திங்கள், 30 அக்டோபர், 2017

தீபாவை காணவில்லை ... கணவர் மாதவனுக்கு தீபாவின் ஓட்டுனர் ராஜாவுக்கும் சண்டை

தீபா, மாதவன்
தினத்தந்தி :கணவர் மற்றும் கார் ஓட்டுனருக்கு இடையே, உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளதால், தீபா மாயமாகி உள்ளார். மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபா. இவர், சென்னை, தி.நகர் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும், கணவர் மாதவன் பேட்ரிக்கும் இடையே, அவர்களின் கார் டிரைவர், ராஜா என்பவரால், பிரச்னை வெடித்து வருகிறது.தீபா துவங்கி உள்ள, 'எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை' நிர்வாகிகள் சந்திப்பு தொடர்பாக, மாதவன்பேட்ரிக்கும், ராஜாவும் பல முறை மோதிக் கொண்டனர். ; சில மாதங்களுக்கு முன்,ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீட்டில் தீபா நுழைய முயன்ற போது, பிரச்னை ஏற்பட்டது; இருவரும் ஒருமையில் திட்டிக்கொண்டனர். சமீபத்தில், தீபாவின் வீட்டில், மாதவன் பேட்ரிக்கிற்கும், ராஜாவுக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, மாம்பலம் போலீசில், மாதவன் பேட்ரிக் புகார் அளித்துள்ளார். ஆனால், 'அவரது புகாரில்உண்மை இல்லை' என, தீபா போலீசில் தெரிவித்து இருப்பதால், மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.இதனால், மூன்று நாட்களாக, தீபா வீட்டை பூட்டி விட்டு மாயமாகி உள்ளார். அவர், எங்கு தங்கி உள்ளார் என்பது மர்மாக உள்ளது.

- நமது நிருபர் -
விகடன் : அங்கு நடந்த சம்பவம் வேதனையாக இருக்கிறது!’ - div>
Chennai:  தீபா வீட்டில் நடந்த சம்பவங்கள் எனக்கு மனவேதனையாக இருக்கிறது என்று மாதவன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அவரது அண்ணன் மகள் தீபா தீவிர அரசியலில் குதித்தார். தீபாவுக்குப் பக்கபலமாக அவரது கணவர் மாதவன் செயல்பட்டுவந்தார். இந்தச் சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் தனித்தனியாக அரசியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு, போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா சென்ற சமயத்தில் மாதவனும் அங்குச் சென்றார். அங்கு தீபாவின் கார் டிரைவர் ராஜாவுக்கும் மாதவனுக்கும் இடையே நடந்த களேபரம், போலீஸ் நிலையம் வரை விசாரணைக்குச் சென்றது.
அதன்பிறகு தீபாவுடன் இணைந்து மாதவன் அரசியலில் ஈடுபட்டு வந்தார். தற்போது, தீபாவின் கார் டிரைவர் ராஜாவுக்கும் மாதவனுக்கும் இடையே பிரச்னை எரிமலையாக வெடித்துள்ளது. இதுதொடர்பாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ராஜாமீது மாதவன் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் ஏற்பு சான்றிதழை (சி.எஸ்.ஆர்) போலீஸார் கொடுக்காமல் பல மணிநேரம் இழுத்தடித்துள்ளனர். நீண்ட போராட்டத்துக்குப்பிறகு இரவு 10.45 மணியளவில் ராஜாமீது போலீஸார், எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
தீபா வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக மாதவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
 ராஜாமீது ஏன் போலீஸில் புகார் கொடுத்தீர்கள்?  
“தீபா அழைத்ததின்பேரில் தி.நகர் வீட்டுக்குச் சென்றேன். அரியலூர், திருச்சி ஆகிய இடங்களுக்குத் தீபாவும் நானும் சென்ற சமயத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. தீபாவுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தேன். இந்தச் சமயத்தில் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மீட்டிங் நடந்தது. மீட்டிங் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பே ராஜாவால் என்னுடைய செக்யூரிட்டிகளுக்குப் பிரச்னை ஏற்பட்டது. குடியாத்தம் கூட்டத்துக்கு ராஜா வந்திருந்தார். சென்னை வந்தபிறகு வீட்டில் வேலை செய்தவர்களில் சிலரை ராஜா மிரட்டியதாக எனக்குத் தகவல் வந்தது. நான் அமைதியாக இருந்தேன். கடந்த 26ம் தேதி இரவு வீட்டில் நான் இருந்தபோது ராஜா, எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்தேன். உடனடியாக போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர்.
பிறகு, மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு வரச் சொன்னார்கள். அதன்படி மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் சென்று புகார் கொடுத்தேன். ஆனால், புகார் ஏற்புச் சான்றிதழை (சி.எஸ்.ஆர்) அங்குள்ள போலீஸார் என்னிடம் வழங்காமல் இழுத்தடித்தனர். மாலை 3 மணிவரை அங்கேயே காத்திருந்தேன். அப்போது, மாலை 5 மணிக்கு வரும்படி போலீஸார் தெரிவித்தனர் மீண்டும் போலீஸ் நிலையத்துக்குச் சென்ற போது சி.எஸ்.ஆர். நகல் வழங்கப்படவில்லை. அதன்பிறகே மீடியாவிடம் தகவலைத் தெரிவித்தேன். அதன்பிறகு இரவு 10.45 மணியளவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டு அதை என்னிடம் கொடுத்தனர்".
மாதவன்
 நீங்கள் கொடுத்த புகாரில் உண்மையில்லை என்று தீபா போலீஸ் நிலையத்தில் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளதே?
 “நான் கூறிய புகார் உண்மையில்லை என்று தீபா சொன்னால், போயஸ் கார்டன் வீட்டு வாசலில் மீடியா, பொது மக்கள், போலீஸார் முன்னிலையில் ராஜா என்னை மிரட்டியது உண்மையில்லையா, அதுமட்டுமல்லாமல் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்க முயற்சி செய்ததும் உண்மையில்லையா. வீட்டில் நடந்த சம்பவங்களை வெளியில் கொண்டு வந்தால் நல்லா இருக்காது என்று அமைதியாக இருந்தேன். உயிரே போகும்போது புகார்கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி? மனதில் 100டன் வெயிட் வைத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் என் மனநிலை இருக்கிறது. வாழ்வதைவிட சாவதே மேல் என்ற நிலைமையில் இருக்கிறேன்".
மிரட்டல் சம்பவத்துக்குப்பிறகு ராஜாவை தீபா எச்சரித்தாரா?
 "மேடம் (தீபா) முன்னிலையில் என்னை அவர் மிரட்டவில்லை. உண்மையிலேயே போலீஸ் நிலையத்தில் தீபா அப்படிச் சொன்னாரா. இல்லை மிரட்டிச் சொல்ல வைக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை"
இனி உங்களது அரசியல் பயணம் எப்படியிருக்கும்?"

நான் தொடங்கியிருப்பது கட்சி. தீபா தொடங்கியது பேரவை. இதனால், அவை இரண்டும் தனித்தனியாகச் செயல்படும் என்று ஆரம்பத்திலேயே தெரிவித்துள்ளேன். ஜெயலலிதா மரணத்துக்கு நீதிகேட்டு குமரியிலிருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். அதற்குள் தீபா, என்னை வீட்டுக்குள் அழைத்ததால் அங்குச் சென்றேன். இதனால் நடைபயணம் தள்ளிப்போனது. இதற்கிடையில் தமிழக அரசும் விசாரணை கமிஷனை அறிவித்துவிட்டது. தீபாவுடன் இணைந்து பணியாற்றியபோது சிறப்பாகச் செயல்பட்டேன். அந்த வளர்ச்சி சிலருக்குப் பிடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறேன்"

கருத்துகள் இல்லை: