திங்கள், 9 ஜூலை, 2018

வளர்கிறது இந்தி... சரியும் ஏனைய மொழிகள்!

THE HINDU TAMIL;ஒவ்வொரு பத்தாண்டிலும் மத்திய அரசால் நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கொள்கை வகுப்பாளர்களுக்கும், அரசியல் பார்வையாளர்களுக்கும் மொழியியல் மேதாவிகளுக்கும் ஒரு விஷயத்தை உணரச் செய்திருக்கிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மொழிகள் தொடர்பான தரவுகளைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. மிகவும் தாமதமாக, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டிருப்பது வேறு விஷயம். இந்தத் தரவுகளிலிருந்து கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்ப்போம்.
இந்திதான் இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி. மத்திய அரசால் பயன்படுத்தப்படும் இரண்டு அலுவல் மொழிகளில் இந்தியும் ஒன்று (இன்னொரு மொழி ஆங்கிலம்). தாய்மொழி எனும் வகையில் இந்தி பேசப்படுவது வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும்தான் என்றாலும், நாட்டின் அலுவல் மொழி என்ற வகையில் அதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அதைத் தொடர்ந்து வளர்ந்துவருவதை உணர முடிகிறது.

வளர்கிறது இந்தி

தற்போது, இந்தியாவில் கிட்டத்தட்ட 44% பேர் இந்தி பேசுகிறார்கள் (தனி மொழி அந்தஸ்து கோரும் போஜ்புரி உள்ளிட்ட மொழிகளை உள்ளடக்கிய தரவு இது). 2001 முதல் 2011 வரை 25% வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்தி பேசுபவர்களின் பட்டியலில் புதிதாக 10 கோடிப் பேர் சேர்ந்திருக்கிறார்கள். இந்தியாவின் மிகப் பெரிய 10 மொழிகளில், இந்தி மொழி பேசுபவர்களின் விகிதம்தான் கணிசமாக அதிகரித் திருக்கிறது. எனினும், இந்தியின் இந்த வளர்ச்சி கடந்த ஒரு தசாப்தத்தில் மட்டும் நடந்ததல்ல. பல்லாண்டுகளாகத் தொடர்ந்துவரும் பல்வேறு முயற்சிகளின் விளைவு இது. பெரும்பாலும், இந்தி பேசும் மாநிலங்களின் மக்கள்தொகை கணிசமாக உயர்ந்ததும் இதில் முக்கிய காரணமாக இருக்கிறது.
வட இந்தியாவில் அதிக அளவிலான மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக, இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றால், திராவிட மொழிகள் பேசும் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி வீதம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததற்கு வழிவகுத்திருக்கிறது.

தேய்கிறது தென்னிந்திய மொழிகள்

1971 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இந்தி மொழி 161% வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில், அதே காலகட்டத்தில் நான்கு பெரிய திராவிட மொழிகள் அதில் பாதி அளவு (81%) வளர்ச்சியைத்தான் கண்டிருக்கின்றன.
வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, ஐந்து தென்னிந்திய மாநிலங்களிலும் இந்தி பெருமளவில் இடம்பெற்றிருப்பதற்குக் காரணமாகியிருக்கிறது. உதாரணத்துக்கு, 2001 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களின் விகிதம் கிட்டத்தட்ட இரண்டு மடங் காகியிருக்கிறது. வடக்கிலிருந்து தெற்குக்கு இடம்பெயர் பவர்களின் விகிதம் அதிகரித்திருப்பதும் தென்னகத்தில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணம்.

உருமாறும் உருது

பட்டியலிடப்பட்ட மொழிகளில் இரண்டு மொழிகள் சரிவைச் சந்தித்திருப்பது திட்டவட்டமான எண்ணிக்கையில் தெரியவருகிறது. அவை உருது, கொங்கணி. இந்தியாவில் தற்போது உருது பேசுபவர்களின் எண்ணிக்கை 5.07 கோடிதான். உருது பேசுபவர்கள் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறார்கள் என்றாலும், அம்மொழி வலுவான இடத்தில் இருப்பது இந்தி பேசும் பிராந்தியங்களில்தான். உருது மொழி அதிகம் பேசப்படும் இரண்டு பெரிய மாநிலங்கள் உத்தர பிரதேசமும் பிஹாரும். எனினும், இதே பகுதிகளில் தான் உருது மொழி குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்திருக்கிறது.
நவீன இந்தியாவில், உருது மொழி என்பது முஸ்லிம் களுடன் மட்டும் தொடர்புடையது எனும் நிலையில், உருது பேசுபவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சி முரணானது. ஏனெனில், உத்தர பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் 2001 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களின் மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது. வட இந்தியாவில் உருதுக் கல்வி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், புதிய தலைமுறை முஸ்லிம்கள் இந்தியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்று இதன் மூலம் தெரிகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கொங்கணி பேசுபவர்களின் எண்ணிக்கை 9.5% குறைந்திருக்கிறது.
இடம்பெயர்வதன் காரணமாக வேறு மாநிலங்களில் இந்தி பரவுவதைப் போல், வங்காள மொழியும் பரவுகிறது. மேற்கு வங்கம், வங்கதேசம் ஆகியவற்றின் எல்லை யில் உள்ள மாநிலங்களில் எப்போதுமே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வங்கமொழி பேசுபவர்களின் எண்ணிக்கை இருக்கும். இந்நிலையில், தொலைவில் உள்ள மாநிலமான மகாராஷ்டிரத்தில் 4.4 லட்சம் வங்காளிகளும், டெல்லியில் 2.2 லட்சம் வங்காளிகளும் இருப்பதாக 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, வங்காளிகளின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அங்கு அவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. கேரளத்தில், வங்காள மொழி பேசுபவர்களின் விகிதம் ஒன்பது மடங்கு அதிகமாகியிருக் கிறது. இதற்கு முக்கியக் காரணம், உடலுழைப்பு சார்ந்த பணிகளில் மேற்கு வங்கத்தின் கிராமப்புறப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கேரளத்துக்கு இடம்பெயர்ந்ததுதான்.

கவலையில் அசாம்

மொழியியல்ரீதியான மிகத் தெளிவான பிரிவு ஏற்பட்டிருப்பது அசாம் மாநிலத்தில்தான் எனலாம். அங்கு, அசாம் மாநிலக் குடிமக்களின் தெளிவான பட்டியலை உருவாக்குவது, சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளம் காண்பது ஆகிய நோக்கங்களுடன் அசாம் குடிமக்கள் குறிப்பேடு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அம்மாநில அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் குடிமக்கள் சட்டம், அசாமி மொழி பேசுபவர்களுக்கும் வங்காள மொழி பேசுபவர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.
மொழியியல்ரீதியான மோதல்கள் அசாமுக்குப் புதிதல்ல. அம்மாநிலத்தில், மொழியியல்ரீதியில் பெரிய அளவில் பிரிந்துகிடப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு கோடிக் கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அசாம்தான், இந்தியாவில் குறிப்பிட்ட மொழி பேசுபவர்களைப் பிரதானமாகக் கொண்டிராத மாநிலம்.
அம்மாநிலத்தில் அசாமி மொழி பேசுபவர்கள் 48% பேர். 2001-11 காலகட்டத்தில் வங்காள மொழி பேசுபவர்களின் விகிதம் அதிகரித்திருப் பதால், அசாமி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்தப் போக்குகளால் அசாமிய தேசியவாத இயக்கங்கள் கவலையடைந்திருக்கின்றன.

ஆங்கிலமும் வளர்கிறது

இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துக்குப் பின்னரும் தொடரும் ஆங்கிலம்தான், பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு மொழியாகவும், உயர் அடுக்கு சமூகத்தினரின் மொழியாகவும் இருக்கிறது. எனினும், திட்டவட்டமான எண்ணிக்கை எனும் அடிப்படையில் பார்த்தால், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் ஆங்கிலோ - இந்தியச் சமூகத்தினர் மட்டும்தான். எனினும், 2001-11 பத்தாண்டுகளில் ஆங்கில மொழி பேசப்படுவது 15% அதிகரித்திருக்கிறது. இதன் மூலம், கடந்த பத்தாண்டுகளில் வேகமாக வளர்ந்துவரும் மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இருக்கிறது. ஆங்கிலத்தின் இந்த வளர்ச்சியை, பாரம்பரியமாக ஆங்கில மொழி பேசுபவர்களின் மக்கள்தொகை அதிகரித்திருப்பதை வைத்து மட்டும் முடிவுசெய்ய முடியாது. உயர் அடுக்கைச் சேர்ந்த பல இந்தியர்கள், ஆங்கிலத்தைப் பேசுவது மட்டுமல்லாமல், அதைத் தங்கள் தாய்மொழியாக அடையாளப்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள்.
சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் மிகச் சிறிய அலுவல் மொழி. 24,821 பேர்தான் சம்ஸ்கிருத மொழி பேசுகிறார்கள். எனினும், இந்தியாவின் அலுவல் மொழிகள் பட்டியலில் இல்லாத அரபு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது (54,947 பேர்).
இந்த இரண்டு மொழிகளையும் அன்றாடம் பயன்படுத்துபவர்கள் இந்தியா வில் யாரும் இல்லை என்றாலும், முறையே இந்து மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் வழிபாட்டு மொழிகளாக இருக்கும் சம்ஸ்கிருதத்தையும் அரபியையும் தங்கள் தாய்மொழியாகச் சொல்லிக்கொள்வதைப் பெருமையாகக் கருதுபவர்கள், தங்கள் தாய்மொழி குறித்து தவறான தகவல் கொடுத்திருப்பார்கள் என்று தெரிகிறது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் பேசப்படும் பஷ்தோ மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை, 2001-லிருந்து இந்தியாவில் இரண்டு மடங்காகியிருக்கிறது. திட்டவட்ட மான எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், இது குறைவான எண்ணிக்கைதான். 2011 ஆண்டுவாக்கில், இந்தியாவில் பஷ்தோ மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 21,677. இம்மொழி பேசுபவர்களில் 83% பேர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 8% பேர் டெல்லியில் வசிக்கிறார்கள்.
-சோயப் தனியால், பத்திரிகையாளர்,
 ‘ஸ்க்ரால்.இன்’ இணைய இதழில் வெளியான கட்டுரை. https://scroll.in/Shoaib
தமிழில்: வெ.சந்திரமோகன்

கருத்துகள் இல்லை: