சனி, 17 பிப்ரவரி, 2018

ஜெயலலிதாவை திட்டமிட்டுக் கொன்றனர் .. அமைச்சர் வீரமணி திடீர் குற்றச்சாட்டு



திட்டமிட்டுக் கொன்றனர்!மின்னம்பலம்:  சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டே ஜெயலலிதாவைக் கொன்றனர் என்று அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டிவந்த நிலையில் எடப்பாடி அரசு கடந்த ஆண்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையத்தின முன்பு அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதா உதவியாளர்கள், தினகரன் தரப்பினர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக சாட்சியம் அளித்து வந்தனர். மேலும், விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக கோரி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் விசாரணை ஆணையத்தின் சார்பாக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் கே.சி. வீரமணி சசிகலா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 16) வேலூர் மாவட்டம் ஆற்காட்டையடுத்த வேம்பூர் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் வீரமணி, "சசிகலா கடைசிவரை அம்மாவின் கூடவே இருந்தார், அவர் நினைத்திருந்தால், ஸ்டாலின் எப்படி சிங்கப்பூர் லண்டன் போய் சிகிச்சை எடுத்துக்கொள்கிறாரோ அதைப்போல அம்மாவையும் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கலாம். சசிகலா நினைத்திருந்தால் வெளிநாட்டிற்கு அல்ல, மாதம் ஒருமுறை அப்போலோவிற்கு அழைத்து சென்று சிகிச்சை பார்த்திருந்தாலே இன்னும் 10 ஆண்டுகள் அம்மா அவர்களை நாம் பார்த்துக்கொண்டு இருந்திருக்காலம். ஆனால், சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டே அம்மாவைக் கொன்றனர் " என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசும்போது, " டிடிவி. தினகரன் 2008ஆம் ஆண்டிலேயே கட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். ஜெயலலிதாவையே கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற டிடிவி.தினகரன் திட்டமிட்டார்" என்றும் கே.சி.வீரமணி குறிப்பிட்டார். மேலும்,"நல்ல வழக்கறிஞரை வைத்து நீதிமன்றத்தில் வாதாடியிருந்தால் அம்மா அவர்கள் நிரபராதி ஆகியிருப்பார்" என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை: