ஞாயிறு, 6 ஜனவரி, 2019

மீண்டும் ஐயப்பனை தரிசிக்க விரும்பும் .. பிந்து .. கனகதுர்கா ,, பேட்டி விடியோ


மின்னம்பலம் : சபரிமலை சன்னிதானத்துக்குள் சென்ற பிந்து, கனகதுர்கா இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்தும் மீண்டும் ஐயப்பனைத் தரிசிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிந்துவும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கனகதுர்காவும், கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று சபரிமலை சன்னிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். விஐபிக்கள் செல்லும் பின்புறப் பாதை வழியாக இவர்கள் கோயிலுக்குள் நுழைந்த தகவல் வெளியானதையடுத்து, இந்துத்துவ அமைப்புகள் கேரளாவில் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்தச் சூழலில், பிந்து மற்றும் கனகதுர்காவின் பேட்டியை வெளியிட்டுள்ளது என்டிடிவி ஊடகம்.
“எனது உயிர் ஆபத்தில் இருப்பது தெரியும். ஆனாலும், சபரிமலை சன்னிதானம் மீண்டும் செல்ல விரும்புகிறேன். சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதை நாங்கள் எளிதாக்கிவிட்டோம் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். கோயிலுக்குச் சென்றது எங்களது அரசியலமைப்பு உரிமை. பக்தி, பாலின சமத்துவம் இரண்டையும் இது வெளிப்படுத்தும்” என்று கூறினார் கனகதுர்கா.

சபரிமலை சன்னிதானத்துக்குள் சென்றதைத் தங்களது குடும்பத்தினர் விரும்பவில்லை என்று பிந்து, கனகதுர்கா இருவருமே தெரிவித்தனர். அதே நேரத்தில், கேரளாவில் தங்களுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தையும் வன்முறையையும் குறைந்த அளவிலான மக்களே நடத்தி வருவதாகக் குறிப்பிட்டனர்.
“கேரளாவில் தற்போது போராடி வரும் மக்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர். பெரும்பாலான மக்கள் எங்களை மதிக்கின்றனர்; ஆதரவு தருகின்றனர். கட்சிகள் தான் இதை வைத்து அரசியல் செய்கின்றன” என்று தெரிவித்தார் பிந்து. தங்களுக்கு கேரள மாநில அரசு மறைமுக ஆதரவு தந்துவருவதாகக் கிளம்பியுள்ள சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்தார்.
“இதுவரை மாநில அரசோ, முதலமைச்சரை எங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசவில்லை. ஆனால், சபரிமலை அடிவார முகாமுக்குச் சென்றதும், சன்னிதானம் செல்ல எல்லா பெண்களையும் போல எங்களுக்கும் பாதுகாப்பு அளித்தது அரசு” என்றார் பிந்து.
டேங்கர் லாரி ஓட்டுநரின் பின்பக்கத்தில் அமர்ந்து இருவரும் சபரிமலை சென்றதாகவும், அதன் பின்னர் சீருடை அணியாத போலீசாரின் பாதுகாப்புடன் இவர்கள் சன்னிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாங்கள் சன்னிதானத்துக்குள் சென்று வந்ததும் பரிகார பூஜைகள் செய்தது தங்களை அவமானப்படுத்தியதாகக் கூறியுள்ளனர் பிந்து, கனகதுர்கா இருவரும்.

கருத்துகள் இல்லை: