வியாழன், 16 நவம்பர், 2017

துரை தயாநிதி மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் ... அழகிரி மகன் தயாநிதி ,,,,

துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!மின்னம்பலம் : முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கு ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸ் கிரானைட் பங்குதாரராக இருந்த முக.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது சட்டத்திற்குப் புறம்பாக மதுரை கீழவளவுப் பகுதியில் கிரானைட் வெட்டி எடுத்ததாகக் கூறி கடந்த 2012ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.254 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

மதுரையில் கிரானைட் கொள்ளைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் சிறப்பு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டு நீண்ட ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் மதுரையில் நடந்த பல்வேறு கிரானைட் முறைகேடுகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் துரை தயாநிதியின் வழக்கு மீது இன்று (நவம்பர் 16) மதுரை கீழவளவு காவல் துறையினர் கிரானைட் முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
துரை தயாநிதியுடன் சேர்த்து 15 பேர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றப் பத்திரிக்கை 5191 பக்கங்களைக் கொண்டது. இதன் அடிப்படையில் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீதும் விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2012ஆம் ஆண்டிலேயே கிரானைட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் தடை பெற்று கைதாவதிலிருந்து துறை தயாநிதி தப்பினார். இந்தச் சூழலில் இந்த வழக்கில் தற்போது மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: