ஞாயிறு, 29 அக்டோபர், 2017

மேயாதமான் ! வடசென்னை மக்களை ரௌடிகளாய் ,கூலிப்படையாய் காட்டாமல் இயல்பாக கண்ணியமாக

Shalin Maria Lawrence : மேயாதமான் ! பொதுவாக சினிமா தியேட்டர்களுக்கு செல்லும்போது உடம்பில் ஒரு செயற்கைத்தனம் தொற்றிக்கொள்ளும் .அதுவும் மௌண்ட்ரோடு சத்யம் போன்ற மேட்டுக்குடி திரையரங்கிற்கு செல்லும்போது அதற்கான பிரத்யேக உடை ,சிகையலங்காரம் ,வாயில் வழவழா கொழ கொழா இங்கிலிஷ்,கைப்பையை மாட்டிக்கொள்ளும் விதம் ,இதழ்களில் ஒரு செருக்கு புன்னகை என்று உச்சபட்ச வேதனைகளோடு படம் பார்க்க செல்வதுண்டு.
அத்தகைய எந்த வித இம்சைகளிலாமல் சமீபத்தில் பார்த்த படம் மேயாதமான் .
வடசென்னை பற்றிய படம் என்று பலரும் கூறியதால் ,பெரம்பூரில் உள்ள S2 வில் பார்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது . இப்பொழுதெல்லாம் இரவு காட்சிகளில் நாட்டம் அதிகமாய் போனதால் ,இரண்டாவது ஆட்டத்திற்கு போய் சேர்ந்தோம் .
பழைய வீனஸ் தியேட்டர்தான் தான் இன்றைய S2 என்பது உங்களுக்கு ஓர் உபரி தகவல். இங்கே பார்க்கிங் 30 ரூபாய் மட்டுமே என்பது கற்கண்டு தகவல்.
சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனதுபோல் இருந்தது பெரம்பூர் S2 வில் படத்திற்கு போனது .அதிக வெள்ளையாக ,அதிகம் பேர் இல்லை . நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பேர் இருந்தார்கள் ,குழந்தை குட்டி சகிதம் எந்த ஒரு செயற்கைத்தனமும் இல்லாமல் .

இந்த படமும் அப்படிதான் .எந்த செயற்கைத்தனமும் இல்லாத ஒரு நல்ல படம் . திரைக்கதை பிரமாதம் ,எடிட்டிங் அற்புதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் . எந்த பூச்சும் எந்த சாயமும் இல்லாத ஒரு ஸ்வாரயமான படம் .
திரைப்படங்களில் இரண்டு விதம் உண்டு .
1 . Propaganda Films -கதை என்று பெரிதாய் எதுவும் இருக்காது ஆனால் ஒரு கருத்தை ,ஒரு பிரசாரத்தை படம் முழுக்க செய்து கொண்டிருக்கும் .மெர்சல் போல .
2 . Lifestyle Films - உலகத்திற்கு ஒன்றும் சொல்ல வராது . மனிதர்களின் கதையை சித்தரிக்கும் ஒரு புகைப்படத்தை போல,ஓவியத்தை போல ,பார்க்க ஈர்ப்புடன் இருக்கும் .அதில் கருத்துக்கள் ,பாடம் இருக்கிறதா என்று பார்ப்பதெல்லாம் மக்கள் விருப்பம் ,அது திணிக்காது . அப்படி ஒரு படம்தான் மேயாதமான் .
அதிக நாள் கழித்து வடசென்னை மக்களை ரௌடிகளாய் ,கூலிப்படையாய்,படிக்காதவர்களாய் காட்டாமல் இயல்பாக கண்ணியமாக காட்டி இருக்கிறது இந்த படம் .
வடசென்னை என்றாலே வெறும் குடிசைமாற்று வாரிய கட்டிடங்களை (housing boards ) காட்டுவார்கள் .அப்படி இல்லாமல் வடசென்னையில் சின்ன சின்ன சந்துகளில் இருக்கும் குட்டி அழகிய வீடுகளை காட்டியிருக்கிறார்கள் . இதுதான் வடசென்னை .இந்த படமும் இதுதான் .
ரொம்ப நாள் கழித்து ,ரஞ்சித் படங்களுக்கு பின்பு வடசென்னை மொழியை சரியாக பிடித்திருக்கிறார்ககள் . விக்ரம் வேதாவில் வந்த மாதிரி வேண்டுமென்றே வட சென்னை slangs அடிக்கடி திணிக்கப்படவில்லை .தேவையான இடங்களில் மட்டும் மின்னுகிறது .
கேபிள் டிவியின் வருகைக்கு முன்னாள் எல்லாம் அநேக வீடுகளில் தாயபாஸ் (தாயத்தின் வடசென்னை மருவு) ஆடுவார்கள் .பின்மதிய வேளைகளில் அக்கம் பக்கத்து வீடுகளில் அப்படி ஆடும்பொழுது பித்தளையிலான அந்த தாயகட்டைகளை தரையில் சக் என்ன குத்தி கையில் கடகடவென தேய்த்து தரையில் உருள விடுவார்கள் . அப்படி ஒரு ரம்மியமான ஒரு பீல் இந்த படத்தில் கிடைக்கிறது .
துப்பட்டா போட்ட பெண் நல்ல பெண் ,காதலிக்காத பெண் நல்லப்பெண் போன்ற சமீபகாலத்தின் இளைஞன் எப்படி யோசிப்பானோ அப்படி ஒரு கேரக்டரில் வலம் வருகிறார் வைபவ் .மீம் பேஜுகள் ,தமிழ் பார்முலா படங்களின் பாதிப்பின் பிரதிபலிப்பு தான் ஹீரோ என்பது நன்றாக விளங்குகிறது. தற்போதைய இளைஞர்களின் தத்ரூப பிம்பத்தை இயக்குனர் அழகாக கட்சி படுத்தி இருக்கிறார் .
வைபவா அது ?!
முதல் முறையாக வைபவ் என்னும் நடிகனை தெரிந்து கொண்டிருக்கிறேன் .
பொதுவாக ஒன் சைடு லவ் ,லவ் failure கதாபாத்திரங்களில் வரும் ஆண்கள் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்வார்கள் .ஆனால் இந்த படத்தில் வைபவின் நடிப்ப எந்த இடத்திலும் முகம் சுளிக்க வைக்கவில்லை .
ஆனால் பெண்களை தாக்கும் படி வரும் வசனங்களுக்கு தியேட்டரில் ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள் அதிகம் எரிச்சலை ஏற்படுத்துகின்றனர் . காயப்படுத்தும் பெண்ணை கூட உருகி உருகி காதலித்த இந்த 70களின் ஆண்கள் ,80களின் ஆண்கள் எங்கே ? Limited stocks .
வைபவை விட அதிகம் கவர்ந்தது அவரின் அந்த அழுக்கு லுங்கி நண்பர் தான் . அழுக்கி லுங்கிகள்தான் எவ்வளவு அழகு ❤️.
அழுக்கு லுங்கி அணிந்தவர்களின் பின் இருக்கும் கதைகள்தான் எத்தனை....எத்தனை .
வைபவின் தங்கையாக வரும் பெண் ...woww....ரொம்ப வருடங்கள் கழித்து இப்படி ஒரு பெண்ணை பார்க்கிறேன் ....சும்மா pepper beef fry போல .
ப்ரியா இருக்கிறார் ...ஆனால் சின்னதிரையின் அழுத்தம் இதில் இல்லை .
இசையை பற்றி ஏற்கனவே புகழ்தாயிற்று .
சந்தோஷும் ப்ரதீப்பும் விர்ஜின் மோஜிட்டோ குடித்து கொண்டே நல்ல ராயபுரம் இறால் தொக்கை சாப்பிட்ட மாதிரி கலக்கலான ஒரு இசையை கொடுத்திருக்கிறார்கள் . "எங்கவீட்டு குத்துவிளக்கு" அதிக நாள் கழித்து கேட்ட authentic காணா .
படத்தின் highlight அந்த திருமண வரவேற்பில் நடக்கும் இசைகச்சேரிதான் .டாப்டக்கர் .
இயக்குனர் ரத்தினக்குமாருக்கு நிச்சயமாக ஒரு அழகியக் திரை ஸ்டைல் இருக்கிறது . கொஞ்சம் திரைக்கதையை பாலிஷ் செய்திருந்தால் படம் வேறு லெவல் போய் இருக்கும். மழை பெய்து விட்ட சென்னை ரோடுகள் போல் அங்கங்கே சறுக்கல் .
இரண்டு ஜோடிகளை வைத்து இயக்குனர் தாயம் விளையாடி இருக்கிறார் ..தாயம் ஆடும்போது பெண்கள் பேசிக்கொள்ளும் ஊர் வம்பை போல் ரகசிய கலகலப்பாக இருக்கிறது படம் .
A pleasant try .
பிகு : இது திரை விமர்சனம் அல்ல . ... விமர்சனம் செய்யுமளவிற்கு எனக்கு எந்த தகுதியுமில்லை.
இவையெல்லாம் ஒரு திரைப்படத்தைப் பற்றிய எனது அனுபவம் மட்டுமே.
ஷாலின்

கருத்துகள் இல்லை: