரங்கேறியதும் அதே காலத்தில் தான்.

இப்படி வன்மம் ஒருபக்கம் கம்யூனிஸ கோமாளிக்கூத்து மறுபக்கமுமாக தேசிய அரசியலில் திமுகவை நெருக்கிய சமயத்தில் தான் திமுக பாஜக கூட்டணி உருவானது. மேலும் திமுக ஆட்சியை கலைக்க மறுத்த வாஜ்பாய் ஆட்சியை தான் திமுக ஆதரித்தது. அதுவும் திமுகவின் முன் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்று குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்த பின்பே அந்த கூட்டணி உருவானது.
1967 தேர்தலில் குலக்கல்வி கொண்டுவந்த ராஜாஜியுடன் கைகோர்த்து அண்ணா கூட்டணி அமைத்தது சரியென்றால் தன் ஆட்சியை கலைக்க மறுத்த வாஜ்பாயோடு தன் முன் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்ற பின்னர் கலைஞர் அமைத்த கூட்டணியும் சரியே. இந்த இரண்டு கூட்டணிகளுமே ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அதில் வாழ்ந்த கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் ஏராளமான நன்மைகளை செய்தன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இதை தெளிவாக விளக்கிச்சொல்வதில் அந்த கட்சியின் இன்றைய தலைமைக்கும் அதை ஆதரிக்கும் அறிஞர்களுக்கும் (குறிப்பாக இடதுசாரி, திராவிட அறிஞர்களுக்கும்) இருக்கும் மனத்தடை என்பதை பெரியார் வார்த்தையில் சொல்வதானால் அறிவு நாணயமற்ற செயல் என்றே சொல்ல முடியும். வேறு வார்த்தை பொருந்தி வராது.
நிற்க. அப்படியானால் அந்த கட்சி தவறே செய்யவில்லையா?
ஏனில்லை? ஈழம் தொடர்பான அந்த கட்சியின் நிலைப்பாடு அதன் மிகப்பெரிய வரலாற்றுப்பிழை. அதன் பலனைத்தான் அந்த கட்சி இன்றுவரை அறுவடை செய்துகொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் மிகத்தெளிவாக அனைத்து போராளிக்குழுக்களுக்கும் பொதுவான ஆதரவளித்தது, அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்றது, டெசோ என்றொரு அமைப்பை உருவாக்கி ஈழத்தமிழர் பிரச்சனையை இந்திய அளவில் கொண்டு சென்றது; இந்திய அமைதிப்படையை திரும்பப்பெற போராடி வென்றது, தமிழ்நாட்டில் வசித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பிலெல்லாம் இட ஒதுக்கீடு அளித்தது என திமுகவின் ஈழத்தமிழர் ஆதரவு என்பது தெளிவாகத்தான் இருந்தது. அது ஈழத்தமிழர்களுக்கு பெருமளவு நன்மையையும் செய்தது.
ஆனால் இந்த ஆதரவை விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் தமிழ்நாட்டு வர்த்தக பங்காளிகளும் முகவர்களும் துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதில் திமுக தெளிவாக இல்லாமல் போனது முதல் தவறு.
அமிர்தலிங்கம் முதல் தங்கள் ஆட்சிக்கே உலைவைத்த பத்மநாபா உள்ளிட்ட 16 பேர் சென்னை படுகொலை; தமிழ்நாட்டில் ராஜிவ் காந்தியின் கோரக்கொலைகளுக்குப்பின்னும் "ஈழத்தமிழர் நலம்" என்கிற பேரில் விடுதலைப்புலிகளை எதிர்க்காமல் திமுக காட்டிய மென்போக்கு அதன் இரண்டாவது வரலாற்றுக்குற்றம்.
தம்மை எதிர்ப்பவர்களை எல்லாம் ஒருவர் விடாமல்தொடர்ந்து கொன்று குவித்த போராளிகளை இந்திய அளவில் அரசியல் செய்யும் திமுக போன்ற மைய நீரோட்ட அரசியல் கட்சியும் அதன் அறிஞர் குழாமும் எந்த எதிர்க்கேள்வியும் கேட்காமல் தொடர்ந்து ஆதரித்ததன் விளைவு விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாமல் கெடும்" என்கிற குறளுக்கு நம் கால உதாரணமாக மாறி தாமும் அழிந்து தம்மை நம்பிய ஈழத்தமிழர்களையும் நட்டாற்றில் விட்டுச்சென்றார்கள்.
கலைஞரின் உணர்வுப்பூர்வமான முக்கிய முடிவுகள் இரண்டு--- ஈழத்தமிழர் ஆதரவு என்கிற பெயரிலான விடுதலைப்புலிகளுக்கான நிபந்தனையற்ற ஆதரவு; தம் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் காட்டிய சலுகை.
இரண்டுமே அவருக்கும் அவர் கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் நன்மை செய்யவில்லை என்பது மட்டுமல்ல தீமையை மட்டுமே திரும்பக்கொடுத்தன. காரணம் இரு தரப்புமே அவரது ஆதரவை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்தார்கள்.
2-ஜி விவகாரத்தில் மாறன் சகோதரர்களும்; பிடிவாதமாக மத்திய அமைச்சராகியும் தன் ரௌடித்தனத்தை இன்றுவரை கைவிடாத மு க அழகிரியும், கொலைகளின் மூலமே கொள்கையை வெல்ல முடியும் என்று இறுதிவரை செயற்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனும் திமுகவின் வரலாற்றுப்பிழைகளின் மறக்கக்கூடாத முன்னுதாரணங்கள்.

கருத்துகள் இல்லை: