சனி, 29 செப்டம்பர், 2018

ரமணா பட பாணியில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்த K.G hospital மருத்துவமனை- தஞ்சாவூர்

ரமணா பட பாணியில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்மாலைமலர் :தஞ்சை ஆஸ்பத்திரி நிர்வாகம் பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்து விட்டதாக எழுந்துள்ள புகார் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேகர் தஞ்சாவூர்: நாகை மாவட்டம், திருக்குவளை அருகே கீழைஈசனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் நாகை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். சேகருக்கு குடல் இறக்க நோய் இருந்து வந்தது. இந்நிலையில் சேகரை நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 7-ம் தேதி சிகிச்சைக்காக அவரது மகன் சுபாஷ் அனுமதித்தார். அங்கு சேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன் பின்னரும் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரி டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கடந்த 8-ந் தேதி தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முதல் தவணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கட்டும்படி கூறியுள்ளனர். பணம் கட்டி முடிந்த பின்பு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவரது உறவினர்கள் சேகரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அழைத்து செல்கிறோம் என்று கூறியுள்ளனர். அப்போது அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் நிலுவை தொகை ரூ.5 லட்சத்தை கட்டும்படி கூறியுள்ளது.

இதையடுத்து ரூ.50 ஆயிரத்தை கட்டிவிட்டு மீதி பணத்தை சில தினங்களில் கட்டி விடுகிறோம் என்று எழுதி கொடுத்து விட்டு சேகரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சேகர் இறந்து 3 நாட்கள் ஆகி விட்டதாக தெரிவித்தனர். இதனால் சேகர் மகன் சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து சேகரின் குடும்பத்தினர் தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சந்தேகப்படும் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று மதியம் சேகர் உடலை பிரேத பரிசோதனை செய்கின்றனர். அதில் அவர் எப்போது இறந்தார்? என்பது உறுதி செய்யப்பட்டு அதன் பின்னர் தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தஞ்சை ஆஸ்பத்திரி நிர்வாகம் பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்துவிட்டதாக எழுந்துள்ள புகார் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: