வெள்ளி, 3 நவம்பர், 2017

ஊழலை பாதுகாக்க ஒரு சட்டம்! ராஜஸ்தான் வசுந்த ராஜியின்( பாஜக) குற்றவியல் அவசரச் சட்டம் - 2017’

subramanian.ramakrishnan : ஊழலை ஒழிக்க முடியாததால் உண்மையை ஒளிக்க ஒரு சட்டம்!
தெருவிளக்கு
ஊழல் செய்திகளைத் தடுக்கும் அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து ராஜஸ்தான் ஊடகவியலாளர்கள் நடத்திய போராட்டம்
அ. குமரேசன்
ஊழல் ஒழிப்பே தனது முதன்மைக் கடமை என பாஜக ஆரவாரமாய்ச் சொன்னதெல்லாம் நினைவூட்டத் தேவையில்லாத புளித்துப்போன வசனங்கள். ஊழல் பற்றி வெளியே தெரிந்தால்தானே அதை ஏன் ஒழிக்கவில்லையென மக்கள் கேட்பார்கள் என்ற ஞானம் இப்போது ஊறியது போலும். ஊழல் நடக்காமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு மாறாக, ஊழல் வெளியே தெரியாமலிருப்பதை உறுதிப்படுத்த அவசரச் சட்டம் போட்டிருக்கிறது ராஜஸ்தான் மாநில பாஜக அரசு.
‘குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தங்கள்) அவசரச் சட்டம் - 2017’ என்பது அதன் பெயர். அதைத் தொடர்ந்து முறையான சட்டத்திற்கான முன்வரைவு ஒன்றையும் கொண்டுவந்திருக்கிறது.
அவசரச் சட்டத்தின்படியும், சட்ட முன்வரைவின்படியும், அரசுத்துறையில் உள்ளவர்கள் மீது கூறப்படும் ஊழல் புகார்கள் பற்றி அரசின் அனுமதி பெறாமல் விசாரணை அமைப்புகள் எந்த விசாரணையும் நடத்தக்கூடாது. பணியில் இருக்கும் அலுவலர்கள் மட்டுமல்ல, ஓய்வுபெற்றவர்கள் மீதான புகார்களை விசாரிக்கவும் முன்னனுமதி பெற வேண்டுமாம். இந்நாள்/முந்நாள் நீதிபதிகள் பற்றிய ஊழல் புகார்களுக்கும் இதே விதிதான்.இந்தத் தடை அரசாங்க சார்பு புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமல்ல, மக்கள் சார்பு புலனாய்வு அமைப்புகளான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களும் இந்தக் கட்டளைக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.
அதாவது, “எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி இப்படியொரு ஊழல் நடந்திருக்கிறது,” என்று செய்தி வெளியிட முடியாது. குறிப்பிட்ட துறையில் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது” என்றும் மக்களுக்குத் தெரிவிக்க முடியாது. மீறினால் இரண்டாண்டு சிறை!“பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள்,” என்று சட் டத்தில் கூறப்பட்டிருக்கிற வரையறைக் குள் அலுவலர்கள் மட்டும் வருவார்களா அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரும் இந்த விசாரணை வெயில் தடுப்புக் குடையின் கீழ் வருவார்களா? ஊழலில் ஈடுபடும் பல அதிகாரிகள் இவர்களின் ஏஜெண்ட்கள்தான், அவர்கள் வசூலிப்பதன் ஒரு பகுதி இவர்களுக்கோ இவர்களது பினாமிகளுக்கோ போய்ச்சேர்கிறது என்பது நாடு தழுவிய நிலவரம்.
நாட்டைக் குலுக்கிய பல ஊழல் விவகாரங்கள் ஊடகச் செய்திகள் மூலமாகவே வெளிவந்தன. அரசியல் கட்சிகளும் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளும் பொதுமக்களும் அந்த விவகாரங்கள் குறித்துக் கூர்மையாக எதிர்வினையாற்றியதால்தான் அதிகாரப்பூர்வ விசாரணைகள் தொடங்கின. பல வழக்குகளை நீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்துக் கொண்டதும் உண்டு.அரசின் அனுமதி பெறாமல் வெளியிடக்கூடாது என்றால், போபோர்ஸ், நிலக்கரி, 2 ஜி, கார்கில், வியாபம், கிரானைட், மணல் மாஃபியா, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல உண்மைகள் புதைக்கப்பட்டிருக்கும். மூன்றே ஆண்டுகளில் ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் வணிகம் 16,000 மடங்காக எகிறிய அதிசயம் இருட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கும்.அனுமதி பெற்றுதான் ஊழல் செய்திகளை வெளியிட வேண்டும் என்பதற்கு, பத்திரிகை ஒன்றும் அரசிதழ் அல்ல.
அவசர நிலை என்று அறிவிக்காமலே இப்படியான வாயடைப்பு அடக்குமுறைகளைச் செயல்படுத்த முடியும் என்று காட்டியிருக்கிறது ராஜஸ்தான் மாநில பாஜக அரசு.ஊடகவியலாளர்கள், அரசியல் தலை வர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரது கடும் எதிர்ப்பின் காரணமாக சட்டமுன்வரைவை சட்டமன்றத் தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பியிருக்கிறது வசுந்தரா ராஜே அரசு. ஆனால் அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே, அதற்கு முன் பிறப்பிக்கப் பட்ட அவசரச் சட்டம் நடைமுறையில்தான் இருக்கிறது, அதை வைத்து அச்சுறுத்த முடியும், துன்புறுத்த முடியும் என்று ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர், ஜோத்பூர் கிளைகளில் ஆணைகோரும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 8 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோடி அரசும், வசுந்தரா ராஜே அரசும் என்ன பதில் சொல்லப்போகின்றன, நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கக்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
குரங்கு தன் குட்டியை விட்டு குளத்தை ஆழம் பார்க்கும் என்பார்கள். நாடு முழுவதற்குமான அடக்குமுறைக்கு இது ஒரு ஒத்திகையாக இருக்கலாம் என்று ஏன் சொல்லக்கூடாது?ஊடகச் சுதந்திரம் இப்படி ஒடுக்கப்படுவதற்குப் புதிய வடிவில் எதிர்ப்பைக் காட்ட முடிவு செய்திருக்கிறது ஒரு முன்னணிப் பத்திரிகை. ‘ராஜஸ்தான் பத்திரிகா’ என்ற அந்தப் பத்திரிகை தனது முடிவைத் தலையங்கமாக எழுதி, முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கிறது. சட்ட முன்வரைவும், அவசரச் சட்டமும் விலக்கிக்கொள்ளப்படும் வரையில், முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கப் போவதாக, ராஜஸ்தானில் அதிகமான மக்களைச் சென்றடைந்துகொண்டிருக்கிற அந்தப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் குலாப் கோத்தாரி அறிவித்திருக்கிறார்.
ஒரு ஊடகம் இப்படிப்பட்ட முடிவை எடுக்கலாமா, முதலமைச்சர் பஙகேற்கும் நிகழ்வுகள் பற்றிய செய்திகளை வாசகர்கள் அறிந்துகொள்ள முடியாமல் தடுக்கலாமா என்ற ஊடகக் கடமை சார்ந்த கேள்விகள் எழவே செய்கின்றன. இது பற்றி முடிவு செய்ய வேண்டியது அந்தப் பத்திரிகைதான். ஆயினும், இது ஒரு போராட்டம். கருத்துச் சுதந்திரத்திற்கும், ஜனநாயக உரிமைக்குமான போராட்டம்.“ஏன் முதலமைச்சரின் அந்தச் செய்தி வரவில்லை,” என்று குறிப்பிட்ட நிகழ்ச்சி பற்றி யாராவது கேட்பார்கள். “கோரமான சட்டத்தை எதிர்த்து இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது,” என்று யாராவது பதில் சொல்வார்கள். தங்களுடைய வரிப் பணம் சூறையாடப்படும் ஊழல் திருவிளையாடல்கள் பற்றித் தெரிந்துகொள்ளத் தங்களுக்கு உள்ள உரிமை, ஊழல் பீடங்களின் அனுமதி பெற்றாக வேண்டும் என்ற விதியால் பறிக்கப்படுவது கண்டு மக்கள் கொந்தளிக்கட்டும் அந்தக் கொந்தளிப்பில் அடக்குமுறை ஆணைக் காகிதங்கள் பொசுங்கட்டும்.

கருத்துகள் இல்லை: