வியாழன், 20 ஜூலை, 2017

இறந்தவர் உயிர் பிழைத்த அதிசயம்! தருமபுரி மாவட்டத்தின் மலைவாழ் பகுதி

மின்னம்பலம் : தருமபுரி மாவட்டத்தின் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த குக்கிராமத்தில் இறந்தவர், மீண்டும் உயிர் பிழைத்து எழுந்த சம்பவம் கிராம மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகில், மேட்டூர் அணையும் தென் பென்ணையாறும் ஒன்றுசேரும் பகுதியில், அடர்த்தியான காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது தின்ன பெல்லூர் என்ற கிராமம். இங்கு வசிப்பவர்களுக்குச் சுகாதாரம் குறித்து அதிக விழிப்பு உணர்வுகள் இல்லை. நாட்டு வைத்தியத்தை நம்பிதான் தலைமுறை, தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
தின்ன பெல்லூரைச் சேர்ந்தவரான அய்யன்துரை லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மீனா (வயது 37). இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மீனாவுக்கு அடிக்கடி மயக்கம் வந்துள்ளது. ஆனால், அதற்கு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பார்க்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்கள். அதையடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி மீனா மயக்கத்தில் கீழே தடுமாறி விழுந்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் என்னவென்று பார்க்கும்போது, பேச்சு, மூச்சு இல்லாததால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ந்து, அவரது வீட்டில் பந்தல் போடப்பட்டு ஃபீரிசர் பாக்ஸ் வரவழைக்கப்பட்டு இறுதிச் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் ஃபீரிசர் பாக்ஸில் இருந்த மீனாவின் உடல் அதிக குளிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது கை அசைந்துள்ளதை உறவினர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக ஃபீரிசர் பாக்ஸ் பெட்டியைத் திறந்து, மீனாவின் உடலை வெளியே எடுத்து அருகில் உள்ள எரியூர் ஆரம்ப சுகாதரத்துறை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே, சிகிச்சை செய்வதற்குப் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில், ‘தருமபுரி மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று அவர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், 108 ஆம்புலன்ஸில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு, மீனாவுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு 18ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
மலைவாழ் மக்களுக்குப் போதிய விழிப்பு உணர்வு இல்லாததன் காரணமாகவே இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். எது, எப்படியோ இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்ததால் மீனா மறுபிறவி எடுத்துள்ளதாகக் கிராம மக்களும், உறவினர்களும் பெருநிம்மதியடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: