செவ்வாய், 8 ஜனவரி, 2019

தகுதி நீக்க வழக்கு உச்சக்கட்டம் ! பதற்றத்தில் பன்னீர்

டிஜிட்டல் திண்ணை:  தகுதி நீக்க வழக்கு க்ளைமாக்ஸ்: பதற்றத்தில் பன்னீர்மின்னம்பலம் : “தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டபோது அவரது அரசை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர் இன்று துணை முதல்வராக இருக்கிறார். மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் பழனிசாமி அரசை எதிர்த்து வாக்களித்த பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கு நாளை ஜனவரி 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. திமுக, அதிமுக, அமமுக, பாஜக என தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தின் கவனத்தையும் டெல்லியை நோக்கித் திருப்பியிருக்கிறது.
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே. மாஃபா பாண்டிய ராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர். நடராஜ் ஆகிய 11 பேரும் 2017 பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்த்து வாக்களித்தனர்.

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர் உட்பட 11 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா என்ற முறையில் சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் 2018 ஏப்ரல் 27 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய முதன்மை அமர்வு தீர்ப்பளித்தது. ‘சபாநாயகர் ஏதேனும் ஒரு முடிவு எடுத்திருந்தால் அதை நீதிமன்றம் ரிவ்யூ செய்யலாம். ஆனால் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் குறிப்பிட்ட ஒரு முடிவை எடுக்கும்படி நீதிமன்றம் வலியுறுத்த முடியாது’ என்று சொல்லி சக்கரபாணியின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதையடுத்து சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்குதான் இப்போது தீர்ப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமரவு முன் நடந்து வரும் இந்த வழக்கு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் வாதாடுகையில், ‘தான் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்சியை விட்டுப் போனாலோ, அல்லது சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் தனது கட்சிக் கொறடாவின் உத்தரவை எதிர்த்து வாக்களித்தாலோ கட்சித் தாவல் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பதவி தானாகவே போய்விடும். ஒருவேளை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை அவர்களை மன்னித்தால் அவர்களின் பதவி தப்பும். ஆனால் பன்னீர் உள்ளிட்ட 11 பேரை அப்போதைய கட்சித் தலைமை மன்னிக்கவில்லை. எனவே அவர்கள் 11 பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்த்து வாக்களித்த 2017 பிப்ரவரி 18 ஆம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து இழந்துவிட்டார்கள்’ என்று வாதாடினார்.
பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ். வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் வாதாடினார்கள். அவர்களின் வாதத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால், ‘எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரும்போது அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவிடவே இல்லை. எனவே கட்சித் தாவல் சடை சட்டத்தின்படி பதவி பறிபோகும் என்ற பேச்சே எழவில்லை’ என டெக்னிக்கலாக வாதத்தை முன் வைத்தனர்.
கபில்சிபல் இதற்கு பதிலளிக்கையில், ‘குறிப்பிட்ட ஒரு மசோதாவை கொண்டுவரும்போதுதான் இதை ஆதரியுங்கள், எதிர்த்து வாக்களியுங்கள் என்று கொறடா உத்தரவிடுவார். ஆனால் 2017 பிப்ரவரி 18 ஆம்தேதி பன்னீர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை சேர்ந்த முதலமைச்சர் நம்பிக்கை வாக்கு கோருகிறார். அப்போது இரட்டை இலை சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் பன்னீர் உள்ளிட்ட 11 பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத்தான் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் கட்சியை சேர்ந்த முதல்வரையே எதிர்த்து வாக்களித்தனர். ஆகவே இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டியவர்கள்தான்’ என்று வாதிட்டார் கபில்சிபல்.
இவ்வாறு டிசம்பர் 24 ஆம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை ஜனவரி 9 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நாளை இறுதி வாதங்கள் நடைபெறும். அதையடுத்து இன்னும் இரண்டு வாரங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.
பன்னீர் உள்ளிட்ட 11 பேரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் நீடிக்குமா இல்லையா என்பது தெரியும். இந்நிலையில் பன்னீர் தரப்பில் இந்த வழக்கு விஷயமாக டெல்லியைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். பாஜக தரப்பிலோ,’இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்போது நாங்கள் எதுவுமே செய்ய முடியாது’ என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் பன்னீர் தரப்பில் லேசான பதற்றத்தில்தான் இருக்கிறார்கள். அந்த 10 பேரும் ஓ.பன்னீரிடம் சில நாட்களாகவே இந்த வழக்கு பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீரும் அவர்களிடம், ‘தீர்ப்பு சீக்கிரம் வருதா என்னனு பார்ப்போம்’ என்று சொல்லி வருகிறாராம். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று சொல்லப்பட்டபோது மகிழ்ச்சி தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரும் இந்த வழக்கின் போக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கை வருவதற்கு முன்னதாக இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும் வாய்ப்புள்ளது என்பதாலும், வழக்கின் சட்ட ரீதியான பயணத்தை அறிந்தும் பன்னீர் தரப்பு பதற்றத்தில் இருக்கிறது. திமுக தரப்போ இன்னும் ஒரு மினி சட்டமன்றத் தேர்தல் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: