மின்னம்பலம்: அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்கே அரசு வேலை
என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது இளைஞர்களை மிரட்டும் செயல் என்று திமுக எம்.பி.கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுக தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை. இனி நீங்கள் கைகாட்டுபவர்களுக்கே பதவியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதனை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்திலேயே பேசியுள்ளோம்" என்று பேசியிருந்தார்.
அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் நலத்திட்ட உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் கூறியிருந்த நிலையில், அதுபோலவே செங்கோட்டையனும் பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, "கோபியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ‘அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்கே அரசு வேலை கிடைக்கும்’ என்று பேசியுள்ளார். ஒரு அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்ற மரபை மீறி, அதிமுகவினருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கும் என்று சொல்வது கண்டனத்துக்குரியது. அரசு வேலைக்குத் தகுதியும் திறமையும் இருந்தாலும் அதைவிட அதிமுக உறுப்பினர் அட்டைதான் பெரியது என்பது இளைஞர்களை மிரட்டும் செயல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
செங்கோட்டையன் பேச்சு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தினகரன், "அவர்களிடம் உறுப்பினராக இருக்கவே யாரும் விரும்பவில்லை. நிர்வாகிகளும் வருமானத்திற்காகவே உள்ளனர். . யாரும் அதிமுகவிலிருந்து ஓடிப் போய்விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். அவர்களுக்குச் சட்டமும் தெரியவில்லை. இதுகுறித்து யாராவது பொதுநல வழக்கு தொடர்ந்தால் எந்தப் பதவிக்கு ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களோ அந்த அமைச்சர் பதவிக்கே ஆபத்து வந்துவிடும். சீனியரான செங்கோட்டையனுக்கும், செல்லூர் ராஜுவுக்கும்கூட இது தெரியவில்லை" என்று கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக