செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

BBC : முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன்: மு.க. ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய
அனுமதியளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன் என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இன்று சென்னையில் தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.
இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய மு.க. ஸ்டாலின், அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி மறைந்த தினத்தன்று நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
கட்சியினர் அனைவரும் தலைவரை இழந்து தவிப்பதாகவும் தான் மட்டும் தலைவர் மட்டுமல்லாமல் தந்தையையும் இழந்து தவிப்பதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.
கலைஞர்  உயிரோடு இருக்கும்போதே, தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்கவேண்டுமென்று உறுதியேற்றிருந்ததாகவும் ஆனால், அது நடக்கவில்லையென்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
;"அண்ணாவின் உடலுக்குப் பக்கத்தில் தன்னை வைக்க வேண்டுமென்பது தலைவரின் எண்ணம். அதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டோம். உயிருக்குப் போராடிய கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் எங்களிடம் வந்து இவ்வளவு நேரம்தான் அவர் உயிருடன் இருப்பார் என்று சொல்லிவிட்டார்கள். 

முடிந்த அளவு போராடிவிட்டோம் என்றார்கள். பல நண்பர்கள் மூலமாக தலைவரின் விருப்பத்தைச் சொல்லி அனுப்பினோம்.
ஆனால், அவரது ஆசையை நிறைவேற்ற முடியாது என்ற வகையில்தான் அரசின் பதில் இருந்தது. அதற்குப் பிறகு கழகத்தின் முன்னோடி தலைவர்கள் என்னிடம் வந்து, நாம் சென்று கேட்போம். அப்போது அவர்கள் நிறைவேற்ற முன்வருவார்கள் என்று தெரிவித்தனர். நானும் வருவதாகச் சொன்னேன். அப்போது அவர்கள் நான் வரக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் வருவதாக வலியுறுத்தினேன். நாங்கள் பிறகு முதல்வரைச் சந்தித்துக் கேட்டோம்.
அப்போது அவர், விதிமுறைகளின்படி அந்த இடத்தைக் கொடுக்க வாய்ப்பில்லை. சட்ட ஆலோசனை கேட்டோம். அவர்களும் மறுத்துவிட்டார்கள்" என்றார் ஸ்டாலின். தலைவருடைய ஆசை, அதை நிறைவேற்றப்பாடுபடுகிறோம் என்று கேட்டேன். அப்போதுகூட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. எங்களை அங்கிருந்து அகற்ற, பார்ப்போம் என்று ஒரு வார்த்தையைச் சொன்னார்கள். 


சரியாக ஆறு பத்து அளவில், தலைவர் நம்மை விட்டுப்பிரிந்தார் என்ற செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதற்குப் பிறகு, முறையாகக் கேட்க வேண்டும் என்பதற்காக ஒரு கடிதத்தை எழுதி, துரைமுருகன் உள்ளிட்டவர்களிடம் கொடுத்து அனுப்பினோம். அவர்கள் பத்து நிமிடத்தில் திரும்பி வந்தார்கள்.

 அதற்குப் பிறகு எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக தலைமைச் செயலர் வெளியிட்ட அறிவிப்பு தொலைக்காட்சிகளில் வந்தது. நாங்கள் அதிர்ச்சிக்கு ஆளானோம். அப்போது மூத்த வழக்கறிஞர் வில்சன் நான் நீதிமன்றத்திற்கு செல்லட்டுமா என்று கேட்டார். அதேபோல சென்றார்கள்" என்று அன்றைய தினத்தை நினைவுகூர்ந்தார் ஸ்டாலின். நீதிமன்றம் அண்ணாவின் உடலுக்கு அருகில் கருணாநிதியைப் புதைக்க அனுமதி அளித்தபோது அவ்வளவு பெரிய சோகத்திலும் சிறிய மகிழ்ச்சி ஏற்பட்டது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், 

ஒருவேளை தீர்ப்பு மாறிவந்திருந்தால், தலைவருக்குப் பக்கத்தில் தன்னைப் புதைக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.  
இந்த செயற்குழுக் கூட்டம் துவங்கியவுடன் கலைஞர் மு. கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை டி.கே.எஸ். இளங்கோவன் முன்மொழிந்து பேசினார். அந்த இரங்கல் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பிறகு, மாவட்டச் செயலாளர்களில் சிலர், டி.ஆர். பாலு, துரைமுருகன், ஆவுடையப்பன், சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்ற மூத்த தலைவர்கள் கருணாநிதியை நினைவுகூர்ந்து பேசினர். கூட்டத்தில் பேசிய பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டவர்கள், ஸ்டாலின் அடுத்த தலைவராகப் பதவியேற்க வேண்டுமெனக் குறிப்பிட்டனர்.


இந்த இரங்கல் கூட்டத்தில் தான் பேச முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளரும் மு. கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான க. அன்பழகன் தெரிவித்துவிட்டதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலின் உட்பட அந்தக் கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள், உரையாற்றும்போது கண்கலங்கி அழுதனர்.

கருத்துகள் இல்லை: