வியாழன், 15 பிப்ரவரி, 2018

கமலஹாசன் Qualities க்கும் Ideologies க்கும் வித்தியாசம் தெரியாமல் கூவுவது பிராடுத்தனம் தான்!

 Sivasankaran Saravanan  :நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு நடிப்புத்துறையை தாண்டி கொஞ்சமேனும் அரசியல் அறிவு இருக்கும் என நினைத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது!
அவர் அரசியலுக்கு வருகிறார், தாராளமாக வரட்டும். சரி கட்சியை எங்கிருந்து தொடங்கப்போகிறார் என்றால் ராமேஸ்வரத்திலிருந்தாம். காரணம் அது அப்துல்கலாம் பிறந்த ஊராம். இதன்மூலம் கமல் உணர்த்த விரும்புவது தான் என்ன என்று சத்தியமா புரியவில்லை.
பொன்ராஜ் என்பவர் கட்சி ஆரம்பித்தது போல இவரும் கலாம் பெயரை வைக்கப்போகிறாரா! கலாம் என்பவர் ஒரு நேர்மையான மனிதர், அரசுப்பதவியை துஷ்பிரயோகம் செய்யாதவர். சரி அதற்காக அவருக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? கலாம் தன்னுடைய சித்தாந்தம் என எதையாவது தந்துள்ளாரா?! இல்லை எந்த அரசியல் சார்பு கருத்தையாவது பேசிச் சென்றுள்ளாரா? தன் வாழ்நாள் முழுவதும் முழுக்க Pro Govt, Pro State ஆக இருந்த ஒருவரை அவர் மறைந்த பிறகு அவரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்படுவது அவலம். சரி அதே லாஜிக் படி , கே ஆர் நாராயணன் கூட நேர்மையான, அதிகார துஷ்பிரயோகம் செய்யாதவர் தான். ஆனால் அவரை ஏன் இன்ஸ்பிரேசனாக யாரும் கொள்வதில்லை? ஏனென்றால் சினிமாவுக்கு ஒரு அஜீத் போல, கிரிக்கெட்டுக்கு ஒரு டிராவிட் போல
குடியரசுத்தலைவர்களில் கலாம் அவர்களை அவர் அப்படி இவர் இப்படி என இமேஜ் ஏற்றியாகிவிட்டது. இதை கள்ளம் கபடமில்லாத ஒரு பொதுஜனம் பார்த்து மன எழுச்சி பெற்றால் கூட அதில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் அரசியலுக்கு வருவேன் என வருகிற ஒருவர் அதையே செய்கிறார் என்றால், அரசியல் அறிவற்ற மொண்ணை கூட்டத்தை தனது டார்கெட் டாக வைத்துள்ளார் என்றே அர்த்தம்!
அடுத்ததாக கொள்கை என்னவென்றால் ஊழல் ஒழிப்பு என்கிறார்கள். ஊழல் ஒழிப்பு என்பது எப்படி கொள்கை ஆகும் எனத் தெரியவில்லை. அப்படியென்றால் இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்குமே இதே கொள்கை தான் இருக்கிறது. ஏனென்றால் எந்த கட்சியாவது தாங்கள் ஊழலுக்கு ஆதரவு என கொள்கை வைத்துள்ளார்களா என்ன?!
தமிழ்நாட்டில் ஏன் கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் தேசிய அரசியல் என்ற ஒன்று வெற்றி பெறவே இல்லை? ஏனென்றால் தமிழ்தேசியம் என்பதற்கு இன்றுவரை யாரும் தெளிவான விளக்கம் தரவேயில்லை. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட 1957 க்கு முன்பிருந்த அனைவருமே தமிழர்கள் என ஒரு தரப்பு சொல்கிறது. இல்லை சாதி, பேசுகிற மொழியை வைத்து தமிழரை தீர்மானிப்போம் என இன்னொரு தரப்பு சொல்கிறது! எல்லாவற்றையும் விட தமிழ் தேசியம் என்று சொல்லப்படுகிற அம்சங்களில் பெரும்பாலான வற்றை திராவிட அரசியலே பூர்த்தி செய்துவிடுகிறது. இதனால் தான் அவர்கள் திராவிட அரசியல் மீது கோபம் கொள்கிறார்கள். மாநில சுயாட்சி, மொழியுரிமை என எல்லாவற்றையும் திராவிட அரசியலே சாதித்துவிட்டது.
ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் என்று கூறியது கூட எனக்கு ஓரளவுக்கு நேர்மையான பதிலாகவே படுகிறது. ஏனென்றால் இருக்கிற மற்ற சித்தாந்தங்களை ஆளுக்கு ஒரு கட்சி, இயக்கம் வைத்திருக்கிறது. சரி யாரும் ட்ரை பண்ணாத ஒண்ணை நாம ட்ரை பண்ணுவோம் னு அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அதிலே வேடிக்கை என்னவென்றால் ஆன்மிகம் என்பது ஒருபோதும் அரசியலாகாது. அப்படி வந்தால் அது மதவாத அரசியலாகத்தான் மாறும்!
பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சார்பு இயக்கங்கள் கூட நேரடியாக இதற்குத்தான் தாங்கள் அரசியல் செய்கிறோம் என காட்டிக்கொள்கிறார்கள். அது நமக்கு உகந்ததோ இல்லையோ அதில் ஒரு நேர்மை இருக்கிறது.
ஆனால் எந்த அரசியல் நேர்மையுமின்றி நான் ஊழலை ஒழிக்கப்போறேன், சிஸ்டம் சரியில்ல என்பது கடைந்தெடுத்த மோசடித்தனம்!
அப்படியென்றால் தமிழ்நாட்டில் இனி செய்வதற்கு அரசியலே இல்லையா என்ன? இருக்கிறது!
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துத் தொடங்கிய நீதிக்கட்சி திராவிட அரசியலின் ஆரம்பப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. பெரியார் அதை சாதிக்கு எதிராகவும், சாதி ஒழிப்பை நோக்கியும் பயணித்தார். பெரியாரை தலைவராக ஏற்ற திமுக முழுமையாக அதை பின்பற்றவில்லை. போதாக்குறைக்கு அதிமுக வோடு மல்லுக்கட்டுவதற்கே அதற்கு போதவில்லை. இரண்டு கட்சிகளும் பழையபடி நீதிக்கட்சியின் நீட்சியாக பார்க்கப்படுகின்றனவே தவிர முழுமையான பெரியாரிய கட்சியாக பிரகாசிக்கவில்லை.
புதிதாக அரசியல் தொடங்க வருபவர்கள் இந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கலாம். உண்மையில் இதுதான் நிஜமான அரசியல் வெற்றிடம். "தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் கல்வி பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் முன்னேறியுள்ளோம். ஆனால் சாதியொழிப்பில் முன்னேற்றம் காணவில்லை. நாங்கள் அதை நோக்கி இனி பயணிப்போம், எங்கள் அரசியல் பயணம் அதுதான் " என்று சொன்னால் அது வரவேற்கத்தக்கது!
அதை விட்டுவிட்டு ஊழலை ஒழிக்கப்போறேன், குடுமிய மழிக்கப்போறேன் என Qualities க்கும் Ideologies க்கும் வித்தியாசம் தெரியாமல் கூவுவது பிராடுத்தனம் தான்!
புதிதாக வரக்கூடிய ஒரு அரசியல் ஏற்கெனவே இருக்கின்ற ஒன்றை விட மேம்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால் இப்போது நடப்பவை எல்லாம் இருக்கிறதை விட இன்னமும் கீழ் நோக்கி செல்லத்தான் முயல்கின்றன என்பது தெளிவாகிறது..!
- Sivasankaran Saravanan

கருத்துகள் இல்லை: