திங்கள், 11 ஜூன், 2018

காலா ஒரு Cult Hit அரக்கர் காவியம்! .. காலம் கடந்தும் காவிகளுக்கு பயம் காட்டும்

படம் பேசும் அரசியல் காலத்தின் தேவை. அதை ரஜினி பேசியதுதான் பலவீனம். குறிப்பாக தூத்துக்குடி ரஜினி பேட்டிக்குப் பிறகு அவர் மரியாதை, மாஸ் மொத்தமாக தமிழகத்தில் சரிந்து விழுந்து விட்டதை கண்கூடாக தியேட்டர்களில் பார்க்க முடிகிறது. காவியை மட்டுமல்ல, காவி நிறத்தில் எது இருந்தாலும் தமிழ்நாடு இடது கையால் ஒதுக்கும்

Ashok.R : காலாவின் கதை பழையது. ஆனால் அதன் அரசியல் புதியது. அதில் உள்ள நேர்மை புதியது. அதுதான் காலாவை தனித்துக் காட்டுகிறது. காலம்காலமாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அது சார்ந்த கதாப்பாத்திரங்களும் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளில் காட்டப்படும், பேசப்படும் அரசியல்தான் அவற்றை வேறுபடுத்திக் காட்டுகிறது. காலா, அரக்கர் இனத்தின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் அரக்கர் காவியம்!
காலா ரஜினி, மக்களை திரட்டி போராட்டம் செய்கிறார். அதில் போலீசால் கலவரம் தூண்டப்பட்டு துப்பாக்கிச்சூடு நடக்கிறது. அது குறித்து ஒரு மேட்டுக்குடி பெண்ணிடம் கருத்து கேட்கிறார்கள். "போராடுறவங்கள்ள 60% கிரிமினல்ஸ்," என நிஜ ரஜினி தூத்துக்குடியில் சொன்னதைப் போல பதில் சொல்கிறார்! காலா ரஜினி, காவி பக்தரான நிஜ ரஜினியின் அரசியலுக்கு எதிராக அரசியல் பேசுகிறார். செயல்படுகிறார். விவசாயிகளோடு தோளோடு தோள் நிற்கும் நானா படேகர் காவி வில்லனாக நடித்திருக்கிறார். அதாவது இருவரும் தத்தமது நிஜ வாழ்க்கைக்கு நேர் எதிரான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


கடந்த மாத உயிர்மை கட்டுரையில், "இந்திய தேசக்கொடியில் நியாயமாக இடம்பெற்றிருக்க வேண்டிய நிறங்கள் கருப்பு, சிவப்பு, நீலம். ஏனெனில் இந்த நாட்டில் மக்களுக்கு ஏதாவது உருப்படியாக நடந்திருந்தால் அது பெரியாரிசத்தின் கருப்பு, மார்சிசத்தின் சிவப்பு, அம்பேத்கரின் நீலம் ஆகிய வண்ணங்களால்தான் நடந்திருக்கிறது," என எழுதியிருந்தேன். மூன்று வண்ணங்களையும் காவி எனும் கொலைகார வண்ணத்திற்கு எதிராக நிறுத்தியிருக்கிறார் ரஞ்சித். மூன்று வண்ணங்களை வைத்தே இறுதிக்காட்சியை முடித்திருப்பது சிறப்பு.
ரஞ்சித், ஆதவன் தீட்சண்யா மற்றும் மகிழ்நனின் வசனங்கள் பல்லாண்டுகள் கழித்து தமிழ்சினிமாவில் புரட்சியும், பகுத்தறிவும், பெண்ணுரிமையும், வாழ்வுரிமையும் பேசியிருக்கின்றன. ரஜினி வாயால் அவற்றையெல்லாம் கேட்பது அர்ஜூன் சம்பத் வாயில் புத்திசாலித்தனமான ஒரு வார்த்தையைக் கேட்டதைப் போன்ற ஆச்சரியத்தைத் தருகிறது. வார்த்தைகளில் தாராவியை கொண்டு வந்ததற்கு மகிழ்நனுக்கு கூடுதல் வாழ்த்துகள்.

ரஞ்சித்திடம் காலா கதையை ரஜினி கேட்கும் போது, அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை. ஏனெனில் அரசியலை மையமாக வைத்து வெற்றிமாறன் சொன்னதை கதையை நிராகரித்துவிட்டார் ரஜினி. எனவே இப்படத்தை ரஜினியின் அரசியலுக்காகத்தான் ரஞ்சித் எடுத்தார் என்றெல்லாம் பழிபோடுவதில் உண்மை இல்லை. இன்னும் சொல்லப்போனால் காலாவின் அரசியல் வசூல் ரஜினிக்கு போகாது. ஒருவேளை தூத்துக்குடி சம்பவத்தில் ரஜினி வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால் காலா அவருக்கு உதவியிருக்கலாம். இப்போது ரஜினி முழுதாக மக்கள் முன்பு expose செய்யப்பட்டுவிட்ட சூழலில், முழுக்க முழுக்க ரஞ்சித்துக்கு மட்டுமே இப்படத்தின் அரசியல் அறுவடை போகும். ஏனெனில் கபாலியாவது கொஞ்சம் ரஜினி படம், காலாவோ முழுக்க முழுக்க ரஞ்சித் படம். ரஞ்சித்தின் சதிவலையில் ரஜினி என தினமலர் கதறும்போதே நமக்கு குதூகலமாக இருக்கிறது!

படத்தை சில வெகுஜன ரசிகர்களால் ரசிக்க முடியாமல் போனதற்கு காரணம் இருக்கிறது. ரஞ்சித் சுஜாதா, பாலகுமாரனிடம் ‘அரசியல்’ கற்ற இயக்குனர் அல்ல. மக்களோடு மக்களாக களத்தில் இருந்து வந்தவர். அவரால் மாஸ் சினிமாவுக்கான bigger than reality கற்பனையை அவ்வளவு எளிதில் பண்ண முடியவில்லை. இயல்பு வாழ்க்கையுடனான அவரது நெருக்கமும், உண்மையும் அவரை இயல்பின் பக்கம் இழுக்கின்றன. இரண்டாம் பாதியில் "சூப்பர்மா சூப்பர்மா," என நானாவுக்கு சவால் விடும் ரஜினி, அதன்பின் அடிமேல் அடிவாங்குவது எதார்த்தம் என்றாலும், அதை எல்லோராலும் திரையில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் #GoBackModi என சவால் விட்டு, “கிளம்பு கிளம்பு,” என மோடியை நாம் தமிழ்நாட்டில் இருந்து விரட்டினோம். ஆனால் நம் மக்கள் 13 பேரை காக்கைகள் போல சுட்டுக்கொன்றார். நீட்டில் 36வது இடம் தந்து நம் குழந்தைகளைக் கொன்றார். நம்மால் என்ன செய்ய முடிந்தது!!! இராவணன் காலா ஜெயிக்கும் இறுதிக்காட்சிக்கு முன்புவரை அந்த எதார்த்ததை காலா காட்டியிருக்கிறது.
பொதுவாக அரசியல், கருத்து பேசும் இயக்குனர்கள் டெக்னிக்கலாக வீக்காக இருப்பார்கள். ஆனால் ரஞ்சித் ஒரு முழுமையான இயக்குனராக, தொழிநுட்பரீதியாகவும் ஒரு அருமையான படத்தைக் கொடுத்திருக்கிறார். CG துணையுடனான தாராவி செட்டில், இவ்வளவு கூட்டத்தை கட்டுப்படுத்தி இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை எடுப்பதென்பது சாதாரண வேலை அல்ல. இந்தியாவின் திறமையான இயக்குனர்களில் ரஞ்சித் நிச்சயம் முன்னணியில் இருக்கிறார்.
காலாவின் மகன் லெனின் இந்தக்காலத்தில் யார்யாரையோ தலைவராக ஏற்றுக்கொண்டு அலையும் இளைஞர்களை நினைவுபடுத்துகிறார். “எல்லாமே போச்சு. 70 வருசமா நமக்கு எதுவுமே கிடைக்கல,” என கோஷம் போடும் அவருக்கு, ‘கோல்ஃப் கிரவுண்ட், டிஜிட்டல் தாராவி,” என ஆசைகாட்டி இழுக்கிறது மனு பில்டர்ஸ். அதை காலா கண்டிக்கிறார். பிறகு லெனின் திருந்தி காலாவின் வழிக்கு வருகிறார். ‘மனு பில்டர்ஸினால்’ காலாவின் கோட்டையான தாராவியில் கடைசிவரை ஒரு செங்கலைக் கூட நடமுடியவில்லை என்பதுதான் கதை!! இறுதிக்காட்சியில், “அரக்கர்களின் ஆட்சியை ஒழிப்போம். அரக்கர்களின் ஆட்சியை ஒழிப்போம்,” என்கிற ராமாயண உபன்யாசம் பின்னணியில் ஒழிக்க, காலாவையும் அவர் தாராவியையும் ஹரிதாதா நானாவின் ஆட்கள் அழிக்க முயற்சிப்பது அருமை.
படம் பேசும் அரசியல் காலத்தின் தேவை. அதை ரஜினி பேசியதுதான் பலவீனம். குறிப்பாக தூத்துக்குடி ரஜினி பேட்டிக்குப் பிறகு அவர் மரியாதை, மாஸ் மொத்தமாக தமிழகத்தில் சரிந்து விழுந்து விட்டதை கண்கூடாக தியேட்டர்களில் பார்க்க முடிகிறது. காவியை மட்டுமல்ல, காவி நிறத்தில் எது இருந்தாலும் தமிழ்நாடு இடது கையால் ஒதுக்கும் என்பதை ரஜினி தெரிந்து கொள்ளவேண்டும். அரசியலுக்கு வர நினைக்கும் அவர் தான் நடித்த காலா திரைப்படத்தைப் பார்த்து திருந்த வேண்டும். அல்லது திருந்தும் வரை பார்க்க வேண்டும்.
எந்திரனில் உடை எரிந்து நிர்வாணமானதால் ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வாள். காலாவில் சுடிதார் அவிழ்க்கப்பட்டும்கூட கையில் கட்டையை எடுத்து போலீசை சாத்துகிறாள் ஒருத்தி. “உன் ஆடைகள் அவிழ்க்கப்பட்டால் ஆடைகளைத் தேடாதே. அம்மணமாகவே போராடு,” என்கிற காசி அனந்தனின் கவிதையை அக்காட்சிகள் நினைவூட்டியது. ரஞ்சித் பாராட்டுக்குரியவர். ரஞ்சித்தின் அரசியல் கொண்டாடப்பட வேண்டியது. காலாவின் வசூல் பற்றி பலர் பலவாரியாகச் சொல்கிறார்கள். அதைப்பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. காலா, காலம் கடந்தும் கூட காவிகளுக்கு பயம்காட்டும் ஒரு Cult Hit ஆக நிற்கும்.
-அசோக்.R

கருத்துகள் இல்லை: