ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதை மக்கள் விரும்பவில்லை ... ஆய்வு குழு தலைவர் பேட்டி

ஆய்வுக்குழு தலைவர்vikatan.com -.karthikeyan : "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என மனு அளித்தவர்களே அதிகம். ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது" என பசுமைத் தீர்ப்பாயத்தின் ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா? வேண்டாமா? என ஆய்வு செய்திட, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழு நேற்று ஆய்வினைத் துவக்கியது. இரண்டாம் நாளான இன்று, ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து, ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற, குமரெட்டியாபுரம் கிராமத்தில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதேபோல தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 2 மணி நேரம் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது ஆய்வுக்குழுவினரிடம் மக்கள் மனு அளித்தனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுக்குழுவின தலைவர் தருண் அகர்வால், "ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நேற்று ஆய்வினைத் துவக்கினோம். தாமிரக்கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தோம். ஸ்டெர்லைட் ஆலைக்குள் யூனிட்டுகள், குடோன்கள் என  பல இடங்களில் ஆய்வு செய்தோம். போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தோம். குமாரகிரி என்ற கிராமத்தில் குளத்தினை ஆய்வு செய்தோம்.
ஆலை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள், குறைகள் குறித்து மக்கள் கருத்து தெரிவித்தனர். ஆலை மீண்டும் திறக்க கூடாது என்பதே அதிகமானவர்களின் கோரிக்கையாக இருந்தது. ஆலை திறக்க வேண்டாம் என சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மற்றும் மக்களின் கருத்துக்கள், மனுக்கள் அடிப்படையிலான ஆய்வறிக்கை 6 வார காலத்திற்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும்." என்றார்.

கருத்துகள் இல்லை: