செவ்வாய், 25 செப்டம்பர், 2018

இயக்குனர் திருப்பதிராஜன் : சில்க் ஸ்மிதா தற்கொலை செய்யவில்லை .. இறந்த பின்பும் கொடுமைகள் ? அதிர்ச்சி பேட்டி

சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை.. இயக்குநர் பரபரப்பு
தகவல்
சென்னை: நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று பரபரப்பு தகவலை இயக்குநர் திருப்பதிராஜன் வெளியிட்டார். இதுகுறித்து இயக்குநர் திருப்பதிராஜன் தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் நான் அரசு வேலையில் இருந்தேன். அப்போதுதான் வீணையும் நாதமும் என்ற படத்துக்காக ஹீரோயினை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண் இந்த படத்துக்கு பொருத்தமாக இருப்பார் என கூறி என்னை என் நண்பர் அந்த இடத்துக்கு அழைத்து சென்றார். அப்போது விஜயலட்சுமி என்ற அந்த பெண்ணுக்கு சுமிதா என்ற பெயரை வைத்தேன்.

 கடந்த 1980-ஆம் ஆண்டு ரூ.6000-க்கு அக்ரிமென்ட் எழுதி அவரை என் படத்தில் ஒப்பந்தம் செய்தேன். அந்த அக்ரிமென்டில் சுமிதா போட்ட கையெழுத்துடன் என் அலுவலகத்தில் ஃபிரேம் போட்டு வைத்துள்ளேன். இந்த படத்துக்காக 1600 ரூபாய் முன்பணமாக கொடுத்தேன். சில்க் ஸ்மிதாவை வண்டி சக்கரம் படத்தில் வினு சக்கரவர்த்திதான் அறிமுகம் செய்து வைத்ததாக கூறுவது குறித்து கேட்கிறீர்கள். கோவூரில் நாங்கள் வீணையும் நாதமும் படத்துக்காக கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வந்தோம்.
அப்போது வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட 3 பேர் என்னிடம் வந்து சுமிதாவை நடிக்க கேட்டார்கள். நானும் கிளைமாக்ஸ் முடிந்தவுடன் அழைத்து செல்லுங்கள் என்றேன். அதன்பிறகுதான் வண்டி சக்கரம் என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார். அந்த படத்தில் சில்க் என்ற கேரக்டரில் நடித்ததால் அவர் சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார். அவர் புகழின் உச்சிக்கு சென்றவுடன் என்னை மறந்துவிட்டார். எனது படத்தில் நடித்துக் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அந்த கோபத்தில் நான் இருந்தேன்.

 திடீரென அவர் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர் என்னை பார்க்க விரும்புவதாக கூறினார்கள். அப்போது அவர் நன்றி கெட்டவர் நான் அவரை பார்க்க விரும்பவில்லை என்றேன். எனினும் என்னை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். படப்பிடிப்பில் நான் சென்று பார்த்தபோது என்னை ஏன் அழைத்தாய் என கேட்டேன். அப்போது அவர் கண்கலங்கினார். உடனே அவர் ஏதோ கஷ்டத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அவரை பார்க்க வீட்டுக்கு சென்றபோது கூட ஒரு 4 அல்லது 5 குண்டர்கள் பாதுகாப்பாக இருந்து என்னை பார்க்க விடாமல் தடுத்தனர். தாடிக்காரர் ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் சில்க் ஸ்மிதா இருந்தார்.
அந்த தாடிக்காரர் அவருக்கு சப்போர்ட்டாக இருந்தது உண்மைதான். ஆனால் என்னுடைய படங்களில் அவர் நடித்த போது அந்த தாடிக்காரர் வந்ததில்லை. ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த படங்களில் அந்த தாடிக்காரர் உடன் இருப்பார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அந்த தாடிக்காரரின் பிடியில்தான் சில்க் இருந்தார்.

சில அரசியல்வாதிகளின் பிடியிலும் சில்க் இருந்தார். ரவுடித்தனத்தை கையில் வைத்து கொண்டு அவரை வைத்து படம் எடுப்பதாக கூறி அவரிடம் இருந்த பணத்தை நாசம் செய்து அவரது கடைசி காலத்தில் கையில் காசு கூட இல்லாமல் அவரை தெருவில் விட்டு விட்டனர். அரசியல்வாதியின் மகன் ஒருவன் தலையிட்டார். சில்க் மீது நிறைய பேர் ஆசைப்பட்டனர்.

கடைசியாக சில்க் இறந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு என்னென்ன கொடுமைகளை எத்தனை பேர் செய்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். சில்க் ஸ்மிதாவை பொருத்தவரையில் அது தற்கொலை அல்ல.
 இவரது கடைசி காலமும் ஏகப்பட்ட துன்பங்கள் நிறைந்தது. இது அல்லாமல் இன்னும் ஏராளமான விஷயம் இருக்கிறது. அதை நான் புத்தகமாக எழுதி வருகிறேன். டர்ட்டி பிக்சர் படத்தில் காட்டப்பட்ட சில்க் ஸ்மிதாவுக்கும் நிஜத்தில் இருந்த ஸ்மிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

டர்ட்டி பிக்சர் படம் சித்தரிக்கப்பட்டவை. சில்க் ஸ்மிதா சாக போகிறார் என்பது அவருக்கு 10 நாட்களுக்கு முன்பே தெரியும். அவரை வைத்து நன்கு பணம் சம்பாதித்துவிட்டு அவரை நடுத்தெருவில் விட்டனர்.
கோடி கோடியாக பணம் சம்பாதித்த சில்க் ஏன் சாக வேண்டும். சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் என்ற படத்தை வெளியிடவுள்ளேன் என்று இயக்குநர் திருப்பதி ராஜன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: