ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

மெரீனாவில் ராகுலுக்கு பாதுகாப்பு வழங்காதது, 4 பேர் பலிக்கு யார் காரணம்?

தினகரன் :மத்திய உள்துறை அதிகாரிகள் விசாரணையால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் வந்தபோதும், கூட்டம் அதிகமாக வந்தபோதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பயங்கர குளறுபடி ஏற்பட்டது.
இதனால் 4 பேர் பலியாகினர். இதுகுறித்து, மத்திய உள்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கியுள்ளதால், தமிழக போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை காலமானார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 8ம் தேதி காலை முதல் மாலை வரை ராஜாஜி ஹாலில் நடந்தது. முதல்நாள் இரவே கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.
இதனால் மறுநாள் நகர் முழுவதும் ஒரு அரசு பஸ்கூட இயக்கப்படவில்லை. ஆனாலும், ரயில்கள், கார்கள், ஆட்டோக்கள், லாரிகள், வேன்களில் மக்கள் கூட்டம் குவிந்தது. பல லட்சம் மக்கள் திரண்டனர். இதனால் காலை முதல் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக, விஐபிக்கள் செல்வதற்காக தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் விஐபிக்கள் செல்லும் வழியாக தேசிய தலைவர்கள், தமிழக தலைவர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் என விஐபிக்கள் வந்து சென்றனர். அதில் பிரதமர் மோடி வரும்வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருந்தன.


அதன்பின்னர் கூட்டம் அதிகமாக வந்தது. பல தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் மிகுதியால், விஐபிக்கள் செல்லும் வழியாக செல்ல ஆரம்பித்தனர். சிலர் மட்டுமே செல்லக் கூடிய வழியில் ஆயிரக்கணக்கானவர்கள் செல்ல தொடங்கினர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை. மேலும் சரியான முறையில் திட்டமிடுதல் இல்லை. இதனால் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராகுல்காந்தி, ராஜாஜி ஹாலுக்கு வந்து விட்டார். ராகுல் வருவது முன்கூட்டியே போலீசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் சென்னை விமானநிலையம் வந்த தகவலும் போலீசாருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. ராகுல்காந்திக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்களும் தகவல்களை தமிழக போலீசாருக்கு வழங்கியிருந்தனர். ஆனால், ராகுல் வந்திருப்பது தெரிந்ததும், அந்த இடத்துக்கு ஒரு உயர் அதிகாரி கூட அங்கு வரவில்லை. இதனால் ராகுல்காந்தி தனியாக பொதுமக்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அவருடன் வந்திருந்த பாதுகாப்பு படையினர் அவரை சுற்றி அரண் அமைத்திருந்தனர்.

ஆனாலும் கூட்ட நெரிசல் மற்றும் அவரைப் பார்க்க கூட்டம் கூடியது. பலர் கை கொடுக்கத் தொடங்கியதால் கூட்ட நெரிசலில் ராகுல்காந்தியும் சிக்கினார். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் ஒரு ஏடிஜிபி அங்கு வந்தார். அவர் வந்து சல்யூட் மட்டுமே அடிக்க முடிந்தது. கூட்ட நெரிசலில் அவரும் சிக்கிக் கொண்டார். இதனால் அவரால் கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை. அவராலேயே அவரை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இதனால் தேசிய பாதுகாப்பு படையினரே அவரை கூட்ட நெரிசலில் இருந்து அழைத்துச் சென்றனர். சுமார் 30 நிமிடம் அவர் கூட்ட நெரிசலில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் சிக்கிக் கொண்டார். ராகுல் வந்து சென்ற பிறகு போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் கூட்டம் கலைந்து ஓடியது. நெரிசலும் ஏற்பட்டது. அதில், 4 பேர் பலியாகினர். போலீசார் தடியடி நடத்தியதோடு, 4 பேர் பலியான தகவல் வெளியானதால், பொதுமக்கள் கூட்டம் மெரினாவுக்கு சென்றது. வழி நெடுகிலும் நின்றது. இந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து இதுவரை சென்னை போலீசில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து மத்திய உள்துறை அதிகாரிகள், தமிழக அதிகாரிகளுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர். விஐபிக்களின் பாதுகாப்பு குறைபாடுக்கு என்ன காரணம்? என்று கேட்டுள்ளனர். இதனால், ஏடிஜிபி அல்லது ஐஜி அளவில் பாதுகாப்பு போட வேண்டிய இடத்தில் தற்போது குளறுபடிக்கு கீழ்மட்ட அதிகாரிகள் மீது பழிபோட்டு தப்பிக்கும் முயற்சியில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, தூத்துக்குடி ஊர்வலத்தின்போதும் சரியான முறையில் போலீஸ் அதிகாரிகள் திட்டமிடாததால், இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு வரை சென்றது. தற்போதும் 4 பேர் பலியாகியுள்ளனர். ராகுல்காந்தியின் பாதுகாப்பிலும் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையில் இருந்தும் போலீசார் பாடம் கற்றுக் கொள்வதில்லை. இதற்கு திறமையான அதிகாரிகளை பாதுகாப்பு பணிக்கு போடாததே காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை: