செவ்வாய், 8 ஜனவரி, 2019

ஸ்டெர்லைட்.. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு: ஸ்டெர்லைட்!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்குமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு அளிக்கவுள்ளதாக ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் ஆலையைத் திறக்கத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஆகிய இரண்டையும் உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 8) விசாரணை செய்தது. அப்போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மீண்டும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுக வேண்டியுள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு எப்போதும் நல்லது செய்வதே எங்கள் எண்ணம்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்த பிறகே ஆலையைத் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும். பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபந்தனைகள் பின்பற்றப்படுவது குறித்து, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். அதை ஆய்வு செய்து, 3 வாரத்திற்குள் மாசுக் கட்டுப்பாரியம் பதிலளிக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவாகும்” என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: