புதன், 15 நவம்பர், 2017

பேரறிவாளன் வழக்கில் திருப்பம் ? 2 வாரங்களில் முடிவு? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

tamilthehindu :‘‘எதற்காக 2 பேட்டரிகளை வாங்கி கொடுத்தேன் என்பது எனக்கு தெரியாது’’ - இந்த ஒற்றை வரிகளை திட்டமிட்டே மறைத்த சிபிஐ அதிகாரியின் தவறால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு அநியாயமாக இளமையை பறிகொடுத்துள்ளார் பேரறிவாளன். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்த சிபிஐ அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுள்ள உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை தண்டனையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளன் இப்போது..
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 மே 21-ல் தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படை நடத்திய துல்லிய மனித வெடிகுண்டு தாக்குதலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

சோனியா காந்தியின் பரிந்துரையால் நளினியின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் மற்ற மூவரின் தூக்கு தண்டனைக்கு கடந்த 30.8.11 அன்று சென்னை உயர் நீதிமன்றம் திடீரென இடைக்காலத் தடை விதிக்க, மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மற்றவர்களின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் ரத்து செய்து உத்தரவிட்டது.


பேரறிவாளன் அப்போது..
‘எதற்காக என தெரியாது’

ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ முன்னாள் எஸ்.பி.யான தியாகராஜன்தான், பேரறிவாளனிடம் தமிழில்வாக்குமூலத்தைப் பதிவு செய்தவர். அப்போது பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனால் எதற்காக அந்த 2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தேன் என்பது எனக்கு தெரியாது’’ - இதுதான் பேரறிவாளன் கொடுத்த ஒரிஜினல் வாக்குமூலம்.
இதில் ‘‘எதற்காக வாங்கிக் கொடுத்தேன் என்பது தெரியாது’’ என்ற ஒற்றை வரிகளை, வழக்கின் கோணத்துக்காக தியாகராஜன் முழுமையாக பதியாமல் மறைத்ததால் பேரறிவாளன் தனது 19 வயதில் இருந்து தற்போது வரை கடந்த 26 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
மேலும், இந்த வழக்கில் சிவராசனும் பொட்டு அம்மனும் பேசிய வயர்லெஸ் உரையாடலும், ‘இந்தக் கொலை குறித்து சிவராசன், தனு, சுபா ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும்; பேரறிவாளனுக்கு தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பேரறிவாளனை 2 மாதங்கள் மட்டும் பரோலில் வெளியே வர அனுமதித்தது. தற்போது அவர் மீண்டும் சிறைக்குள் இருக்கிறார்.

உத்தரவால் திடீர் திருப்பம்

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘பேரறிவாளனுக்கும் ராஜீவ் கொலை சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்த அதிகாரியே மறுத்துவிட்டார். பெல்ட் வெடிகுண்டை உருவாக்கிக் கொடுத்த நபர் யார் என்பதை புலனாய்வு அமைப்புகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அந்த நபர் தற்போது இலங்கை சிறையில் உள்ளதாக தெரிகிறது. உண்மை குற்றவாளியை விட்டுவிட்டு மற்றவர்களை எல்லாம் சிபிஐ இந்த வழக்கில் சேர்த்துள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.

தியாகராஜன்
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கின் வெளிநாட்டு தொடர்பு குறித்து நீண்டகாலமாக விசாரித்துவரும் பல்நோக்கு விசாரணைக் குழுவும் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

‘உடனே விடுவிக்க வேண்டும்’

பேரறிவாளனுக்காக ஆரம்பம் முதலே ஆஜராகிவரும் வழக்கறிஞர் கே.சிவக்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. காரணம், பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் கடந்த 26 ஆண்டுகளாகசட்டரீதியாகப் போராடி வருகிறோம். ஆனால், சிபிஐ செய்த மன்னிக்க முடியாத குற்றத்தால் பேரறிவாளன் தனது 26 ஆண்டுகால இளமையை அநியாயமாக சிறையில் கழித்துள்ளார்.
இப்போதுள்ள சூழலில் நாங்கள் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. இதில் அரசியல் பாகுபாடு பார்க்காமல் அவரை விடுவித்தால் போதும் என்ற மனநிலையில்தான் உள்ளோம்.
சிபிஐ அதிகாரியின் வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றமே ஏற்றுள்ளதால் தமிழக அரசு தனக்கு உள்ள சிறப்பு அதிகாரமான சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்காமல் பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய வேண்டும்’’ என்றார்.

சிவராசன், தனு உள்ளிட்டோர்..

ஆயிரம் ஓட்டைகள்

பெயர் கூற விரும்பாத சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, ‘‘ராஜீவ் கொலை வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே சிபிஐ முறையாக செயல்படவில்லை.
இந்த வழக்கில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் ஏராளமான அரசியல் பொதிந்து கிடக்கிறது’’ என்றார்.

கருத்துகள் இல்லை: