சனி, 18 நவம்பர், 2017

தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்கள் ... தேர்தல் ஆணையம் தூங்குகிறதா?

மின்னம்பலம் :ஆர்.கே.நகரைப் போல தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போலி வாக்காளர்களை நீக்கத் தமிழக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், " ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவைப் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று போலி வாக்காளர்களை இணைத்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 45,000 போலி வாக்காளர்களை நீக்கம் செய்ய வேண்டுமென்று திமுக சார்பில் புகார் மனு அளித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன் விளைவாக நேற்று (நவம்பர் 17) தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகரில் முதல்கட்டமாக 30,000 போலி வாக்காளர்களை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 15,000 பேரின் வாக்காளர் அடையாள அட்டைக் குறித்த பரிசீலனை நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.
இதேநிலைதான் தமிழகத்தின் மற்ற 233 தொகுதிகளிலும் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் நேரிலும், கடிதம் வழியாகவும் திமுக மாவட்ட செயலாளர்கள் அளித்துள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2018 புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது, போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு தூய்மையான பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் அதிக கவனம் செலுத்தி, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, போலி வாக்காளர்கள் குறித்த தகவல்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் திமுக தலைமைக் கழகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10.45 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: