வெள்ளி, 17 நவம்பர், 2017

மன்னிப்புக் கேட்டும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

மன்னிப்புக் கேட்டும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!மின்னம்பலம் : சமூக வலைதளங்களில் நீதிபதி குறித்துக் கருத்து பதிவிட்டதற்கு மன்னிப்புக் கோரியும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகி இளங்கோவன் மின்னம்பலத்திடம் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்துக் கருத்து தெரிவித்ததுடன், சில கேள்விகளையும் எழுப்பினார்.
இதையடுத்து ஆசிரியர்கள் சிலர் நீதிபதி கிருபாகரன் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர். அவ்வாறு விமர்சனம் செய்த ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து நேற்று (நவம்பர் 16) பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை எடுத்தது.

இது குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகி இளங்கோவனிடம் கேட்ட போது, “இந்த நடவடிக்கை என்பது தேவையில்லாத ஒன்று.. நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. இது தெரியாமல் செய்த தவறு. இதுபோன்று இனி நடைபெறாது என்று கூறி ஆசிரியர்கள் எழுத்துபூர்வமாக மன்னிப்புக் கேட்டுள்ளனர். இதன் பிறகும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கத் தேவையில்லை. மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனவே இதனை மறுபரிசீலினை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: