வெள்ளி, 11 ஜனவரி, 2019

பிரமிக்க வைக்கும் புத்தக கண்காட்சி .. நம்பமுடியாத அளவு பிரமாண்டம் .. கண்டிப்பாக காணவேண்டிய கருவூலம்


சாவித்திரி கண்ணன் : அடேங்கப்பா...! சென்னை புத்தக கண்காட்சியை பிரமாண்டம் என்பதை விட பூதாகரமாக இருந்தது என்று சொல்வதே பொருந்தும்!
பாதி அரங்கத்தை பார்த்து தேடி நாம் விரும்பிய புத்தகங்களை கண்டடைவதற்குள் கால் கடுத்து,சோர்வு மேலோங்கி இன்னொரு நாள் வரலாமே..என தோன்றிவிடுகிறது...!
எனக்கு நினைவு தெரிந்து 1975 அல்லது1976 ஆக இருக்கலாம்.. ராஜாஜி ஹாலில் அப்போது புத்தக கண்காட்சி நடந்தது.அன்று பாபாசி தோற்றம் பெறவில்லை.என் தந்தை மீனாட்சி புத்தக நிலையத்தில் பணியாற்றினார்.அதனால் சனி,ஞாயிறு கிழமைகளில் என் அம்மாவையும் ஸ்டாலில் தனக்கு துணைகழைத்துச் சென்றார். குட்டிப் பையனான நானும் கூடமாட ஒத்தாசைக்கு இருக்கட்டுமே என அழைத்துச் செல்லப்பட்டேன்.இதனால் ஒவ்வொரு ஸ்டாலாக சென்று குழந்தைகளுக்கான புத்தகங்களை கையில் எடுத்துப் பார்த்து புரட்டி சந்தோஷமடைந்தேன்.பிடிவாதம் பிடித்து ஒரிரு புத்தகங்களை வாங்கினேன்.அப்போது கிடைத்த பேரானந்தத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது...!

1984 ல் நான் முதன்முதலாக புகைப்படம் எடுத்து சம்பாதித்த 100 ரூபாயை அப்படியே எடுத்து சென்று பத்திற்கு மேற்பட்ட ஜெயகாந்தன் புத்தங்களை வாங்கினேன்.இன்று கையில் ஆயிரம் ரூபாய் இருந்தால் கூட 10 புத்தகங்கள் வாங்குவதை நினைத்து பார்க்க முடியாது.
1980 களின் இறுதியிலும் 1990 களின் ஆரம்பத்திலும் புத்தக வாசிப்பு தீவிரமடைந்த கால கட்டங்கலில் என் சி பி எச் தான் என்னைப் போன்றவர்களின் அறிவு பசிக்குத் தீனி போட்டது.அவ்வளவு மலிவு விலையில் மார்க்சிம் கார்கி,இவான் துர்கனேவ்,சிங்கீஸ் ஐத்மாத்தவ்..போன்ற பல சோவியத் எழுத்தாளர்களின் படைப்புகளை படிக்க முடிந்தது.!
டைமண்ட் பாக்கெட் புக்ஸ் 10 ,15 ரூபாய் விலையில் ஓசோ ரஜினீஸ் சின் ஆங்கில புத்தகங்கள் தந்து புதிய உலகை காண வைத்ததையும், லிப்கோ பதிப்பகத்தாரும் பல புத்தகங்களை மலிவு விலையில் கொண்டு வந்து அறிவுத் தாகத்திற்கு அமிர்தம் தந்ததையெல்லாம் நினைத்து இன்று பெரு மூச்சு தான் விட முடியும்!
என் காலத்திற்கு முன்பு சக்தி வை கோவிந்தன் பதிப்பகத்துறையில்மிகஉன்னதபடைப்புகளையெல்லாம் ஒரு ரூபாய் என்ற விலைக்கெல்லாம் தந்துள்ளார் என கேள்விப்பட்டுள்ளேன்.
இன்று புத்தகச் சந்தை பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும்,அதீத விலை அச்சுறுத்தும் வண்ணம் உள்ளது.உழவர்களே தங்கள் வேளாண் பொருட்களை சந்தைபடுத்தும் சந்தையை போல
புத்தக கண்காட்சியில் பதிப்பகத்தார் மட்டுமே இடம் பெற்றால் நன்று.இன்னும் கூட கூடுதலாக கழிவு தர முடியும்.விற்பனையாளர்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட்டால் இவ்வளவு அதிக ஸ்டால்கள் தேவைபடாது.அச்சுத் துறை சம்பந்தமில்லாத ஆன்மீக அமைப்புகளையும்,மற்ற நிறுவனங்களையும் தவிர்க்க முடிந்தால் இவ்வளவு அதிக பரப்பளவில் வாசகர்களை கால்கடுக்க அலையவிடும் அலைச்சல் மிச்சமாகும்.!
மற்றொன்று அவரவர் புத்தகங்களை அவரவர் விற்றால் போதாதா? ஒரே புத்தத்தை பத்து இருபது இடங்களில் வைத்து ஆக்கிரமிப்பு செய்வானேன்?இது வாசகனுக்கு பெரும் சலிப்பு தருகிறது.
பழைய ஆட்களே நிறைய ஸ்டால்களை வெவ்வேறு பெயர்களில் எடுத்து புத்தக சந்தையை ஆக்கிரமிக்க கூடாது.தங்கள் தேவைக்கு ஏற்ப ஒரு மிகப் பெரிய இடத்தை எடுத்துக் கொண்டு ஒரே இடத்தில் டிஸ்பிளே செய்தால் சந்தையின் பரப்பளவு வீங்கி பெருக்காமல் தவிர்க்கலாம்! புதிய சிந்தனையை தாங்கி வரும் புதிய சிறிய பதிப்பகங்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறதா என்பதில் தான் அறிவுலகின் நாணயமும், ஜனநாயகத் தன்மையும் காப்பாற்றப்படும்.
மேலும் கண்காட்சியில் வாய்ப்பு இல்லாத மிகச்சிறிய பதிப்பகங்களின் அல்லது தனி ஒரு எழுத்தாளர் தானே பதிப்பித்துள்ள படைப்புகளை விற்றுக் கொடுப்பதற்கு என்று ஏற்பாடு இருப்பது மிகவும் முக்கியம்.
மேலும், விற்பனையாகாமல் தேங்கிவிட்ட புத்தகங்களில் சிலவற்றை விலையின்றி எடுத்துச் செல்லும் வாய்ப்பை இந்த ஆண்டு காலச் சுவடு அரங்கில் கண்டேன்.இதை மற்றவர்களும் பின்பற்றலாம்...!
சாவித்திரி கண்ணன் என்ற எழுத்தாளனாக மட்டுமல்ல.ஒரு வாசகனாகவும் மேற்படி கோரிக்கைகளை முன் வைக்கிறேன் சம்பந்தப்பட்டவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்!

கருத்துகள் இல்லை: