வியாழன், 10 ஜனவரி, 2019

சபரிமலையில் 35 வயது பெண் தரிசனம் விடியோ ... வயதானவர் போல் தோற்றத்தை மாற்றி


தினத்தந்தி ;  சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் 35 வயது பெண் வயதானவர் போல் தோற்றத்தை மாற்றி சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருவனந்தபுரம், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.  இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலைக்கு பெண்களால் செல்ல முடியவில்லை. இதையொட்டி சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. கடந்த ஜனவரி 04-ம் தேதி அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் நடை  அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  குறிப்பாக கேரளாவை சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதனால் மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறின. பதட்டமான நிலையே தொடர்கிறது.


இந்நிலையில், மகர விளக்குக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் மேலும் ஒரு பெண் சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான மஞ்சு என்பவர் அய்யப்பன் கோயிலில் 18 படி ஏறி தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டு கேரள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

வீடியோவில் வயதானவர் போல் தோற்றத்தை மாற்றி தலைமுடிக்கு வெள்ளை 'டை' அடித்து, மாறு வேடமணிந்து அவர் சாமி தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மீண்டும் சபரிமலையில் இந்து அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: