சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ் சினிமாவிற்கு தப்பிவந்த ‘இளவரசன்’! பரியேறும் பெருமாள்

தமிழ் சினிமாவிற்கு தப்பிவந்த ‘இளவரசன்’!minnambalam :மதரா :பரியேறும் பெருமாள்: திரைப்பார்வை ஆதிக்க சாதி ஒன்றின் பெயரைத் தாங்கி எடுக்கப்பட்ட ஒரு படமும் அதன் பாடலும் 90களில் தென் தமிழகத்தில் பல்வேறு சாதி மோதல்களை ஏற்படுத்தின. அதே வரிசையில் சாதியைத் தூக்கிப் பிடித்த, ஒடுக்கப்பட்டோர் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்திய பல படங்கள் வெளியாகியுள்ளன; இன்னமும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அரிவாளை சட்டையின் பின்னால் சொருகுவதற்கும் மீசையை முறுக்குவதற்கும் பாடம் எடுத்த தமிழ் சினிமா தன் பாவங்களை கழுவிக்கொள்வதற்காக வெளிவந்துள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’.

தென் தமிழகத்திலிருந்து ‘மண் மணம்’ மாறாமல் உருவாகும் பெரும்பாலான படங்கள் ஆதிக்க சாதிகளின் பெருமைகளை பேசுவதாகவே அமைந்துள்ளன. “சமூகத்துல இருக்குறத தானே காட்டுகிறோம்” என்று அதை உருவாக்குபவர்கள் காரணம் சொல்ல, அதே பதிலை திருப்பிச் சொல்லி அவர்கள் காட்ட மறந்த, மறுத்த மற்றொரு பகுதியை நோக்கி கேமராவை திருப்பியிருக்கிறார் மாரி செல்வராஜ். தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமான இவர் திரையுலகிலும் தனது முத்திரையை முதல் படத்திலேயே வலுவாக பதித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சினிமாவிற்காக தடத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான பா.இரஞ்சித் முதன்முறையாக தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். கதிர், ஆனந்தி இணைந்து நடித்துள்ளனர்.

ஊர் பிரச்சினைக்காக பேச வக்கீல் ஆவதே வழி என்று அறிந்து சட்டக்கல்லூரியில் சேர்கிறார் பரியேறும் பெருமாள் (கதிர்). ஆங்கிலம் வராத பரியனுக்கு ஜோ (எ) ஜோதி மகாலட்சுமி (ஆனந்தி) உதவிசெய்ய இருவருக்கும் நட்பு மலர்கிறது. சாதி என்பது நீக்கமற நிறைந்திருக்கும் பகுதியில் ஆதிக்க சாதியைச் சார்ந்த பெண்ணான ஜோவுடன் பழகுவதால் பரியன் வாழ்வில் நிகழும் கொடூரமான சம்பவங்கள் தான் திரைக்கதையாக விரிகின்றன. இது என்ன தமிழ் சினிமா இதுவரையில் பார்க்காத கதையா எனக் கேட்டால் ஆம், பார்த்திராத பல கதைகளின் தொகுப்பு தான் பரியேறும் பெருமாள்.
திருநெல்வேலியும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளையும் கதைக்களமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. அரிவாள்களும் டாடா சுமோக்களும் இல்லாமல் வறண்டு போன புதர்காட்டில் முயல் வேட்டையாட நாய்களோடு அறிமுகமாகின்றனர் கதை மாந்தர்கள். ஆதிக்க சாதியினருக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான பகையும் வெறியும் புகைந்துகொண்டிருக்க தொடங்கும் முதல் காட்சியே பார்வையாளர்களுக்கு படம் பயணிக்கப் போகும் பாதையை தெளிவுபடுத்துகிறது.
வறண்டு போன கட்டாந்தரைகளும், வேலிக்கருவைகளும், திருநெல்வேலி நகரத்தின் சாலைகளும் கச்சிதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. கிராமம் என்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை, வெள்ளிந்தி மனிதர்கள், வாய்க்கால் தண்ணீரில் மீன் பிடித்தல் என சினிமாவில் மட்டும் தென்படும் கிராமமாக அல்லாமல் பாசம், வெறுப்பு, வன்மம், கொடூரம் எல்லாம் நிறைந்திருக்கும் அசல் மனிதர்களின் கதையாக பயணிக்கிறது. கல்லூரியில் நடக்கும் இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன. நகைச்சுவைக்காட்சியாக இருந்தாலும் தனது பாதையில் இருந்து விலகாமல் இயக்குநர் தொடர்ந்து அதில் நடைபோடுகிறார்.

காட்சிகளுக்காக ரூம் போட்டு யோசிக்காமல் தான் பார்த்த அனுபவித்த சம்பவங்களையே திரைக்கதையில் அள்ளித் தெளித்துள்ளார் மாரி செல்வராஜ். நிஜம் கற்பனையை விட சுவாரஸ்யமானது மட்டுமல்ல கொடூரமானது என்பதை ஒவ்வொரு காட்சிகளும் உணரவைக்கின்றன. யூகிக்க முடியாத பழிவாங்கல்களும் வன்மமும் சாதாரணமாய் அரங்கேறுகின்றன. திரைப்படங்களுக்காக இதுகாறும் காட்டி வந்த போலிப் பாவணைகளை எல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் காயங்களை பெரிய திரையில் காட்சிப்படுத்துகிறார். சாதிவெறிக்கு பலியானவர்களையும், உயிரைத்தவிர அனைத்தையும் இழந்தவர்களையும் திரைக்குள் கொண்டுவந்து அக்கொடுமைகளுக்கு பார்வையாளர்களை சாட்சிகளாக்குறார் இயக்குநர்.
சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேடி நடித்துவரும் கதிர் இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தேவதையாக வந்து செல்லும் ஆனந்தி ஜோ கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியுள்ளார். நகைச்சுவை நடிகர் என்பதை கடந்து யோகி பாபுவுக்கு இது முக்கியமான படமாக அமைந்துள்ளது. சண்முகராஜ் ஒரிரு காட்சியில் வந்தாலும் கவனம் பெறுகிறார். ஆனந்தியின் அப்பாவாக வரும் மாரிமுத்து, குலதெய்வத்துக்கு செய்யுறதா நினைச்சு ‘செஞ்சு ’விடும் பெரியவர், கல்லூரி முதல்வர் ‘பூ’ராம், முக்கியமாக கதிரின் அப்பா ஆகிய கதாபாத்திரங்கள் தான் திரைக்கதையின் ஜீவ நாடி. அந்த கதாபாத்திரங்களை விளக்குவதே கதையை விளக்குவது போலாகிவிடும் என்பதிலேயே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
காத்திரமான பிரச்சினைகளை பேசக்கூடிய படங்கள் பிரச்சாரத் தொனிக்கு சட்டென மாறிவிடுவது பல நேரங்களில் நிகழ்ந்துள்ளன. ஆனால் இதில் அதற்கான வாய்ப்பே இல்லை. அடர்த்தியான காட்சிகளாலும் அது எடுக்கப்பட்ட விதத்தாலும் காட்சி ரீதியாக பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளன.
தமிழக கிராமத்தைக் கதைக்களமாக கொண்டு உருவான ஒவ்வொரு படத்திலும் ஒரு திருவிழாக்காட்சி பாடலுடன் இடம்பெறும். காதலியைப் பார்க்கும் இடமாக, எதிர் கோஷ்டியோடு சண்டை போடும் இடமாக, ஊரின் அல்லது கதாநாயகனின் பெருமை பேசும் விதமாக அப்பாடல் காட்சி அமைந்திருக்கும். இந்த படத்திலும் ஒரு கிராமத்து திருவிழாக்காட்சி பாடலுடன் இடம்பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கும் விதமாக அமைந்துள்ள அக்காட்சியை அவ்வளவு எளிதாக கடந்து போய்விடமுடியாது.

‘அவங்கட்ட தான வயலும் வரப்பும் இருக்கு; நம்மட்ட வாயும் வயிறும் தானே இருக்கு’, ‘உன் மானத்தை நீ காப்பாத்தலை நான் காப்பாத்திகிட்டு இருக்கேன்’ ‘தூக்குல தொங்காம நாலு பேரை அடிச்சா அடிக்கட்டும்’ போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல வசனங்கள் அந்தந்த இடங்களில் இயல்பாய்வந்து விழுகின்றன. வசனங்கள் மூலமாக மட்டுமல்லாமல் சின்ன சின்ன ஷாட்டுகள் மூலமாகவும் எடுத்துக்கொண்ட கருப்பொருளை கச்சிதமாக கடத்தமுற்பட்டுள்ளார் இயக்குநர். ஏற்கெனவே இருக்கும் குறிப்பிட்ட ஒரு போஸ்டரின் மேல் தாமிரபரணி படுகொலை நினைவு போஸ்டர் ஒட்டுவது, முக்கிய வில்லன் கதாபாத்திரம் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது என பல இடங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
கிளைமாக்ஸ் காட்சியில் பரியன் கார் கண்ணாடியை உடைத்து வெடித்துப் பேசுவது , சாதி வெறிபிடித்து தன்னை கொல்லவந்தவரிடம் அல்ல; பார்வையாளர்களிடத்தில் தான். அவரைப் போலவே பார்வையாளர்களாகிய இந்த சமூகமும் வெட்கி தலைகுனியும் இடம் அது.
பின்னணி இசை, சரியான இடத்தில் ஒலிக்கும் பாடல்கள் ஆகியவற்றில் சந்தோஷ் நாராயணனின் உழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு அந்த மண்ணின் வெக்கையைக் கூட திரையில் காட்டுகிறது.

சாதிக்கொடுமை என்பது இந்திய ஒன்றியம் முழுக்க நிரம்பிக்கிடக்கின்றது. இந்த ஒன்றியத்தின் மிக முக்கியப் பிரச்சினையை காத்திரமாக எத்தனைப் படங்கள் பேசியுள்ளன என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். மராட்டியில் நாகராஜ் மஞ்சுளே போன்ற இயக்குநர்கள் அதை செய்து காட்டியுள்ளனர். அவரது ஃபன்றியும், சாய்ரத்தும் மிக முக்கிய படங்கள். குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை மையமாகக்கொண்டு மக்களின் வாழ்வியலோடு தரமான காட்சி மொழியில் படைத்திருப்பார். தமிழில் அத்தகைய படங்கள் வரவில்லையே என்ற குறையை பரியேறும் பெருமாள் போக்கியுள்ளது. அதனிலும் ஒரு படிபோய் பல்வேறு சம்பவங்களை சரியான விதத்தில் சிறந்த காட்சிமொழியுடன் கையாண்டுள்ளார். தமிழில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைப் பேச பா.இரஞ்சித் பாதை போட அதில் கம்பீரமாக பரியேறி வந்துள்ளார் மாரி செல்வராஜ். உண்மையில் அந்த கொடூரங்களின் பிடியிலிருந்து தமிழ் சினிமாவுக்கு தப்பிவந்த ‘இளவரசன்’ இவர்.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
பீம் (BHIM) Android / IOS
டெஸ் (TEZ) Android / IOS
போன்பே (PhonePe) Android / IOS
பேடிஎம் (Paytm) Android / IOS
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
en.minnambalam.com/subscribe.html
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477

கருத்துகள் இல்லை: