சனி, 14 ஜூலை, 2018

திமுக மாநில சுயாட்சி மாநாட்டில் சோனியா ...

மின்னம்பலம் : கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக
மத்திய பாஜக அரசு தொடர்ந்து
செயல்படுவதைக் கண்டித்து திமுக மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த இருக்கிறது. இதுபற்றி ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்டு 30ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாட்டை சென்னையில் திமுக செயல் தலைவர் கூட்டியிருக்கிற நிலையில், இம்மாநாட்டுக்காக அகில இந்திய தலைவர்கள் பலருக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார். கடந்தவாரம் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா டெல்லி சென்று அகில இந்திய தலைவர்களை சந்தித்து, ஸ்டாலின் எழுதிய கடிதத்தைக் கொடுத்து மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்களான சரத்பவார், உமர் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே தளத்தில் கொண்டு வரும் திமுகவின் இந்த மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் யார் கலந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மாநில சுயாட்சி மாநாட்டுக்கு காங்கிரஸ் சார்பில் ராகுல்தான் அழைக்கப்பட்டிருந்தார். அதேநேரம் காங்கிரஸின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு நடைபெறும் ஆகஸ்டு இறுதியில் ராகுல் காந்தி வெளிநாடு செல்ல வாய்ப்பிருப்பதாகவும், அதனால் மாநாட்டில் சோனியா காந்தி கலந்துகொள்வார் என்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து திமுகவுக்கு தெரியப்படுத்தப் பட்டிருக்கிறது.
கருணாநிதியின் உற்ற நண்பரான சோனியா காந்தி, உடல் நலக் குறைவு ஏற்பட்டதில் இருந்து சென்னை வந்து கருணாநிதியை சந்திக்க இயலவில்லை. இம்மாநாட்டுக்காக சென்னை வரும்போது கருணாநிதியை சோனியா சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.

கருத்துகள் இல்லை: