சனி, 17 பிப்ரவரி, 2018

ஸ்டாலின் :தமிழை ஆட்சி மொழியாகவும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் ஆக்குக ..

தமிழை ஆட்சிமொழி ஆக்குக: ஸ்டாலின்மின்னம்பலம்: சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையான மொழி தமிழ் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில், அவரது கருத்தில் உண்மையிருந்தால் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 17) தனது ட்விட்டர் பக்கத்தில், “சமஸ்கிருதத்தைவிடத் தமிழ் பழமையானது என்ற பிரதமர் மோடியின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ் மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “ தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகளிடம் பிரதமர் மோடி நேற்று உரையாடினார். அப்போது, “தமிழ் மிகப் பழமையான மொழி. சமஸ்கிருதத்தைவிடவும் தமிழ் பழமையான மொழி. அழகான மொழியும்கூட. எனக்குத் தமிழில் வணக்கம் மட்டுமே சொல்லத் தெரியும். தமிழ் கற்றுக்கொள்ளாதது வருத்தமாக உள்ளது” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: