செவ்வாய், 31 அக்டோபர், 2017

வடசென்னை கொசஸ்தலையாறுக்கு கமல் (காமிராவோடு) சென்றது எப்படி?

மின்னம்பலம்  : டெங்கு, மெர்சல் என்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்த அரசியல் களத்தில் கமல்ஹாசனின் கொசஸ்தலையாறு குறித்த ட்வீட்டும் அதையடுத்து அவர் அங்கு அடித்த விசிட்டும் புதிய அதிர்வுகளை எழுப்பின. உண்மையாக சொல்லப்போனால் பலர் கொசஸ்தலையாறு என்னும் பெயரையே இப்போதுதான் கேள்வி ப்பட்டிருப்பார்கள்அடையாறு கூவம் ஆகிய இரு நதிகளின் ஒட்டுமொத்தக் கொள்ளளவைப் போல நான்கு மடங்கு அதிகக் கொள்ளளவு கொண்ட அந்த ஆறு குறித்து கமல் பேசியிருப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இப்போது புரிந்திருக்கும்.
எண்ணூரில் இருக்கும் இந்த ஆறு பற்றி கமல் திடீரென்று பேச என்ன காரணம்? கமலுடன் எண்ணூருக்குச் சென்றிருந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனுடன் இது குறித்துப் பேசினோம். அவர் தெரிவித்த தகவல்கள் கமல் கொசஸ்தலையாறுக்கு வந்த கதையை சுவாரஸ்யமாகச் சொல்கின்றன.


கொசஸ்தலையாறில் கழிவுப் பொருள் கொட்டப்படுவதால் வடசென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று கமல் ட்வீட் செய்தார். இந்தச் செய்தியை அவர் முதன்முதலாகக் கேள்விப்பட்டது ‘சென்னைப் புறம்போக்கு பாடல்’ மூலமாக.
கொசஸ்தலையாறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் கொண்டுவரவும் பல தளங்களில் பணியாற்றிவருபவர் நித்யானந்த் ஜெயராமன். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவரும் இவரைப் போன்ற சிலரும் ஒரு கூட்டமைப்பை வைத்துப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.
இந்தப் பணிகளின் ஒரு பகுதியாகப் பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான கேபர் வாசுகி ‘சென்னைப் புறம்போக்கு பாடல்' என்னும் பாடலை எழுதி இசையமைத்தார். இந்தப் பாடல் தமிழ் ‘ராப்' பாடலாக வெளியானது.
இதே பாடலைக் கர்னாடக இசைப் பாணியில் பிரபல கர்னாடக பாடகர் டி.எம்.கிருஷ்ணா பாடியுள்ளார். ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பாடலைப் பார்த்த கமல், இதுபற்றி கிருஷ்ணாவிடம் பேசியிருக்கிறார். அவர் மூலமாக நித்யானந்த் ஜெயராமனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நித்யானந்த் ஜெயராமன் இந்தப் பாடலின் பின்னணியில் இருக்கும் பிரச்னைகள் பற்றி கமலுக்கு எடுத்துக் கூறியுள்ளார். அப்படித்தான் கொசஸ்தலையாறு குறித்துக் கமல் விரிவாகத் தெரிந்துகொண்டிருக்கிறார்.
கொசஸ்தலையாறு பகுதிக்குச் சென்ற கமல் அங்கு சுற்றிப் பார்த்தபோது அவர் பழைய நினைவுகளில் மூழ்கியதாக நித்யானந்த் மின்னம்பலம்.காமிடம் பகிர்ந்துகொள்கிறார். படப்பிடிப்புக்காகத்தான் இந்த இடத்துக்கு வந்திருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். அங்கு கட்டப்பட்டுள்ள ஒரு பாலத்தைக் கண்ட கமல், முன்பு வந்தபோதெல்லாம் இது இங்கே இல்லையே என்று கேட்க, அது புதிதாகக் கட்டப்பட்ட பாலம் என ஜெயராமன் சொல்லியிருக்கிறார்.
மரோசரித்ரா படத்துக்காக இயக்குநர் கே.பாலசந்தர் இந்த இடத்தில்தான் தன்னைக் குதிக்கச் சொன்னார் என்று கமல் ஜெயராமனிடம் கூறியிருக்கிறார். பாலத்திலிருந்து கீழே எட்டிப் பார்த்த கமல், “இந்த இடத்தில் இப்போது எவ்வளவு ஆழம் இருக்கும்?” என்று கேட்டார். கொக்கு நிற்கும் அளவுக்குத்தான் இப்போது இந்த இடத்தில் ஆழம் இருக்கிறது என்றார் ஜெயராமன்.
“கமல்ஹாசன், தன் குருநாதரான பாலசந்தர் சொன்னால் எதையும் செய்யக்கூடியவர்தான். ஆனால், பாலசந்தர் இன்று உயிரோடு இருந்தால் கமலை இங்கே குதிக்கச் சொல்ல மாட்டார். காரணம், இந்த இடம் அந்த அளவுக்குச் சேறும் சகதியுமாய் இருக்கிறது” என்கிறார் ஜெயராமன்.
எண்ணூரில் உள்ள கொசஸ்தலையாறு பிரச்னையைக் கமல் எந்த அளவுக்கு இப்போது புரிந்துகொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு, “மிகச் சுலபமாகவும் வேகமாகவும் விஷயங்களைக் கமல் புரிந்துகொள்கிறார். பிரச்னையின் ஆழத்தை அதன் காரணங்களோடு அவரிடம் மிக எளிதாக என்னால் சொல்ல முடிந்தது” என்கிறார் ஜெயராமன். இவ்விஷயத்தில் கமல் காட்டிய அக்கறை ஆத்மார்த்தமானது என்பதையும் அவரோடு பேசியபோது புரிந்துகொள்ள முடிந்தது என்றும் ஜெயராமன் தெரிவிக்கிறார்.
எண்ணூர் உப்பங்கழி முதலான பிரச்னைகள் குறித்து மின்னம்பலத்தில் வெளியான கட்டுரைகளை வாசிக்க:

கருத்துகள் இல்லை: