புதன், 15 ஆகஸ்ட், 2018

வீரமணி : கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின் கீழ் திமுக கட்டுப்பாட்டுடன் நடைபோட வேண்டும்

tamilthehindu :  கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட
தலைமையின்கீழ் திமுக கட்டுப்பாட்டுடன் நடைபோட வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் கலைஞர்  உடலால் மறைந்து, இன்றுடன் ஏழு நாள்கள் ஆகின்றன. ஆனால் துக்கம் தனியாத நிலையில் துயரம் வடியாத நாளில், 6 ஆம் நாளிலேயே துரோகக் குரல், தூண்டிவிடப்பட்ட அம்புகள் ஆரிய வில்லிலிருந்து வடக்கே இருந்துவந்த திட்டப்படி சலசலக்க, திமுக என்ற எஃகு கோட்டையை தகர்த்து, ராணுவக் கட்டுப்பாட்டுடன் கருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையை ஒருமனதாக, ஒரு குரலாக ஏற்க திட சித்தத்துடன் இருக்கையில், சில சத்தங்களை எழுப்பினால் சரித்திரம் மாறிவிடும் என்று நப்பாசை கொள்கின்றனர்.தாய்க்கழகத்தின் பிரமாணப் பத்திரம்
திமுக மணல் வீடல்ல மகத்தான தியாகங்களால் கட்டப்பட்ட தொண்டர்களின் அசைக்க முடியாத வீடு; பாசறை. இதை அசைத்துப் பார்க்க எந்த ஆரியத்தாலும் அவர்களின் பஞ்ச தந்திரங்களாலும் முடியாது, முடியவே முடியாது.

வீட்டிற்குள்ளே இல்லாதவர்கள், வர முடியாதவர்கள் எதையும் பேசக்கூடும். கலைஞரால் , தலைமையால் கழகமா, பாசமா என்றால், கழகத்திற்கே முன்னுரிமையான கவலையோடு கூடிய ஏற்பாடு என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டு இருப்பதால், அவ்வீடு என்ற இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் விருந்தில் தலைமை இனி எனக்குத்தான் என்று கூறுவதுபற்றி யாரும் கவலைப்படாமல், கட்டுப்பாடு காத்து கண்ணியத்துடன் கடமையாற்ற, வடக்கின் வாடையை விரட்டிட வைராக்கிய உணர்வோடு களத்தில் நில்லுங்கள், வெல்லுங்கள்.
அண்ணா மறைந்தபோது கருணாநிதி இருந்தார்
அண்ணா மறைந்தபோதும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்தன என்பது பழைய வரலாறு. அப்போது அறிவு ஆசான் பெரியார் அறிவுரைத்தார். திமுக கெட்டியான பூட்டு; கள்ளச்சாவி போட்டுவிடாமல் கழகத் தொண்டர்கள் காத்துக் கொள்ளவேண்டும் என்று. அதையே நினைவூட்டுகிறோம்.
கருணாநிதிக்கு உண்மையான மரியாதை செய்வது என்பது அவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைப்பது மட்டுமல்ல, அவரது இயக்கத்தை, அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ், கட்டுப்பாடு காத்து லட்சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடருவதேயாகும். இது இப்போது தனி நபர்கள் தலைமைத்துவ பிரச்சினையல்ல. திராவிடமா? ஆரியமா? என்ற நீண்ட கால இனப் போராட்டத்தின் புதிய வடிவம், புரிந்துகொள்ளுங்கள்.
துரோகம் தொலையட்டும் - தூய தொண்டு ஒளிரட்டும்!
தாய்க்கழகமாம் திராவிடர் கழகம், திமுகவின் கவசமாய் உங்களுக்கு இருக்கும்; முன்பு உண்மை திராவிடர் இயக்கத்திற்கு ஏற்பட்ட சோதனைகளையெல்லாம் ஏற்று, சாதனைகளாக மாற்றிய வரலாறு தொடரட்டும்” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: