சனி, 18 ஆகஸ்ட், 2018

நாய்களையும் காப்பாற்றுமாறு கதறிய பெண்! கேரளா வெள்ளத்தில் ....

நாய்களையும் காப்பாற்றுமாறு கதறிய பெண்!மின்னம்பலம் : வீட்டில் இருக்கும் 25 நாய்களும் மீட்கப்படாவிட்டால் தன்னையும் காப்பாற்ற வேண்டாம் என்று, கேரளாவில் இன்று (ஆகஸ்ட் 18) நடந்த மீட்புப் பணியின் போது ஒரு பெண் கூறியுள்ளார்.
கேரளாவில் தொடர்ந்து வரும் பெருமழையினால் திருச்சூர் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகள் மற்றும் விளைநிலங்களில் நீர் புகுந்ததால், மக்கள் தத்தளித்து வருகின்றனர். இவர்களைக் காப்பாற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று, திருச்சூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சுனிதா என்ற பெண்ணைக் காப்பாற்றச் சென்றனர் மீட்புப் படையினர். சர்வதேச கருணை சமுதாயம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அளித்த தகவலின் பேரில், அவர்கள் அங்கு சென்றனர். ஆனால், அவர்கள் அழைத்தபோது சுஜாதா தனது வீட்டை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். அந்த வீட்டில் அவரும் அவரது கணவரும் வசித்து வந்தனர். அது மட்டுமல்லாமல், 25 நாய்களும் வசித்து வந்தன. அவை அனைத்தும் சுஜாதாவின் அருகில் நின்று கொண்டிருந்தன.
“இந்த நாய்களையும் மீட்பதாக இருந்தால் மட்டுமே, நான் வீட்டை விட்டு வருவேன். இல்லையென்றால், இங்கேயே இருப்பேன்” என்று மீட்புப் படையினரிடம் தெரிவித்தார் சுனிதா. அதற்கு மறுப்பு தெரிவித்த மீட்புப்படையினர், அங்கிருந்து வெளியேறினர்.

இதனையடுத்து, சர்வதேச கருணை சமுதாயம் அமைப்பினரை மீண்டும் தொடர்பு கொண்டார் சுனிதா. அந்த அமைப்பைச் சேர்ந்த சாலி வர்மா என்பவர், மீட்புப் படையினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். மீட்புப் படையினர் அங்கு சென்றபோது, சுனிதாவின் கட்டிலில் அந்த நாய்கள் அனைத்தும் ஒண்டிக்கொண்டிருந்தன. பேரழிவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கான முகாம்களில் தனது நாய்களோடு இருந்து வருகிறார் சுனிதா. அவரது கணவரும் உடன் இருக்கிறார்.
சுனிதாவுக்காகத் தற்போது நிதி திரட்டப்பட்டு வருவதாகவும், வெள்ளம் வடிந்தபின்பு அவரது வீட்டில் நாய்களுக்கெனத் தனி வசிப்பிடம் கட்டப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சாலி வர்மா.

கருத்துகள் இல்லை: