திங்கள், 9 ஜூலை, 2018

அமித் ஷா வருகை ..வருமான வரித் துறை சோதனை எடப்பாடிக்கு டெல்லி செக்

அமித் ஷா வருகை: பதற்றத்தில் முதல்வர்!  மின்னம்பலம் :நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னைக்கு வருகை தருகிறார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அமைப்பு ரீதியாகக் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இன்று காலை 11 மணியளவில் அமித் ஷா சென்னை வருகிறார். அமித் ஷாவின் வருகையை அடுத்து கடந்த 7ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் பாஜக சார்பில் நடைபெற இருந்த மந்திர மாலை தாமரை மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று (ஜூலை 8) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், அமித் ஷாவின் பயணத் திட்டம் குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளார். "காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வரும் அமித் ஷா, அங்கிருந்து புறப்பட்டு விஜிபி தங்க கடற்கரை சாலைக்குச் செல்கிறார். அங்கு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவுடன் 12 - 2 மணி வரை உரையாட உள்ளார். மதிய உணவுக்குப் பிறகு 3 - 4 மணி வரை தமிழகம் புதுவைக்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
4:30 - 5:30 மணி வரை சகோதர இயக்கங்களுடன் உரையாடும் அவர், அதன்பிறகு சக்தி கேந்திர, மஹா சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அங்கு கருத்து பரிமாற்றங்கள் நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"அமித் ஷா வருகையின்போது கூட்டணிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாது. முக்கிய நபர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை" என்று குறிப்பிட்ட தமிழிசை, உதய் திட்டத்தில் தமிழக அரசு சேர்ந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்கள். ஆனால், உதய் திட்டத்தில் சேர்ந்ததால்தான் இன்று தமிழக மின்சாரத் துறை காப்பாற்றப்பட்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அடிக்கல் நாட்டுவதற்குப் பிரதமர் மோடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
அமித் ஷா நிகழ்ச்சிக்குச் செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்களுக்குப் பல்வேறு கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளது. செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும், அவர்களுடைய ஆதார் எண், செய்தி ஆசிரியர் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அமித் ஷாவின் வருகையைத் தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடியும் வரவுள்ளார். இருவரின் வருகைக்கும் பிறகு தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல் மத்திய உளவுத் துறை வட்டாரங்களிலிருந்து முதல்வருக்குச் சென்றுள்ளது. இதனால் முதல்வர் பதற்றத்தில் இருப்பதாகக் கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சத்துணவுத் திட்டத்திற்கு முட்டை விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான குமாரசாமி என்பவரின் கிறிஸ்டி ஃப்ரைடுகிராம் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில், இது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியிலிருந்து வைக்கப்பட்டுள்ள செக் என்றே கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: