திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அழகிரி இந்தியா டு டேக்கு வழங்கிய அதிர்ச்சி பேட்டி ,, விடியோ


Shyamsundar - ONEINDIA TAMIL ON : சென்னை: திமுகவில் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று மு.க அழகிரி அளித்த பேட்டி அரசியல் உலகில் புயலை கிளப்பி உள்ளது.
 திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அழகிரி இன்று மரியாதை செலுத்தினார். அதன்பின்தான் அவர் செய்தியாளர்களுக்கு இந்த புயலை கிளப்பும் பேட்டியை அளித்துள்ளார்.
பல நாட்களாக பேசாமல் இருந்த அழகிரியும், ஸ்டாலினும் சரியாக ஒரு மாதம் முன்புதான் பேச தொடங்கினார்கள். கருணாநிதி உடல்நிலை மோசமாக இருந்த சமயத்தில், ஸ்டாலினுடன் அழகிரி மீண்டும் ராசியாக மாறினார். அதேபோல் அழகிரி சொல்லும் முக்கியமான அறிவுரைகளை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு நடந்தார். இது திமுகவினருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.

அதோடு இல்லாமல், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மூன்று பேரும் தாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருப்பதாகவே காட்டிக்கொண்டார்கள். இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் மூன்று பேரும் மிகவும் ஒற்றுமையாகவே இருந்தனர். இரண்டு நாள் முன்பு கருணாநிதி சமாதிக்கு மாலை அணிவிக்கும் போது கூட ஸ்டாலின், கனிமொழி, அழகிரி மூவரும் ஒன்றாக மாலை அணிவித்தனர்.

ஆனால் இத்தனை பாச பிணைப்பிற்கு பின்பும், இவர்கள் இருவருக்கும் இடையில் சின்ன விரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் செய்தியாளர்களுக்கு அரசியல் சம்பந்தமான பேட்டி அளித்துள்ள அழகிரி, திமுக தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஸ்டாலின் அழகிரி உறவில் மீண்டும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

 அழகிரி பேட்டியில் ஆதங்கம் என்ற வார்த்தையை குறிப்பிட்டார். பல காரணங்களுக்காக அவர் இந்த வார்த்தையை குறிப்பிட்டதாக மதுரை வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது. தன்னுடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவி வழங்காதது, மீண்டும் தன்னை கட்சியில் சேர்ப்பது குறித்து யோசிக்காதது என்று பல விஷயங்களை அந்த ஒற்றை வார்த்தையில் அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

 அதோடு, தன்னிடம் இருந்து விலகிச் சென்ற மதுரை பவர் செண்டரை மீண்டும் கைப்பற்ற அழகிரி நினைக்கிறார் என்றும் திமுகவில் சிலர் பேசிக்கொள்கிறார்கள். தொடர்ந்து வரிசையாக தேர்தல்கள் காத்திருப்பதால், மீண்டும் கட்சியில் சேர்ந்து தன்னை சுறுசுறுப்பாக மாற்றிக்கொள்ளவே இப்படி செய்வதாக அழகிரிக்கு நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கிறார்கள். அழகிரியின் இப்போதைய எண்ணம் எல்லாம் கட்சியில் மீண்டும் சேர்வதுதான் என்று பேசுகிறார்கள்.

இது திமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகிரி மொத்தமாக அரசியலில் இருந்து விலகிவிடுவார் என்று நினைத்தவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை திமுக கூட்டம் வேறு நடப்பதால், இந்த பேட்டி பெரிய புயலை கிளப்பி உள்ளது

கருத்துகள் இல்லை: