சனி, 16 ஜூன், 2018

குமாரசாமி : தண்ணீர் திறக்கப்படும்! வெள்ளம் ? அணை உடைந்துவிடும்?

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும்!மின்னம்பலம் :பருவ மழை தொடர்ந்து பெய்துவந்தால், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குத் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போதிய நீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் திறக்க இயலாது என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் முதல்வர் தெரிவித்துவிட்டார்.
சமீப நாட்களாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தண்ணீரை உடனடியாக திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு, ஆணையம் ஆணையிட வேண்டும்
என்ற கோரிக்கை தமிழகத்திலிருந்து எழுந்தது.

இந்தச் சூழ்நிலையில் நேற்று (ஜூன் 15) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, "கர்நாடகத்தில் தற்போது நல்ல மழை பெய்துவருகிறது. கடவுள் அருளால் இந்த முறை தமிழகத்துடன் தண்ணீர் பகிர்ந்துகொள்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. கர்நாடக நீர்வளத் துறை அதிகாரிகளிடம் நேற்று (நேற்று முன்தினம்) மாலை கபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிட உத்தரவிட்டேன். என்னுடைய உத்தரவுக்குப் பிறகு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும். பருவ மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளபடி மாதாந்திரம் திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடுவதில் பிரச்சனை இருக்காது. எனவே கவலைப்படத் தேவையில்லை. இந்த முறை இரு மாநில விவசாயிகளும் மகிழ்ச்சியாக இருப்பர்" என்று கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனமும் செய்தார். பின்னர் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, "நாங்கள் காலா திரைப்படத்தைத் தடை செய்யவில்லை. கர்நாடக திரையரங்குகளில் காலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சில கன்னட அமைப்புகள் மட்டுமே திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன" என்று குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் "கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேசினேன். கபினி அணையைத் திறந்ததற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டேன். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கிய பின்பும்கூட இரு மாநிலங்களுக்கு இடையேயான நட்புறவினால் மட்டுமே அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: