செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

விவசாயிகளை ஒழிக்கப் போகும் கார்ப்பரேட் சந்தை !

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியவை சிறு, குறு விவசாயிகளைக் கவ்விப்பிடிக்கும் கிடுக்கியின் இரண்டு முனைகள்.

ந்திய விவசாயத்தைப் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வர்த்தகச் சூதாட்டக் களமாக  மாற்றுவதையே தனது வேளாண்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளது மோடி அரசு! இதற்கேற்ப வேளாண்மைத் துறையின் விதை, நீராதாரங்கள், நிலம், இயற்கைவளம்  என அனைத்துக் கட்டமைப்புகளும் கார்ப்பரேட் நலனுக்கேற்ப மறு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போதுள்ள  வேளாண் சந்தைகளையும் கார்ப்பரேட் நலனுக்கானதாக மறுசீரமைக்கும் வகையில், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகிய இரு திட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் (FPO)
விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் என்பது கூட்டுறவு அமைப்பின் உருத்திரிந்த வடிவம். உலக முதலாளித்துவத்துக்கு சோசலிச அரசும் சமூக அமைப்பும் சவாலாக விளங்கிய சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், சோசலிசத்தின்பால் ஈர்க்கப்படும் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடனும் எல்லாத் துறைகளிலும் கூட்டுறவுகள் திட்டமிட்டே ஊக்குவிக்கப்பட்டன.

முதலாளித்துவ சந்தையின் சுரண்டலிலிருந்து ஒப்பீட்டளவிலான ஆறுதலை இந்தக் கூட்டுறவு அமைப்புகள் வழங்கியதால், தொழிலாளர் கூட்டுறவுகள் முதல் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டுறவு வரையிலான பல்வேறு சிறு உடைமையாளர்களின் கூட்டுறவு அமைப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மக்களின்  ஆதரவைப் பெற்றன. கலப்புப் பொருளாதாரத்தை பின்பற்றிய இந்திய அரசும் அன்று கூட்டுறவை ஊக்குவித்தது.

விவசாயி விளைபொருள் சந்தையை இணையதளம் வழியாக தேசியமயமாக்குவது தொடர்பாக இந்திய அரசும் கர்நாடக மாநில அரசும் இணைந்து, கர்நாடக மாதிரியை நாடெங்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக 26 மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் அதிகாரிகளைக் கூட்டி வைத்து நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் (கோப்புப் படம்)
சோசலிசம் தனக்குச் சவாலாக இருந்தவரை இந்தக் கூட்டுறவு அமைப்புகளைச் சகித்துக் கொண்ட உலக முதலாளித்துவம், சோசலிசம் வீழ்ந்த மறுகணமே கூட்டுறவு அமைப்புகளை வீழ்த்தும் நடவடிக்கையை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தொடங்கியது. புதிய தலைமுறை கூட்டுறவு அமைப்புகள் (New Generation Co-operatives) என்று அழைக்கப்பட்ட இந்த அமைப்புகள், கூட்டுறவு என்ற பெயரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அந்த அமைப்புகளை முதலாளித்துவ கூட்டுப்பங்கு நிறுவனங்களாக மாற்றின.
சிறு உடைமையாளர்களை அடித்து அழிப்பது, அணைத்து அழிப்பது  என்ற இரு வழிமுறைகளில், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தது. சிறு, குறு விவசாயிகள் தனித் தனியே சிதறி இருப்பதால், சந்தையில் அவர்களால் போட்டியிட இயலவில்லை என்றும் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாக மாற்றுவதன் மூலம் போட்டியிடும் திறனை அவர்களுக்கு உருவாக்குவதாகவும் இந்த அமைப்புகளுக்கு வடிவம் கொடுத்திருக்கும் உலக முதலாளித்துவ நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த வகையில் 2003 -ல் வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம். 1956 -ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கம்பெனிகள் சட்டத்தின் பிரிவு 581-இல் ஒரு திருத்தம் செய்ததன் மூலம் இந்த சங்கங்கள் கம்பெனிகளாக அங்கீகரிக்கப்பட்டன. உற்பத்தி, கொள்முதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் தொடங்கி, பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்துகொள்வது வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தக் கம்பெனிகள் ஈடுபடலாம் என்று இச்சட்டம் அங்கீகரித்தது.
நபார்டு வங்கியின் பரிந்துரையின் பேரில் அமலாகிவரும் இத்திட்டத்தின்படி, முதலில் கிராம அளவில் 15, 20 சிறு  குறு விவசாயிகளை இணைத்து விவசாயிகள் விருப்பக் குழுக்களை (INTREST GROUPS) உருவாக்குவது, இதில் முறையாக இயங்கும் குழுக்களை இணைத்து 1,000 விவசாயிகளைக் கொண்ட ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கமாக (FPO) அமைக்கப்படும் என்கிறார்கள்.
ஏற்கெனவே இது போல கரும்பு, தென்னை, மஞ்சள், வாழை விவசாயிகள் தனித்தனிச் சங்கங்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில் தனித்து செயல்படுமளவுக்குத் தகுதி, திறமையைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ளும் சங்கம், எதிர்காலத்தில் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியாக (Farmer producer company – FPC) செயல்படுத்தப்படும் என்றும் கூறுகிறது, நபார்டு வங்கி.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பின்னணி
கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து அமலாகிவரும் இத்திட்டத்தை தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்பது சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பு (SMALL FARMERS AGRI & BUSINESS CONSORTIUM) என்ற நிறுவனம்.
விவசாயிகள் பெயரில் இயங்கும் இந்த நிறுவனத்தில் விவசாயிகள் யாரும் எந்தப் பொறுப்பிலும் கிடையாது. முழுக்க ஓய்வு பெற்ற மத்திய வேளாண்துறை மற்றும் நபார்டு வங்கியின் பல்வேறு உயர் அதிகாரிகள்தான் இதன் தலைமை நிர்வாகிகளாக உள்ளனர். மத்திய வேளாண்மைத் துறையில் பதிவுபெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனமாக இது செயல்படுகிறது. மேலும், வங்கியல்லாத நிதி நிறுவனமாகவும் ரிசர்வ் வங்கியால் இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
SFAC  நேரடியாக FPO -வை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை. மாறாக, இந்தியாவில் செயல்பட்டுவரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அடியாட்களான 21 சமூகக் குழுக்கள் மற்றும் ஆதார நிறுவனங்கள் (resource institute) என்ற பெயரிலான நூற்றுக் கணக்கான தன்னார்வக் குழுக்களை இப்பணியில் இறக்கிவிட்டு, இவற்றைக் கண்காணித்து இயக்கும் வேலையை மட்டுமே செய்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருசில ஆதார நிறுவனங்களை SFAC நியமித்துள்ளது. இந்த ஆதார நிறுவனங்கள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைப்பதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட வட்டாரத்தின் விவசாய வளம், பயிராகும் முக்கிய விளைபொருள்கள், அதன் சந்தை நிலவரம், பொதுவான மக்களின் கலாச்சாரம் மற்றும் மனநிலை, அரசியல் கட்சிகளின் செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வுசெய்து அறிக்கை தயாரிக்கும். இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்படும்.
ஆய்வில் பரிந்துரைக்கப்படும் பயிர்களுக்குத்தான் உற்பத்தியாளர் சங்கத்தில் முன்னுரிமை கொடுக்கப்படும். இதற்கான நவீன தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு, சந்தைப்படுத்துவது ஆகியவை குறித்தும், சங்கத்தை சுயமாக நிர்வகிப்பது குறித்தும் இந்த ஆதார நிறுவனங்களே விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கின்றன.
எதற்கு இந்த திடீர் கரிசனம்?
தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் தொடங்கிய காலத்திலிருந்து விவசாயத்தைப் புறக்கணித்து வரும் அரசுக்கு ஏன் இந்த திடீர் கரிசனம்?
”வேளாண்மைத்துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது, இதற்கான விவசாயிகளின் அங்கீகாரத்தை உறுதி செய்வது ஆகியவற்றின் மூலம் இந்திய வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவது”, ”தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விவசாயிகள் இணைந்து செயல்படுவதற்கான தொழில்நுட்ப உறவுகளை ஏற்படுத்துவது” என்று தங்களின் நோக்கத்தைக் கூறுகிறது SFAC –  என்ற சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பின் இணையத்தளம்.
விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சிறு, குறு விவசாயிகளும் கூடத் தனியார்தான். இந்தத் தனியார்களின் முதலீட்டை அதிகரிப்பதற்கு உதவ மறுக்கும் அரசு, கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிப்பதையும், அதற்கு விவசாயிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதையும் தான் இவ்வாறு குறிப்பிடுகிறது.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் என்பது ஒரு கம்பெனியாக பதிவு செய்யப்படுவதால், இயல்பாகவே இதில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தான் தலைமை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர். பிற சிறு விவசாயிகள் அனைவரும் கம்பெனியின் பங்குதாரர்களாக மட்டுமே இருப்பர்.  என்ன பயிரிடுவது, என்ன விலைக்கு விற்பது ஆகியவற்றை FPO -வின் தலைமை நிர்வாகிகளும், இவர்களுக்கு நிர்வாக ஆலோசகராக உள்ள ஆதார நிறுவனத்தின் பிரதிநிதிகளும்தான் முடிவு செய்வார்கள். இது சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட்டுகளின் நோக்கத்துக்கு ஏற்பவே இருக்கும்.
விளைபொருளின் விலையையும் ஒப்பந்தம் செய்திருக்கும் கார்பரேட்டுகள் தான் தீர்மானிப்பார்கள். இந்த வர்த்தகச் சந்தையில் தலையிடுவதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, ”குறைந்தபட்ச விலை”, ”விலை நிர்ணயம்” என்று விவசாயிகள் அரசிடம் கேட்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்த சொற்களை உச்சரிப்பதே அங்கு சாத்தியமில்லை.
மேலும், உரம், மருந்து மற்றும் வேளாண் கருவி வியாபாரம், இந்திய உணவுக் கழகத்திற்கு இணையாக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வது, அதைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பது, சங்க உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்து வசூலிப்பது ஆகிய நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும் என்று மத்திய வேளாண்துறை வெளியிட்டுள்ள FPO-க்கான வழிகாட்டு நெறிமுறை அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது, வேளாண் சந்தையின் மீது இதுவரை இருந்துவந்த பெயரளவிலான கட்டுப்பாடு மற்றும் விவசாயிகள்பால் அரசுக்கு இருந்த கடப்பாடு ஆகியவற்றை முழுமையாகக் கைவிடுவதற்கும், விவசாயிகளை கார்ப்பரேட் முதலைகளின் வாய்க்கு தின்னக் கொடுப்பதற்கும் அரசு செய்து வரும் பல ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று.
இதுவரை 25 மாநிலங்களில் மொத்தம்  975 FPO -க்கள் அமைக்கப்பட்டுள்ளன. (இதில் SFAC – நேரடியாக இயக்குவது மட்டும் 636, பிற நிறுவனங்கள் மூலம் இயங்குவது 339) சுமார் 10 லட்சம் விவசாயிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 51 FPO -க்கள் இயங்குகிறது. பசுமைப் புரட்சியின் பிதாமகன் சி.சுப்ரமணியம் உருவாக்கிய நேசனல் அக்ரோ பவுண்டேசன் உட்பட 11 நிறுவனங்கள் தமிழகத்தில் FPO அமைப்பதற்கான ஆதார நிறுவனங்களாகச் செயல்பட்டு வருகின்றன.

ஈஷா யோகா மையத்தில் நடைபெரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (கோப்புப் படம்)
2012 -ஆம் ஆண்டில் கோவை அருகில் உள்ள தொண்டாமுத்தூரில் ஜக்கி வாசுதேவின் ஈஷா பவுண்டேசன் அமைப்பு தான், தென்னை விவசாயிகள் மத்தியில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கியிருக்கிறது.
2017 – 18 -ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்தும் பொருட்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக  தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள 81.18 லட்சம் விவசாயிகளில் சுமார் 92% பேர் சிறு, குறு விவசாயிகள் என்றும்,  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 40 லட்சம் விவசாயிகளை இந்த அமைப்பில் இணைக்கவிருப்பதாகவும் அரசு அறிவிப்பு கூறுகிறது.
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பல்வேறு வழிகளில் கள்ள உறவு வைத்துள்ள ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், சமூகக் குழுக்களால் இயக்கப்படும் SFAC – நிறுவனம், மத்திய வேளாண்துறையின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் துணை நிறுவனமாகவே செயல்படுகிறது. FPO -வைப் போலவே e-NAM – எனும் தேசிய வேளாண் மின்னணுச் சந்தைத் திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பையும் SFAC -க்கே கொடுத்துள்ளது மத்திய அரசு.
தேசிய வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை (e-NAM)
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்பதைப் போல, தேசிய வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தையை ஏற்படுத்துவது என்பதும் மோடியின் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை
”மதுரை, ஒட்டன்சத்திரம், கோயம்பேடு போன்று நாடு முழுவதும் உள்ள முக்கிய வேளாண் சந்தைகளின் தினசரி விலை நிலவரம், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள சரக்குகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை மின்னணு விவரங்களாகத் திரட்டுவது, இதன் மூலம் எந்த மாநிலத்திலிருக்கும் ஒரு வர்த்தகரும், விவசாயியும் நாடு முழுவதுமுள்ள விலை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட்ட 25 விளை பொருட்களுக்கு இலாபகரமான விலையைப் பெற பேரம் பேச முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்கலாம்” என்று மத்திய வேளாண்துறை கூறுகிறது.
வணிகர்கள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் கொள்முதல் நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற, தாராள லைசென்சு வழங்குவது, வேளாண் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தர நிர்ணயம் மற்றும் ஏல விதிமுறைகளை உருவாக்குவது, அரசின் வேளாண் விற்பனைக் கமிட்டி(APMC) -யின் செயல்பாட்டு வரம்பைக் கட்டுப்படுத்துவது, கொள்முதல் செய்யும் இடத்தில் மட்டுமே வரி விதிப்பது (single point levy), நாடு முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே லைசென்ஸ் வழங்குவது ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கித் தான் இந்த வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் மற்றும் கார்ப்பரேட் வேளாண் நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ளூரளவில் செயல்படும் சந்தைகளும், இடைத்தரகர்களும் பெரும் தடையாக உள்ளனர். தங்களுக்கு நெருக்கமாகவும், ஏற்கெனவே அறிமுகமாகமானவர்களாகவும் இருப்பதால் உள்ளூர் தரகர் மற்றும் வியாபாரிகளையே விவசாயிகள் நம்பிக்கையான நபர்களாக பார்க்கின்றனர். இந்த சந்தை முறைக்கு அப்பாற்பட்ட அந்நிய நிறுவனங்களால், விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை.
எனவே, உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் விடுபடவேண்டுமானால், நேரடியாக தேசிய சந்தையை அணுக வேண்டும் என்றும், அங்கே ஒரு பொன்னுலகம் காத்திருப்பதாகவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது மோடி அரசு. ஒரு தேசம்  ஒரு வரி, ஒரு தேசம்  ஒரு கல்வி, ஒரு தேசம்  ஒரு பண்பாடு என்ற வரிசையில் வருகிறது ஒரு தேசம் ஒரு சந்தை என்ற இந்த ஏற்பாடு. உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களின் சுரண்டலை ஒழிப்பது என்ற பெயரில் உள்ளூர் அளவிலும், மாநில அளவிலும் நிலவுகின்ற பொருளாதாரத்தை முற்றிலுமாக வேரறுப்பதும், இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக் கொள்ளைக்கு வேளாண் சந்தைகளைத் திறந்து விடுவதுமே மின்னணு வர்த்தகச் சந்தை முறையின் நோக்கம்.
விவசாய விளைபொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு e-NAM அவசியம் என்று இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் அருண் ஜெட்லி கூறியிருப்பதும்,FICCI மற்றும் CII போன்ற தரகு முதலாளிகளின் சங்கங்கள், வேளாண் விற்பனைக் கமிட்டிகளை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் e-NAM -ஐ கொண்டு வர வேண்டும் என்று கோரி வருவதும் இதற்கான நிரூபணங்கள்.
அதனால் தான் கார்ப்பரேட் காவலனான மோடி, 250-ஆக உள்ள மின்னணு வேளாண் சந்தையை நடப்பாண்டில் (2017 – 18)  585-ஆக உயர்த்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முன்மாதிரி ! விவசாயிகளுக்குச் சவக்குழி !
இதுவெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது கர்நாடக மாநிலத்தின் நிலை. அங்கே ராஷ்ட்ரிய இ-மார்க்கெட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (ReMS) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன், கர்நாடகா வேளாண்துறை இணைந்து 2015 -ல் ஒருங்கிணைந்த சந்தை (unified market platform) முறையை கொண்டுவந்துள்ளது.
11,000 கிராமங்கள்,   22 லட்சம் விவசாயிகள், 17,000 கமிசன் ஏஜெண்டுகள்,  32,000 வர்த்தகப் பங்குதாரர்கள்,  157 சந்தைகள் ஆகிய பலத்துடன் ஆண்டுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது, ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனம். இந்த வர்த்தகச் சூதாட்ட நிறுவனம்தான் இன்று, கர்நாடகா மாநிலம் முழுக்க விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற தனியார் சங்கிலித்தொடர் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருகிறது. இந்த கர்நாடகா மாதிரியை நாடு முழுவதும் விரிவாக்கும் நோக்கத்தில் சமீபத்தில் 26 மாநில வேளாண் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்.
ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் போலவே, NeML, ECO e MARKET, FRESH e MARKET, NCDFL E MARKET என்று  பல பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தனித்தனியே FPO -க்களை உருவாக்கிக் கொண்டு கார்ப்பரேட் சேவையில் வரிசை கட்டி நிற்கின்றன. இவர்களுக்கான புரவலனாகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் ம.பி., மகாராட்டிரா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ”ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தால் வழக்கத்தைவிட கர்நாடக விவசாயிகள் 38% சதவீதம் அதிக லாபம் பெற்றிருப்பதாக” ஒரு பிரச்சாரத்தை கிளப்பி விட்டது நிதி ஆயோக். பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு பரிசீலித்தால், அது வெறும் 13% மட்டுமே என்பது பின்னர் அம்பலமானது.
இ.சாப்பல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நேரடிக் கொள்முதலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்திய மாநிலம் மத்திய பிரதேசம். கமிசன் மண்டிக் காரர்களைவிட கார்ப்பரேட்டுகள் அதிக விலை தருகிறார்கள் என்ற புருடா அங்கே ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. அது மட்டுமல்ல, ம.பி.யில் 21 சந்தைகள் e-NAM உடன் இணைக்கப்பட்டுள்ளன. விலை வீழ்ச்சிக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மாண்ட்சோர் சந்தையும் அவற்றில் ஒன்று.
விளைபொருட்களுக்கு நியாயமான விலை, அரசு கொள்முதல் என்பதுதான் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை. 25 பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை என்று ஒன்றை அரசு நிர்ணயம் செய்தாலும், அரிசி, கோதுமை ஆகிய இரண்டை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இது நாடுமுழுவதும் நடக்கும் விவசாய கொள்முதலில் வெறும் 6% மட்டுமே. மீதமுள்ள பொருட்களை படுபாதாள விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தாலும், அதனைத் தடுக்கவோ தண்டிக்கவோ மத்திய மாநில அரசுகள் சட்டம் எதுவும் இயற்றவில்லை.
தேசிய மின்னணு சந்தையில் குறைந்தபட்ச விலைக்கு கீழே யாரும் விலை கேட்கக் கூடாது என்ற விதியெதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சுதந்திர சந்தைக்கு எதிரானது என்பதால் குறைந்தபட்ச விலை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.
அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் நவீன வேளாண் முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலமைகளால் பெரும்பான்மையான சிறு விவசாயிகளின் சிறுவீத உற்பத்தி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதை FPO என்ற பெயரில் ஒன்றாகத் திரட்டி, சுதந்திரச் சந்தை முறைக்குள் கொண்டுவருவதன் மூலம், சிறு குறு விவசாயிகளை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவது என்பதற்காக தந்திர வலை விரிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியவை சிறு, குறு விவசாயிகளைக் கவ்விப்பிடிக்கும் கிடுக்கியின் இரண்டு முனைகள். வாழ வழிகேட்டு மன்றாடும் விவசாயிகளை இந்தக் கிடுக்கியால் பிடித்து, கார்ப்பரேட் முதலைகளுக்கு தின்னக் கொடுக்கிறது மோடி அரசு.
 -மாறன்
-புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

கருத்துகள் இல்லை: