ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா.. மயிலாப்பூர் மைத்திரேயனின் கோரிக்கை

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: நினைவூட்டும் மைத்ரேயன்மின்னம்பலம்: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 600 நாட்கள் கடந்துவிட்டதாக அதிமுக எம்.பி. மைத்ரேயன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 12) அவர் தனது முகநூல் பக்கத்தில், "இன்றைய தினம் செய்தித் தாள்களில் நாம் பாரத ரத்னா விருது குறித்து அதிக அளவிலான தகவல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ராஜாஜி, சி.வி.ராமன், காமராஜ், எம்.ஜி.ஆர், அப்துல் கலாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் சி.சுப்ரமணியன் ஆகியோர் மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

2015 டிசம்பர் 5ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2016 டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் தமிழக அமைச்சரவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஜனவரி -பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மக்களவை மாநிலங்களவை கூட்டத் தொடரிலும் அதிமுக எம்.பி.க்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது" என்று சுட்டிக்காட்டிய மைத்ரேயன், ஜெயலலிதா மறைந்து 600 நாட்களைக் கடந்த நிலையில், அதிமுகவினர் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: