வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

ஸ்டாலின் வாஜ்பாய்க்கு இரங்கல் :ஆட்சிக்கே ஆபத்து என்று தெரிந்தும் ..

NDTV -: தனது ஆட்சிக்கே ஆபத்து என்று தெரிந்தும் கூட…’- வாஜ்பாய்க்கு
இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்" முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். இன்று அவரின் இறுதிச் சடங்கு டெல்லியில் நடக்கிறது. இந்நிலையில் அவருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5:05 மணிக்கு, சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து, இந்திய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது இறப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன்.
அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது உறவினர்களுக்கும், அவர்மீது அன்பும் மரியாதையும் கொண்டிருக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.<> கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களுடன் அன்பும் நட்பும் பாராட்டிய தலைவர் வாஜ்பாய் அவர்கள். ஈழத் தமிழர்கள் உரிமை காக்க மதுரையில் கூட்டப்பட்ட "டெசோ மாநாட்டில்" பங்கேற்று தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தார்.
தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத்தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உருவாக்கினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக எத்தனையோ அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும், தனது ஆட்சிக்கே ஆபத்து என்று தெரிந்தும் கூட , கழக ஆட்சியை அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக கலைக்க முடியாது என்று உறுதிபடக் கூறி அதன்படியே நின்றார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.<

கருத்துகள் இல்லை: