வெள்ளி, 17 நவம்பர், 2017

10 லட்சம் அதிமுக போலி வாக்காளர்கள்!

10 லட்சம் போலி வாக்காளர்கள்!
மின்னம்பலம் :திமுக புகாரின் அடிப்படையில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கித் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பத்து லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்களர்களை நீக்கம் செய்யவும் முடிவெடுத்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப் பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இத்தொகுதியில் போலி வாக்காளர்கள் ஏராளமாக உள்ளனர், அவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்.கே. நகர் தொகுதியில் 30,495 பேர் போலி வாக்காளர்கள் உள்ளனர் எனக் கண்டறியப்பட்டு அவர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 15,000 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. அதேபோல தமிழகம் முழுவதும் 10.45 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்துவது தாமதமாகியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு மேலாகியும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: